|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 March, 2012

அரசியல் சித்து விளையாட்டில் முல்லைப் பெரியாறு விவகாரம் ஏன் இவ்வளவு தூரம்?

 கேரள மாநிலம் பிரவம் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தல் உம்மன் சாண்டிக்கும் அச்சுதானந்தனுக்குமான நேரடிப் போட்டி என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள். மார்ச் மாதம் 17ம் தேதி பிரவம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கேரள மாநிலம் கொச்சிக்கு அருகில் உள்ள இந்தத் தொகுதியில் போட்டியிடும் பரம வைரியான இரு வேட்பாளர்களுமே ஜேக்கப் என்னும் கடைசிப் பெயர் கொண்டவர்களே. இருந்தாலும், இந்தப் போட்டி இவர்களுக்கு இடையிலானது என்பதை விட, உம்மன் சாண்டிக்கும் அச்சுதானந்தனுக்கும் இடையிலானது என்றே கருதுகிறார்கள்.



பிரவம் தொகுதியில் நின்று வென்ற டி.எம். ஜேக்கப், உணவு மற்றும் வழங்கல் துறை  அமைச்சராக இருந்தவர். கேரள காங்கிரஸ் (ஜேக்கப்) உறுப்பினராக சட்டமன்றத்தில் இருந்தவர். இந்தக் கட்சி, ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் அங்கமான கட்சி. இவரின் மகன் அனூப் ஜேக்கப் (34), தன் தந்தையின் பரம வைரியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போட்டி வேட்பாளர் எம்.ஜே.ஜேக்கப்புடன் நேரடியாக மோதுகிறார். கடந்த 2006ம் ஆண்டுத் தேர்தலில், மூன்று தலைமுறைகளைக் கண்ட டி.எம்.ஜேக்கப் முதல் முறையாக எம்.ஜே.ஜேக்கப்பிடம் தோற்றார். அதன்பின்னர், 2011 தேர்தலில் அவர் எம்.ஜே.ஜேக்கப்பை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், முதல்வர் உம்மன் சாண்டி இந்த இடைத்தேர்தல் குறித்துக் கூறியபோது, இது தனது 9 மாத அரசாட்சி மீது மக்கள் அளிக்கும் தீர்ப்பு என்றார். கடந்த மே மாதம் தொடங்கி, இன்று வரை ஆட்சி நடத்தி வரும் அரசுக்கு மக்கள் எந்த வகையில் திருப்திப் பட்டிருக்கிறார்கள் என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல் இது. இதை ஒரு சவாலாகவே நான் ஏற்கிறேன் என்றார். 140 உறுப்பினர் சட்டமன்றத்தில், ஆளும் கட்சி பெரும்பான்மை என்ற பாதி எண்ணிக்கைக்கு ஓரிரு உறுப்பினர் ஆதரவில் அரசை நடத்திச் சென்றுகொண்டுள்ளார். அதுபோல் மார்க்சிஸ்டின் அச்சுதானந்தனனின் ஜாலம் ஒன்றும் பிரவம் தேர்தலில் எடுபடாது என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி யுடிஎஃப்  கருதுகிறது. நிலம் தாரைவார்த்த வழக்கில் அவர் சிக்குண்டது, மாநில அரசின் சார்பில் இயங்கும் ஒரு ஐடி அகாதெமியில் அவரது மகன் அருண் குமாரை இயக்குநராக நியமித்தது (இந்த வழக்கும் இப்போது விசாரணையில் உள்ளது) உள்ளிட்ட சில விவகாரங்கள் காங்கிரஸின் கையில் துருப்புச் சீட்டாக உள்ளன.


ஆனால் அச்சுதானந்தனோ, இப்போது போட்டியிடும் ஜேக்கப்பின் மகன் அனூப்புக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான்... நீண்டகாலத்துக்கு முன்னேபேயே சாண்டியை மிகவும் மோசமான ஊழல்வாதி என்று ஜேக்கப் வலியுறுத்திச் சொன்னதையே இப்போதும் சொல்கிறேன். இப்போதும் காட்சி எதுவும் மாறிவிடவில்லை.... என்று பிரவம் தொகுதியில் நடந்த அரசியல் பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். கடந்த 2011 தேர்தலில் டி.எம்.ஜேக்கப் 157 ஓட்டுகள் என்ற நூலிழை வித்தியாசத்தில்தான் கம்யூனிஸ்டுகளிடம் இருந்து தொகுதியைத் தட்டிப் பறித்தார். எனவே, இந்த இடைத்தேர்தலில் பிரவம் தொகுதி தங்களுக்குத்தான் என்று கம்யூனிஸ்டுகள் உறுதியாக நம்புகிறார்கள். இருப்பினும், மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா, இதை மறுக்கவில்லை. ஆயினும், முந்தைய அச்சுதானந்தன் அரசுக்கு, அண்மைக்கால 9 மாத சாண்டி அரசுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை மக்கள் உணர இது ஒரு வாய்ப்பு என்கிறார். ஏ.கே.அந்தோனிக்கு இருக்கும் மவுசை வைத்து, பிரவம் இடைத்தேர்தலில் தங்கள் தரப்புக்கு அறுவடை செய்ய காங்கிரஸ் தீவிரமாக வரிந்து கட்டுகிறது. காரணம், அனூப் ஜேக்கப்பின் தந்தை, ஏ.கே.அந்தோனியின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், இடதுசாரிகளின் தயவில் உள்ளவரும், பிரவம் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் மதசார்பற்ற ஜனதா தள சட்டமன்ற உறுப்பினருமான ஜோஸ் தெட்டாயில், இந்தத் தேர்தல் வெறும் ஒரு அமைச்சரை தேர்ந்தெடுக்கும் அளவுக்கு முக்கியமான தேர்தல் மட்டுமல்ல, ஒரு புதிய அரசையே தேர்ந்தெடுக்கும் அளவுக்கு முக்கியமான தேர்தல் என்கிறார். தமிழக கேரள மாநிலங்களில் பெரும் புகைச்சலைக் கிளப்பிய முல்லைப் பெரியாறு விவகாரம் ஏன் இவ்வளவு தூரம் அரசியல் சித்து விளையாடல்களால் மிகப் பெரும் விவகாரமாக்கப்படுகிறது என்பது, இந்த இடைத்தேர்தல் பிரசாரங்களின்போதே தெரிகிறது. இந்த ஒரு தொகுதியின் வெற்றி, ஆளும் ஆட்சியின் போக்கை மாற்றுமா? அதற்கு எந்த விதத்தில் மக்களின் உணர்வுகளைத் தூண்டி விடும் போக்கு வெற்றி பெறும் என்பது மார்ச் 17ம் தேதி வாக்குப் பதிவுக்குப் பின் தெரியவரும்!   
மறக்கமுடியுமா? 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...