|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 April, 2012

விட்டுக்கொடுங்கள்...

கூட்டுக்குடும்பம் என்பது இன்றைக்கு அறிதாகி வருகிறது. இதற்கு காரணம் நீ பெரியவனா? நான் பெரியவனா என்ற ஈகோதான். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதலும், விட்டுக்கொடுத்தலும் இருந்தால் இல்லறத்தில் ஒற்றுமை தழைத்தோங்கும் என்கின்றனர் முன்னோர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

புன்னகை முகம் உலகம் என்பது கண்ணாடி போன்றது. நம்முடைய முகத்தை அப்படியே பிரதிபலிக்கும். நாம் சிரித்தால் நம்மை சுற்றி உள்ளவர்கள் சிரிப்பார்கள். நாம் கடுமையாக நடந்து கொண்டால் அவர்களும் கடுமையாக நடந்து கொள்வார்கள். எனவே இன்முகத்துடன் முன் மாதிரியாக நடந்து கொள்ளுங்கள்.

குறை கூற வேண்டாம் கூட்டுக்குடும்பத்தின் ஒற்றுமைக்கு உலை வைக்கும் ஒரு விசயம் ஒருவரைப் பற்றி மற்றொருவரிடம் குறை கூறுவது. எனவே கூறுவதை விட நடந்த தவறை உரியவரிடமே எடுத்துக் கூறலாம். சின்ன விசயங்களுக்கு கூட பாராட்டுங்கள் உங்கள் மேல் மதிப்பு அதிகரிக்கும். அதேபோல் எந்த விசயத்திற்கும் நன்றி தெரிவியுங்கள்.

உதவுங்கள் நல்லது எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க நியாயமில்லை. எனவே பிறருக்கு உதவுங்கள். அதேபோல் பிறருக்கு விட்டுக் கொடுப்பது. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது கூட்டுக்குடும்பத்தில் அவசியமான ஒன்று. தற்பெருமை பேசாமல் இருப்பது. தெளிவாகப் பேசுவது. நேர்மையாய் இருப்பது. பிறர் மனதை புண்படுத்தாமல் இருப்பதும் அவசியம்.

உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் கூட்டுக்குடும்பத்தில் பொதுவாக நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள். உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள். பிறர் குறைகளை அலட்சியப்படுத்துங்கள். இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள். ஒரு பொழுதாவது ஒன்றாக அமர்ந்து உணவருந்துங்கள்.

தம்பதியர் ஒற்றுமை கூட்டுக்குடும்பத்தில் தம்பதியர்கள் கலந்து பேச அதிக நேரம் கிடைக்காதுதான். எனவே இரவில் உறங்குவதற்கு முன் கணவன் மனைவி இருவரும் ஒருவரையொருவர் பார்க்கும் வண்ணம் எதிர் எதிரே படுக்கையிலோ அல்லாது தர்பை, மாம்பலகை போன்ற ஆசனங்களிலோ அமர்ந்து கொள்ள வேண்டும். எவ்வித உரையாடலும் இன்றி அமைதியாக ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். குறைந்தது ஒரு மணி நேரமேனும் இந்த இல்லற பூஜையை நிகழ்த்தி வந்தால் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை பெருக ஏதுவாகும். குடும்ப ஒற்றுமையை பேணிக் காக்கும் அற்புத வழிபாடு என்கின்றனர் முன்னோர்கள்.

யோசித்து பேசுங்கள் எந்த ஒரு விசயத்தை செய்வதற்கு முன்னர் இருவரும் கலந்து ஆலோசியுங்கள். வார்த்தைகளை பேசிவிட்டு யோசிப்பதை விட எந்த ஒரு வார்த்தையும் பேசும் முன் யோசித்து பேசுங்கள். சின்னச் சின்ன விசயங்களுக்கு உணர்ச்சிவசப்பட்டு பேசுவது தேவையற்றது. எனவே உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது தம்பதியரிடையே பிரச்சினைகள் ஏற்படுதை தவிர்க்கும். தெரியாமல் வார்த்தைகள் விழுந்துவிட்டால் உடனே மன்னிப்பு கேட்க தயங்கவேண்டாம். நாம் பேசும் விசயம் எதற்காக என்பதை இருவருமே உணர்ந்து கொண்டால் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கலாம். சண்டை எனில் தனிமையில் சண்டை போடுங்கள். தவறு உங்களுடையது எனில் தயங்காமல் காலில் விழுங்கள். தம்பதியரிடையே மன்னிப்பு கேட்பதும், மன்னிப்பதும் ஒற்றுமையை அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...