ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் அதிரடி துவக்க வீரர் கிறிஸ் கெய்ல், இன்று 26 ரன்களை எடுத்து அவுட்டானார். ஆனால் இன்று 2 சிக்ஸ் அடித்த கிறிஸ் கெய்ல், ஐபிஎல் தொடர்களில் 100 சிக்ஸ்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.ஐபிஎல் 5 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் துவக்க வீரர் கிறிஸ் கெய்ல். மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டனான கிறிஸ் கெய்ல், அதிரடியாக ஆடி ரன்களை குவிப்பதில் வல்லவர். இதிலும் இவர் அடிக்கும் இமாலய சிக்ஸ்கள், ரசிகர்களுக்கு அதிக உற்சாகத்தை அளித்து வருகின்றன.முதல் ஐபிஎல் தொடரில் பங்கேற்காத கிறிஸ் கெய்ல், 2வது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். 2 ஆண்டுகள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடினார். அதன்பிறகு கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு தாவினார்.இதுவரை 4 ஐபிஎல் தொடர்களில் ஆடியுள்ள கிறிஸ் கெய்ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்காக மொத்தம் 38 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இதில் அதிரடியாக ஆடியுள்ள கெய்ல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 26 சிக்ஸ்களும், ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக 74 சிக்ஸ்களும் அடித்துள்ளார். இதன்மூலம் கிறிஸ் கெய்ல் இதுவரை மொத்தம் 101 சிக்ஸ் அடித்துள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் சுழல் பந்துவீச்சாளர் பியூஸ் சாவ்லாவின் பந்துகளில் கிறிஸ் கெய்ல் அதிகபட்சமாக 7 சிக்ஸ்களை அடித்துள்ளார். மேலும் ராகுல் சர்மா, ராஜத் பாட்டியா, சுரேஷ் ரெய்னா உட்பட 45 பந்துவீச்சாளர்களின் பந்துகளில் கிறிஸ் கெய்ல் சிக்ஸ் அடுத்துள்ளார்.மேலும் ஐபிஎல் 5வது தொடரில் அதிக சிக்ஸ்களை அடித்த வீரர்களில் கிறிஸ் கெய்ல் தான் முதலிடத்தில் உள்ளார். இத்தொடரில் இதுவரை 31 சிக்ஸ்களை அடித்துள்ள கெய்ல், அதிக தூரம் கொண்ட சிக்ஸ்(111 மீட்டர்) அடித்தவரும் கூட.கடந்த 2009ம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் சிக்ஸை அடித்த கிறிஸ் கெய்லுக்கு, இன்று அதே அணியுடன் தனது 100வது சிக்ஸை அடித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment