ஏற்கனவே மக்கள் விலைவாசி உயர்வினாலும், ஸ்பெக்ட்ரம்-நிலக்கரி ஊழல்.விவகாரங்களாலும் மத்திய அரசின் பெரும் கோபத்தில் இருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு சில முக்கிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் காங்கிரஸ் அரசு ஏன் டீசல் விலையை உயர்த்தியது?. ஏன் சமையல் கேஸ் சிலிண்டர்கள் மீதான மானியத்தைக் கட்டுப்படுத்தியுள்ளது?.இதற்கான பதில் இந்தியாவில் இல்லை. வெளிநாடுகளில் இருக்கிறது.
குறிப்பாக உலக வங்கி, சர்வதேச பொருளாதார நிதியம் (IMF), ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) மற்றும் Moody's, Standard & Poor's, Fitch போன்ற சர்வதேச பொருளாதார தர மதிப்பீட்டு நிறுவனங்களுக்குப் பயந்தே இந்த விலை உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளதாகத் தெரிகிறது.ஒரு நாட்டின் வரவு-செலவு, வளர்ச்சி விகிதம், கடன் அளவு உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து அந்த நாட்டை தர மதிப்பீடு (rating) செய்கின்றன மேலே சொன்ன அமைப்புகள். இவை ஒரு நாட்டுக்கு நல்ல மார்க் போட்டால், அந்த நாட்டின் மீது சர்வதேச முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை வரும். இதையடுத்து தங்களது முதலீடுகளை அந்த நாட்டில் வந்து கொட்டுவார்கள், நல்ல லாபம் கிடைக்கும் என்ற காரணத்தால்.
மார்க் கம்மியாகக் கிடைத்தால், போட்ட முதலீடுகளையும் வாரிச் சுருட்டி எடுத்துக் கொண்டு ஓடி விடுவார்கள். மேலும் புதிதாக முதலீடு செய்ய யாரும் முன் வரவும் மாட்டார்கள். அதே போல உலக வங்கி, ஐஎம்எப், ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவை புதிய திட்டங்களுக்கு கடனுதவியை வழங்குவதை குறைத்துக் கொள்ளும். இது தான் ரேட்டிங் மற்றும் அதைச் சார்ந்த (தலை)விதி.அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பல முக்கிய நாடுகளைின் பொருளாதாரத்தையே இந்த ரேட்டிங் ஏஜென்சிகளின் மதிப்பீடுகள் புரட்டிப் போட்டிருக்கின்றன.
இந் நிலையில் தான் சமீபத்தில் Standard & Poor's, Fitch ஆகிய இரண்டும் இந்தியாவுக்கு ஒரு எச்சரிக்கையை விட்டன. வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டி வரும் 'பிரிக்ஸ்' (BRICS-Brazil, Russia, India, China and South Africa) நாடுகளில் இந்தியாவில் தான் வருமானத்துக்கும் செலவுக்குமான இடைவெளி மிக அதிகமாக உள்ளது என்று கூறிய இந்த தர மதிப்பீட்டு அமைப்புகள், இதனால் இந்த 5 நாடுகளில் இந்தியாவின் முதலீட்டுத் தர மதிப்பீட்டைக் குறைக்கப் போகிறோம் என்று எச்சரித்தன.மேலும் இந்தியா தனது மானியங்களைக் குறைக்க வேண்டும், இல்லாவிட்டால் அதன் தர மதிப்பீடு தொடர்ந்து சரிவதை யாரும் தவிர்க்க முடியாது என்று அச்சுறுத்தின.அவ்வளவு தான்.. பிரதமர்,நிதியமைச்சர், திட்டக் கமிஷன், ரிசர்வ் வங்கியில் ஆரம்பித்து நிதியமைச்சகத்தின் அனைத்து மட்டத்திலும் வயிற்றில் புளியைக் கரைத்தது.
இந்தியாவைப் பொறுத்தவரை மானியங்கள் என்றால், மிக அதிகமான பணம் செலவழிக்கப்படுவது டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு மற்றும் ரேசன் கடைகளுக்கான உணவு தானியங்களுக்காகத் தான் (மானியம் என்பது ஒரு பொருளின் விலையை குறைத்து விற்பது, அதனால் ஏற்படும் நஷ்டத்தை அரசு ஏற்பது).இதில் உணவு தானியங்கள் மீதான மானியத்தில் கையை வைத்தால் களேபரமாகிவிடும் என்பதால், எரிபொருட்கள் மீதான மானியத்தின் மீது மத்திய அரசின் கவனம் திரும்பியது.குறிப்பாக டீசல், சமையஸ் கேஸ் விலையை உயர்த்தினால் விலைவாசி உயர்ந்து, ஓட்டுகள் கிடைக்காதே என்ற அச்சத்தில் அதன் விலையை யார் ஆட்சியில் இருந்தாலும் (காங்கிரசோ, பாஜகவோ, தேவ கெளடாவோ) அவ்வளவு சீக்கிரத்தில் உயர்த்த அனுமதிப்பதில்லை.
