புலிகள் சரணாலயங்களில் வணிகச் சுற்றுலாவுக்கு நீதிமன்றம் கடந்த ஜூலை 24-ம்
தேதி விதித்த இடைக்காலத் தடை உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் விரிவான
பரிந்துரைகளை அரசு அளித்தபிறகு இந்தத் தடை குறித்து மீண்டும் அறிவிக்கலாம் என்றும்
மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திடம் முறையிட்டுள்ளது.
"தடை விதிக்கப் பரிந்துரை கொடுத்தவர்களே நீங்கள்தானே' - என்று நீதிமன்றம்
கேட்டால், "புலிகள் சரணாலயத்தில் வணிகச் சுற்றுலாவை நம்பியுள்ள உள்ளூர் மக்களின்
வாழ்க்கை, வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என்று மாநில அரசுகள் அச்சம் தெரிவிக்கின்றன'
என்று நீதிமன்றத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நீதிமன்றம்
ஏற்கெனவே விதித்த தடையை விலக்கிக்கொள்ளவில்லை.
இந்தியாவில் 17 மாநிலங்களில் 42 புலிகள் சரணாலயங்கள் உள்ளன. ஆனால், புலிகளின்
எண்ணிக்கை 13,000-லிருந்து தற்போது 1,400 ஆக குறைந்துவிட்டது. இந்நிலையில்,
புலிகளைக் காக்க வேண்டும் என்ற இயற்கை ஆர்வலர்களின் குரல் ஒங்கியபோது, வேறு
வழியில்லாமல், 2005-ல் அமைக்கப்பட்ட புலிகள் காப்புப் படையின் பரிந்துரைகளின்
அடிப்படையில்தான், புலிகள் சரணாலயங்களின் புறப்பகுதியில் மட்டுமே வணிக நடவடிக்கைகள்
அமைய வேண்டும் என்றும் மையப் பகுதியில் எந்த வணிக நடவடிக்கைகளும் கூடாது என்றும்
நீதிமன்றம் தடை விதித்தது.
தடைவிதிக்கப்பட்ட நாள் முதலாய், சுற்றுலா நிறுவனங்களும், ஊடகங்களும் இந்தத்
தடைக்கு எதிராக கருத்துருவாக்கம் செய்து வருகின்றன. சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை
குறைந்தால், புலிகளின் எண்ணிக்கையும் குறைந்துவிடும் என்று பீதி கிளப்புகின்றன.
தற்போதைய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில், குறிப்பாக புலிகள் சரணாலயத்திற்குள்
"புலிகள் காணுலா' (டைகர் சபாரி) நடைபெறுவதால்தான் புலிவேட்டையாடுவோர் காட்டுக்குள்
வருவதில்லை. எப்போதும் வனத்துறை அலுவலர்கள் சுற்றுலாப் பயணிகளைக் கண்காணிக்க
காட்டுக்குள் வந்துகொண்டிருக்கின்றனர். புலிகள் சுற்றுலாவுக்குத் தடை விதித்தால்,
அங்கே யாரும் உள்ளே செல்ல மாட்டார்கள். அதன்பிறகு, புலிவேட்டையாடுவோருக்குக்
கொண்டாட்டம்தான். இருக்கின்ற புலிகளையும் கொன்றுவிடுவார்கள். மேலும், வேலைவாய்ப்பை
இழக்கும் உள்ளூர் மக்கள் பணத்துக்காகப் புலிகளைக் கொல்வார்கள். ஆகவே இந்தத் தடையை
நீக்க வேண்டும் என்று சுற்றுலா நிறுவனங்கள் சொல்கின்றன.
வணிகச் சுற்றுலாவுக்குத் தடை விதித்தால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்படுவார்கள்
என்பது உண்மையல்ல.
புலிகள் காப்பக வனப்பகுதிகளில் தங்குமிடங்கள், உணவுக்கூடங்கள், "புலிகள்
காணுலா' ஆகியன அதிக வருவாய் தருவதாக இருக்கிறது. இத்தகைய "புலிகள் காணுலா'
வெளிநாட்டவரை அதிகம் கவர்ந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளால் லாபம் அடைவோர்
உள்ளூர் மக்கள் அல்லர். பெருநிறுவனங்கள்தான் அங்கே தங்குமிடம், உறைவிடம்,
உணவுக்கூடம், "புலிகள் காணுலா' போன்ற அனைத்தையும் நடத்துகின்றன. உள்ளூர்
பழங்குடியினத்தவர்களால் நடத்தப்படுவதில்லை. வெளிநாட்டினரிடம் ஒட்டுமொத்தமாக ஒரு
நாளைக்கு ரூ.40,000 வரை வசூலிக்கிறார்கள். இதில் வனத்துறைக்கு நுழைவுக்கட்டணம்
மூலமாகக் கிடைக்கும் தொகை மிகவும் சொற்பம்.
உள்ளூர் மக்கள் இந்தத் தங்குமிடங்களில், சுற்றுலா ஏற்பாடு நிறுவனங்களில் மிகக்
குறைந்த கூலிக்குப் பணிபுரிகிறார்கள். இந்த வேலையை இழந்தாலும் அவர்கள் வனத்தில்
விளையும் பொருள்களை விற்று கௌரவமாகப் பிழைக்க முடியும் - வனஅதிகாரிகள் தொல்லை தராமல்
இருந்தாலே போதும்.
வேலையில்லாமல் உள்ளூர்வாசிகள் புலிகளைக் கொல்வார்கள் என்பதும் தவறு. அவர்கள்
உயிரைப் பணயம் வைத்து மையப்பகுதியில் வேட்டையாடி, அதை யாரிடம் விற்பார்கள்?
புலிகளைக் கொல்லும்படி உள்ளூர் மக்களை நிர்பந்திப்பதே புலிவேட்டைக்காரர்கள்தானே
ஒழிய ஆதிவாசிகளோ, உள்ளூர் மக்களோ அல்ல.
புலிகள் எண்ணிக்கை பெருக வேண்டுமானால், அவற்றின் இனப்பெருக்கத்துக்கு
அமைதியான சூழல் வேண்டும். சிங்கங்கள்தான் குடும்ப சகிதமாக உலவும். புலிகள்
அப்படியல்ல. அவை தனிமை விரும்பிகள். ஆகவே, தன் இணையைக் காண்பதும் இனப்பெருக்கமும்
அரிதாகின்றன.
"புலிகள் காணுலா' அனுமதிக்கும்போது எப்போதும் ஆள்நடமாட்டமும், வாகன இரைச்சலும்
அவற்றின் இயல்பான தனிமைக்குத் தடையாக அமையும். இனப்பெருக்கம் குறையும். மாறாக,
மையப்பகுதியில் வணிகச் சுற்றுலாவைத் தடை செய்வதன் மூலம் புலிகள் இனப்பெருக்கம்
அதிகம் நடைபெறும். எண்ணிக்கையும் கூடும்.
ஆகவே, சுற்றுலாப் பயணிகள் குறைந்தால், புலிகள் எண்ணிக்கையும் குறையும் என்பது
ஏற்புடைய வாதம் அல்ல.
உலகளாவிய இயற்கை ஆர்வலர்கள் கடந்த சில வருடங்களாகவே, புலிகளின் எண்ணிக்கை
அசுர வேகத்தில் குறைந்துவருவது குறித்து அச்சம் தெரிவிக்கத் தொடங்கிவிட்டனர்.
ஒருகாலத்தில் இந்தியாவின் "பெங்கால் டைகர்ஸ்', மத்தியப் பிரதேச ரேவா பகுதிகள்
மற்றும் ஒடிசா மாநிலத்தில் மட்டுமே காணப்பட்ட வெள்ளைப்புலிகள் விரல் விட்டு எண்ணும்
அளவுக்குக் குறையத் தொடங்கிய பிறகுதான் அரசு விழித்துக் கொண்டது. தடை விதிக்கப்
பரிந்துரை செய்தது. இப்போது திடீரென்று ஏன் பின்வாங்குகிறது என்பதுதான்
அதிர்ச்சியளிக்கிறது.
அழிந்துவரும் புலிகளுக்கு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் காலம் தாழ்த்தி
பாதுகாப்புக் கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் பிற
சுயநல வியாபாரிகளின் நன்மைக்காக அரசு நழுவவிட்டுவிடலாகாது. இந்த ஆட்சியில் ஒரு நல்ல
காரியமாவது நடக்கட்டுமே...!
நன்றி ; தினமணி.
No comments:
Post a Comment