குற்றவாளிகள் தங்களிடம் நடத்தும் போலீஸ் விசாரணையை சொந்த செலவில்
வீடியோ எடுத்து கொள்ளலாம் என மும்பை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
‘ஸ்பீக் ஆசியா பீனலிஸ்ட் அசோசியேஷன்' என்ற அமைப்பின் தலை வர் அசோக்
பஹிர்வானி என்பவருக்கு எதிரான வழக்கு ஒன்றில் பொருளாதார குற்றப்பிரிவு
போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் அவரை கைது செய்ய
இடைக்கால தடை விதித்து மும்பை உயர் நீதிமன்றம் கடந்த நவம்பர் 5ம் தேதி
உத்தரவிட்டது. இந்த தடை தொடர்ந்து நீடிக்கிறது.
அதே சமயம் அசோக் தொடர்ந்து போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி வருகிறார். டிசம்பர்
6ம் தேதி 13வது தடவையாக விசாரணைக்கு ஆஜரானார். இந்த நிலையில் அவருடைய
முன்ஜாமீன் மனு நீதிபதி ஏ.எம்.திப்சே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆரம்பத்தில் இருந்தே போலீஸ் விசாரணையில் தாம் ஒத்துழைத்து
வந்தாலும், போலீசார் தன்னை தொடர்ந்து துன்புறுத்தி வருவதாக தெரிவித்தார்.
அவர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்ரீகாந்த் பட் கூறுகையில்,
"போலீஸ் விசாரணையில் என் கட்சிக்காரர் ஒத்துழைத்தாரா? அல்லது
ஒத்துழைக்கவில்லையா? என்பது போன்ற சர்ச்சைகளை தவிர்ப்பதற்காக விசாரணை
முழுவதையும் பதிவு செய்ய வேண்டும் என்று எனது கட்சிக்காரர் விரும்புகிறார்"
என்றார்.
இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர்
பி.டி.காரட், "அசோக்கிடம் நடத்தப்படும் விசாரணை முழுவதையும் அவர்
வீடியோவில் பதிவு செய்து கொள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்
ஒத்துழைப்பு கொடுப்பார்கள்"' என்றார்.
இதைத் தொடர்ந்து வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் தங்கள் சொந்த செலவில்
விசாரணைகளை வீடியோவில் பதிவு செய்ய அனுமதித்து நீதிபதி திப்சே
உத்தரவிட்டார். பின்னர் வழக்கறிஞர் ஸ்ரீகாந்த் இது குறித்து நிருபர்களிடம்
கூறுகையில், "உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மிகவும் வரவேற்கத்தக்கது.
ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள், குறிப்பாக தாங்கள் நிரபராதி என்று
உறுதியாக நம்பும் நபர்கள், உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை பயன்படுத்திக்
கொண்டு போலீஸ் விசாரணைகளை தாங்களே தங்கள் சொந்த செலவில் பதிவு செய்து
கொள்ளலாம்.
அமெரிக்காவில் இந்த முறை அமலில் இருக்கிறது. வழக்கு விசாரணைகள்
வெளிப்படையானதாக இருக்கவும், குற்ற வாளிகளிடம் இருந்து தகவல்களை
பெறுவதற்காக சித்ரவதை செய்யும் முறையை போலீசார் பயன்படுத்தாமல் இருக்கவும்
இந்த உத்தரவு உதவும்" என்றார்.
No comments:
Post a Comment