ரு மனிதனின் இறப்பை இப்படி பண வரவுடன் ஒப்பிட்டு பார்க்கும் வழக்கம் மக்களிடம் வந்ததற்கு யார் காரணம்? அரசியல்வாதிகளா அல்லது பொதுமக்களா? நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய விஷயம் இது. புதுக்கோட்டை எம்.எல்.ஏ. முத்துக்குமரன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். இந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த சி.பி.ஐ.-க்கு புதுக்கோட்டை தொகுதி கிடைத்தது. தி.மு.க. சார்பில் பெரியண்ணன் அரசு போட்டியிட்டார். கடுமையான போட்டிக்கு இடையிலும் தனது எளிமையான பிரச்சாரம், மக்களிடம் அணுகும் முறை போன்ற காரணங்களால் மக்களிடம் வரவேற்பை பெற்றார் முத்துக்குமரன். பெரிய கட்சிகள் பணத்தை அள்ளித் தெளித்தாலும், தனது எளிமையால் மக்களின் வாக்குகளைப் பெற்று ஜெயித்தார்.
ஜெயித்ததோடு மட்டுமல்லாமல் தான் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் தனது தொகுதி மக்களுக்கு தேவையானதை பெற்றுத்தர முயற்சித்து வந்தார். சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் மக்கள் பிரச்னைகளுக்காக அதிகப்படியான கேள்விகளை கேட்ட உறுப்பினர் என்ற பெருமையை முத்துக்குமரன் பெற்றிருந்தார். இப்படி தனது அரசியல் வாழ்க்கை பிரகாசிக்க ஆரம்பித்த சில மாதங்களிலே அவர் சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என கேள்விப்பட்ட போது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இப்படிப்பட்ட நல்ல மனிதனின் இழப்பு அந்த தொகுதி மக்களுக்கு பேரிழப்பாகும். இவரது இறப்பால் வரப்போகும் இடைத்தேர்தலுக்கு எந்த கட்சிகள் எவ்வளவு கொடுக்கும் என்ற பேச்சுகள் அந்த தொகுதி மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் பரவியுள்ளது.
ஓட்டுக்கு காசு வாங்கும் மக்களின் இந்த மனோபாவத்திற்கு யார் காரணம்? ஆளுங்கட்சி தனது வெற்றியை தக்க வைக்கவும், எதிர்கட்சி தங்களது இருப்பை உறுதிப்படுத்தவும், மற்ற கட்சிகள் தங்கள் வரவை பதிவு செய்யும் தளமாக இடைத்தேர்தலை பார்க்கின்றனர். இதனால் எப்படியும் ஜெயிக்க வேண்டும் என்ற வெறியில் அனைத்து அஸ்திரங்களையும் பயன்படுத்தி வெற்றி பெற போராடுகின்றன. இதில் முக்கிய பங்கு வகிப்பது 'ஓட்டுக்கு பணம்'. எப்படியும் வீட்டுக்கு குறைந்தபட்சம் மூவாயிரம் ரூபாயாவது கிடைத்துவிடும் என்ற கணக்கை போட ஆரம்பித்துவிடுகின்றனர் பொது மக்கள். இதில் யாரை குறை சொல்வது? பணம் கொடுப்பவரையா? பணம் வாங்குபவரையா?
முத்துக்குமரன் இறப்பால் வரும் இடைத்தேர்தலுக்கு கிடைப்பது சில ஆயிரங்கள் தான், ஆனால் அவர் உயிருடன் இருந்தால் தனது தொகுதி மக்களுக்காக எத்தனை ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்களை பெற்றுத் தந்திருப்பார் என்பதை மக்கள் யோசித்து பார்த்தால் புரியும்.இனிமேல் சட்டசபை எம்.எல்.ஏ.-கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் போலிருக்கிறது. தங்கள் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவேண்டும் என்பதற்காக தொகுதி மக்கள் எதையும் செய்வார்களோ என்று பயப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
மாறுமா இந்த கலாச்சாரம்?
No comments:
Post a Comment