கொத்து கொத்தாக உயிர்களைப் பலியெடுக்கும் கிளஸ்டர் வகை குண்டுகளைத்தான் இலங்கை ராணுவம் இறுதிப் போரில் பயன்படுத்தியதற்கான ஆதாரங்களை ஐக்கிய நாடுகள் சபையின் கண்ணிவெடி அகற்றும் பிரிவு கைப்பற்றியுள்ளது.இலங்கையின் வடக்கில் புதுக்குடியிருப்பு பகுதியில் கிளஸ்டர் வகை குண்டுகளின் வெடிக்காத பகுதிகள் கிடைத்துள்ளதாக ஐ.நா. கண்ண்வெடி அகற்றும் பிரிவைச் சேர்ந்த அலன் போஸ்டன் தெரிவித்துள்ளார்.தாம் கிளஸ்டர் குண்டின் பகுதிகளைக் கண்டுபிடித்தது தொடர்பாக சர்வதேச ஊடகங்களுக்கு அலன் போஸ்டன் மின் அஞ்சல் மூலம் தகவலையும் தெரிவித்துள்ளார்.இத்தகைய கொத்துக் குண்டுகளை பயன்படுத்தி பொதுமக்களைக் கொல்வது என்பது சர்வதேச சட்டவிதிகளின் படி குற்றமாகும்.
கண்டுபிடித்தது எப்படி? புதுக்குடியிருப்பு பகுதியில் வீடு ஒன்றில் குவித்து வைக்கப்பட்ட உலோகங்களை சிறுவன் ஒருவன் பிரிக்க முயன்றான். அப்போது அது வெடித்து சிறுவன் உயிரிழந்தான். அவனது சகோதரி படுகாயமடைந்தார்.இச்சம்பவம் தொடர்பான புகைப்படங்களை அலன் போஸ்டன் ஆராய்ந்த போது அவை கிளஸ்டர் குண்டுகள்தான் என உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அந்த வீட்டில் இருந்த கிளஸ்டர் குண்டின் வெடிக்காத பகுதிகளையும் அவர் கைப்பற்றினார்.
ஐ.நா. சந்தேகம் இலங்கை அரசால் 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட மருத்துவமனைகள் மீது கிளஸ்டர் குண்டுகளை இலங்கை ராணுவம் வீசியது என்று ஐக்கிய நாடுகள் சபை அப்போது குற்றம்சாட்டி இருந்தது. ஆனால் இலங்கை அரசு இதனை நிராகரித்திருந்தது.அதேபோல் இலங்கை போர்க் குற்றங்கள் தொடர்பான ஐ.நா. வல்லுநர் குழுவும் போரில் படுகாயமடைந்தோரை பற்றி குறிப்பிடுகையில் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் காயமானது கிளஸ்டர் வகை குண்டுகளால்தான் என்றும் குறிப்பிட்டிருந்தது.இந்நிலையில் கிளஸ்டர் குண்டின் வெடிக்காத பகுதிகளே கைப்பற்றப்பட்டிருப்பது இலங்கைக்கு பெரும் நெருக்கடியையே கொடுக்கக் கூடும். வழக்கம் போல இலங்கை ராணுவம் தற்போதைய ஆதாரங்களும் பொய்யானது என்று கூறியிருப்பதுடன் விசாரணை நடத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment