|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 May, 2012

ஆதீன சொத்துகளை கைப்பற்ற தாக்கலானது சட்ட திருத்த மசோதா!


ஆதீனங்களை குறிவைக்கும் வகையில், சமாதி, பிருந்தாவனம் மற்றும் சமய நோக்கத்துக்காக பேணி வரப்படும் பிற நிறுவனங்களையும், அரசு கட்டுப்படுத்தும் வகையில், சட்ட திருத்த மசோதா, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டத்தை, மேலும் திருத்தும் வகையிலான மசோதாவை, சட்டசபையில் அமைச்சர் ஆனந்தன் நேற்று, தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது: இச்சட்டப்படி, சமய நிறுவனம் என்றால், ஒரு மடம், கோவில் அல்லது திட்டவட்டமான அறநிலைக் கொடை என்று பொருள்படும். சமாதி, பிருந்தாவனம் ஆகிய இடங்கள், இச்சட்டத்தின் வகைமுறையில் உள்ளடங்கவில்லை. புகழ் வாய்ந்த குரு, சாது அல்லது புனிதரின் நினைவைப் போற்றும் வகையில், தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள சமாதி, பிருந்தாவனம் ஆகிய இடங்கள், மக்கள் சமய வழிபாடு செய்வதற்கான இடங்களாக வழிபடப்படுகின்றன.

சட்டத்தின் கீழ் இல்லை: இத்தகைய நிறுவனங்கள், சமய நிறுவனங்கள் என்ற தகுதியைப் பெற்றுள்ளன. இந்நிறுவனங்கள் பெரும் எண்ணிக்கையில் பக்தர்களை ஈர்ப்பதோடு, பெருமளவிலான சொத்துகளையும் சொந்தமாக வைத்துள்ளன. ஒரு சிலவற்றைத் தவிர, பெரும்பாலான சமாதிகளும், பிருந்தாவனங்களும், எந்த சட்டத்தின் கீழும் அடங்கியிருக்கவில்லை. எனவே, அந்த நிறுவனங்களை திறம்பட கண்காணிக்க, அவற்றை இந்து சமய அறநிலைக் கொடைகள் துறையின் கீழ் கொண்டு வரும் வகையில், இச்சட்டத்தில், "சமய நிறுவனம்' என்பதன் கீழ், சமாதி, பிருந்தாவனம் ஆகிய இடங்களையும், சமய நோக்கத்துக்காக நிறுவப்படும் அல்லது பேணிவரப்படும் பிற நிறுவனங்களையும் உள்ளடக்கும் வகையில், சட்ட திருத்தத்தைக் கொண்டு வர, அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இம்மசோதா, இன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட உள்ளது.குறி வைத்து...: இந்த மசோதா நிறைவேறினாலும், ஆதீனங்கள் போன்றவற்றின் சொத்துகளை கைப்பற்றுவதில் சிக்கல் இருந்த போதிலும், ஆதீன சொத்துகளையும் குறிவைத்தே, மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சட்டத்தைப் பொறுத்தவரை, கடந்த அ.தி.மு.க., ஆட்சியிலேயே 2004ம் ஆண்டு, இதே திருத்தம் அமல்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து, திருவான்மியூர் பாம்பன் சுவாமி சமாதி நிர்வாகத்தினர், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த பின்னணியில் ஆட்சி மாறிய பின், 2008ல் இச்சட்டத்தை தி.மு.க., அரசு வாபஸ் பெற்றது.

கட்டுக்குள் கொண்டுவர...: தற்போது, பாம்பன் சுவாமிகள் நிர்வாகத்தினர் தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் மனுவாக உள்ளது. இந்த சட்டத் திருத்தத்தை மீண்டும் அமல்படுத்தினால் தான், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கு பிடிக்கும். எனவே தான், இச்சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆதீனங்கள் பற்றி சட்ட மசோதாவில் குறிப்பிடப்படவில்லை என்ற போதிலும், சமாதி, பிருந்தாவனம் மற்றும் இதர சமய நிறுவனங்கள் என்ற வார்த்தை, மசோதாவில் இடம் பெற்றுள்ளது. இதை வைத்து, ஆதீன சொத்துகளையும் அரசு குறி வைத்துள்ளதோ என்ற சந்தேகம், பலருக்கு எழுந்துள்ளது. ஆனால், தமிழக அரசைப் பொறுத்தவரை, திருவான்மியூர் பாம்பன் சுவாமி நிர்வாகத்துக்குச் சொந்தமான இடங்கள் (குறிப்பாக, சென்னை திருவான்மியூரில் கடற்கரையை ஒட்டி பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 3.2 ஏக்கர் நிலம் இந்த நிர்வாகத்தின் வசம் இருப்பதாகக் கூறப்படுகிறது) மற்றும் பழநி முருகன் சிலையை மூலிகையால் வடிவமைத்த பழைய போகர் சமாதிக்குச் சொந்தமான இடங்கள் ஆகியவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, இந்த சட்டத்தை அமல்படுத்துவதாக, ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.சிவன் கோவில் சொத்துகள்: இந்த சட்டப்படி, பழமையான சிவன் கோவில்களுக்குச் சொந்தமான சொத்துகளையும் கைப்பற்ற திட்டமிட்டிருப்பதாக, மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர். அதாவது, சமாதி மீது சிவன் கோவில் அமைக்கப்பட்ட பல கோவில்கள், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இல்லை. அவற்றை இந்த சட்டம் மூலம், தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக, அரசு முயற்சித்திருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். தற்போது, மதுரை ஆதீனம் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த சட்ட மசோதாவை, தமிழக அரசு நேற்று தாக்கல் செய்திருப்பது, புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...