"தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், தை முதல் நாளை, தமிழ் புத்தாண்டாக அறிவிப்போம்' சென்னையில் நேற்று தி.மு.க., சார்பில், தமிழக அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதி பேசியதாவது:தமிழக முதல்வராக இருப்பவர் எப்படிப்பட்டவர், எத்தகைய வாய்மை கொண்டவர் என்பதையெல்லாம் இக்கூட்டத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன். சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா பேசும்பேது, பெண்ணினத்திற்கு பெருமை சேர்க்க, பெயருக்கு முன்னால் தாயின் தலைப்பெழுத்தை தான் பயன்படுத்த வேண்டும் என்றார். அப்படியானால் அவருடைய பெயருக்கு முன்னால், "ச' தானே வர வேண்டும், எதற்கு ஜெ., போடுகிறார். ஒருவேளை நான் இப்படி பேசியதற்காக நாளை எப்படி எழுதுவார் எனத் தெரியவில்லை.
தி.மு.க., ஆட்சியில் தை முதல் நாள் தான் தமிழர் புத்தாண்டு என, அறிவித்தோம். ஆட்சி மாறியவுடன் சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்து விழா எடுக்கிறார். அன்று நடந்த விழாவில், தமிழ் மீது யாருக்கெல்லாம் அக்கறை இல்லையோ அவருக்கெல்லாம் விருது கொடுக்கிறார். செம்மொழியான தமிழை அவர் அழிக்க வேண்டும் என, கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார்.மீண்டும் வருவோம்: மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வரும். அப்போது, தை முதல் நாள் தான் தமிழர்களுக்கான புத்தாண்டு என, அறிவிப்போம். திராவிட உணர்வு கொண்ட வேறு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தை முதல் நாளைத் தான் புத்தாண்டாக அறிவிக்கும். இவ்வாறு கருணாநிதி பேசினார்.
No comments:
Post a Comment