அதன் விலையை சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாதத்துக்கு 2 காசு, 3 காசு என உயர்த்தியிருந்தால் கூட இப்படி திடீரென ஒரே நாளில் ரூ. 5 வரை உயர்த்த வேண்டிய நிலைமை வந்திருக்காது. ஆனால், விலையை உயர்த்தினால் கெட்ட பெயர் வரும் என்று நினைத்து நினைத்து, நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி கவலையே படாமல், அதன் விலையை மத்திய அரசு உயர்த்தாமலேயே இருந்து வந்தது.இதனால் பெட்ரோல் விலையை மட்டும் அவ்வப்போது உயர்த்தினர். இதைத் தொடர்ந்து டீசல் கார்களின் விற்பனை அதிகமாகி அதிகமாகி இப்போது நாட்டின் 40 சதவீத எரிபொருளாக பயன்படுத்தப்படுவது டீசல் தான் என்ற நிலையை உருவாக்கிவிட்டனர். கிட்டத்தட்ட நாட்டையே டீசல்மயமாக்கிவிட்டனர் ('dieselisation') என்பதே உண்மை.விளைவு, டீசலை உண்மையான விலையை விட குறைவான விலைக்கு விற்று விற்றே இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை கடந்த 3 மாதத்தில் மட்டும் ரூ. 36,000 கோடியை இழந்து போண்டியாகியுள்ளன.
அதே போல சமையல் எரிவாயுவின் உண்மையான சந்தை விலை ரூ.733.50 என்று இருக்க அதில் பாதியை மத்திய அரசு மானியமாகத் தந்து, சிலிண்டரை நெடுங்காலமாகவே ரூ.386.50க்கு விற்று வந்தது.இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை மத்திய அரசு மானியமாகத் தந்து வந்தது.இதன் காரணமாக பட்ஜெட்டில் பெரும் ஓட்டை. முக்கிய திட்டங்களைக் கூட நிறைவேற்ற பணமில்லை என்ற நிலைமை.இந் நிலையில் தான் கேஸ், டீசல் விலையை உயர்த்தாவிட்டால் நாட்டின் ஒட்டு மொத்த நிதிப் பற்றாக்குறை 5.1 சதவீதத்தை விட அதிகமாகிவிடும் என்ற சூழல் ஏற்பட்டுவிட்டது.
இதைக் காரணம் காட்டித் தான் இந்தியாவின் பொருளாதாரத் தர மதிப்பீட்டை குறைக்கப் போவதாக ஸ்டாண்ட்ர்ட் அண்ட் புவரும், மூடியும், பிட்சும் எச்சரித்தன.இதையடுத்தே டீசல் விலையை ஒரேடியாக ரூ. 5 வரையும் உயர்த்தியுள்ளது மத்திய அரசு. டீசலுக்கான மானியத்தையும் கட்டுப்படுத்தும் வகையில், வருடத்துக்கு 6 சிலிண்டருக்கு மட்டுமே மானியம் என்று அறிவித்துள்ளது.இதன்மூலம் சர்வதேச அளவில் இந்தியா மீதான நம்பிக்கை பெருகும், முதலீடுகள் வந்து குவியும் என்பது தான் மன்மோகன் சிங்கின் கணக்கு.
அப்படி முதலீடுகள் குவியும்போது நாட்டின் தொழில்துறை புதிய வேகத்தில் வளரும், நாட்டின் பொருளாதாரம் வலுப்படும், புதிதாக ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும். நாட்டின் பொருளாதாரம் வலுப்படுபோது கோடிக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு தரும் ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மாதிரி ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்தலாம்.. இதன்மூலம் மக்கள் மகிழ்ச்சியோடு இருப்பர், மீண்டும் நமக்கே ஓட்டு போட்டு ஆட்சிக்குக் கொண்டு வருவர்.. இது தான் சோனியாவிடம் மன்மோகன் சொல்லியுள்ள 'தியரி'..இவை எல்லாம் அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் நடந்தாக வேண்டும். அதன் பின்னர் தேர்தல் வந்துவிடும். ஆக, முதல் மூன்று ஆண்டுகளை ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ், நிலக்கரி போன்ற விவகாரங்களிலேயே கழித்துவிட்ட மத்திய அரசுக்கு இப்போது கிடைத்திருப்பது மிகக் குறுகலான கால அவகாசம் தான்.