மத்திய அரசின் திட்டங்களில் வெறும் 4 திட்டங்களுக்கு மட்டுமே தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பெயரை சூட்டியுள்ளனராம். மற்றபடி ஜவஹர்லால் நேரு, அவரது மகள் இந்திரா காந்தி, அவரது பேரன் ராஜீவ் காந்தி ஆகியோரது பெயர்கள்தான் அதிக அளவில் இடம் பெற்றுள்ளனவாம். மற்ற தேசியத் தலைவர்களின் பெயர்களும் கூட மிக மிக குறைந்த அளவிலேயே இடம் பெற்றுள்ளனவாம். மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி பெயரில் மட்டும் 25 சதவீத திட்டங்களை மத்திய அரசு வைத்துள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் எந்தெந்த தேசியத் தலைவர்களின் பெயர்களில் மத்திய அரசின் திட்டங்கள் உள்ளன என்று ரமேஷ் வர்மா என்பவர் மத்திய அரசின் திட்டமிடுதல் அமைச்சகத்திடம் கேட்டிருந்தார். அதற்குப் பதிலளித்துள்ளது அமைச்சகம். அதில்தான் இந்த கொடுமையான தகவல் இடம் பெற்றுள்ளது.
8 திட்டங்களுக்கு இந்திரா காந்தியின் பெயரும், 3 திட்டங்களுக்கு நேருவின் பெயரும் சூட்டப்பட்டுள்ளன.தேசப் பிதா மகாத்மா காந்திக்கு 4 திட்டங்களை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. காந்தி ஸ்ம்ரிதி மற்றும் காந்தி சமிதி, காந்தி ஷில்ப் பஜார், மகாத்மா காந்தி பங்கர் பீம போஜனா மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் ஆகிய நான்கு திட்டங்களுக்கு மட்டுமே காந்தியின் பெயர் சூட்டப்பட்டுள்ளன. மகாத்மா காந்தியின் மனைவி கஸ்தூரிபாவின் பெயர் 1 திட்டத்துக்கும், சட்டமேதை அம்பேத்கரின் பெயர் 4 திட்டங்களுக்கும் சூட்டப்பட்டுள்ளன. பிற தேசிய தலைவர்களான மௌலானா அபுல் கலாம் ஆசாத் பெயரில் 3 திட்டங்கள் உள்ளன. மறைந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பெயரில் 2, சர்தார் வல்லப பாய் படேல் பெயரில் 1, அடல் பிஹாரி வாஜ்பாய் பெயரில் 1, ரவீந்திரநாத் தாகூர் பெயரில் 1, ஜாகீர் ஹுசைன் பெயரில் 1 மற்றும் ஜெகஜீவன் ராம் பெயரில் ஒரு திட்டத்தை மத்திய அரசு வைத்துள்ளது.
No comments:
Post a Comment