அந்தரங்க இடத்தில் இரு நபர்கள் சம்மதத்துடன் நடக்கிற ஓரினச்சேர்க்கை குற்றம் ஆகாது என்ற ஐகோர்ட் தீர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதிட்டது. இந்திய நாட்டில் ஓரினச்சேர்க்கை குற்றம் என்று இந்திய தண்டனைச்சட்டத்தின் பிரிவு 377 கூறுகிறது. இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கவும் சட்டம் வகை செய்துள்ளது. ஆனால், "ஒரு அந்தரங்க இடத்தில் இரு நபர்கள் சம்மதித்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் அது குற்றம் அல்ல. ஓரினச்சேர்க்கை குற்றம் என கூறுகிற இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 ல் உரிய திருத்தம் செய்யப்பட வேண்டும்'' என்று டெல்லி ஐகோர்ட்டு கடந்த 2009 ம் ஆண்டு ஒரு தீர்ப்பினை வழங்கியது. இந்தத் தீர்ப்பு பலத்த சர்ச்சைக்கு வழிவகுத்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓரினச்சேர்க்கைக்கு எதிரான பல்வேறு அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்துள்ளன. இந்த அப்பீல் வழக்குகள் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு எதிரானதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியது நினைவுகூறத்தக்கது. இந்த நிலையில், அப்பீல் வழக்குகள் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாய் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.பி.மல்கோத்ரா ஆஜராகி வாதாடியதாவது:
இந்திய சமூகம் பிற நாடுகளிலிருந்து மாறுபட்டதாகும். ஓரினச்சேர்க்கை என்பது மிகவும் ஒழுக்கக்கேடானது. இது சமூக ஒழுங்குக்கும் எதிரானது. இத்தகைய செயல்கள் மூலம் எய்ட்ஸ் உள்ளிட்ட (பாலியல்) நோய்கள் பரவுவதற்கும் வாய்ப்பு உண்டு.நமது அரசியல் சட்டம் மாறுபட்டது. நமது ஒழுக்கம் மற்றும் சமூக மதிப்பீடுகளும் பிற நாடுகளில் இருந்து வேறுபட்டவை. எனவே வெளிநாடுகளில் நடப்பதை இங்கு பின்பற்ற முடியாது. ஓரினச் சேர்க்கையை நமது சமூகம் அங்கீகரிக்கவில்லை என்பதே அது குற்றம் என்று கூறுவதற்கு காரணம் ஆகிறது. இந்திய சமூகம் ஓரினச்சேர்க்கையை ஏற்றுக்கொள்ளாத நிலையில், சமூகத்திலிருந்து சட்டம் தனியே இயங்க முடியாது. எனவே (இருநபர் சம்மதத்துடனான) ஓரினச்சேர்க்கை குற்றம் அல்ல என்ற ஐகோர்ட்டு தீர்ப்பினை ஏற்க இயலாது. இவ்வாறு அவர் வாதிட்டார்.
No comments:
Post a Comment