நாம் தெலுங்கு ஹீரோ பாலகிருஷ்ணா படத்தை பார்த்து கைகொட்டி சிரித்திருக்கிறோம். பாலகிருஷ்ணாவே கைகொட்டி சிரிப்பார் என்றால் அது அலெக்ஸ்பாண்டியன் தான்! படம் ஓடிக்கொண்டிருக்கும் போது திடீரென நாம் வந்திருப்பது சிறுத்தையா? சகுனியா? அலெக்ஸ்பாண்டியனா? என்று டிக்கெட்டை எடுத்து பார்க்கத் தோன்றுகிறது. ‘டீசல் விக்குற விலைல இவ்ளோ கார்ல ஏண்டா துரத்திகிட்டு வர்றீங்க’ என்று சந்தானம் கேட்கும் போது ‘ நம்ம மைண்ட் வாய்ஸ் சந்தானத்திற்கும் கேட்டுவிட்டதோ?’ என்று ரசிகர்கள் திடுக்கிடுவது உறுதி. ’சிக்ஸ்பேக் இருக்கோ இல்லையோ நல்ல பிளாஷ்பேக் வெச்சிருக்கடா’ என்பன போன்ற சந்தானத்தின் வசனங்கள் இருக்கையில் உட்கார வைக்கிறது. கமெர்ஷியல் படத்தில் லாஜிக் எதிர்பார்த்து ரசிகர்கள் ஏமாந்தால், இயக்குனர் பொறுப்பாக முடியாது. சந்தானம் செய்யும் காமெடிகளையெல்லாம் காணாமல் போகச் செய்கிறார் கார்த்தி. பாலத்திலிருந்து ரயில் மீது குதிப்பதும், ரயிலிலிருந்து நீரில் குதிப்பதும், நூறு கார்களில் வரும் அடியாட்களை துவம்சம் செய்வதும், ஆயிரம் குண்டுகளில் ஒரு குண்டு கூட கார்த்தி மீதும் அனுஷ்கா மீதும் படாததையும் பார்க்கும் போது விரல் வைக்க மூக்கு தான் இல்லை. கமர்ஷியல் படம் தான் என்றாலும் மக்களைப் பற்றி சிந்திக்க வேண்டிய முதலமைச்சர் மகளுக்காக அந்த காண்டிராக்டில் கையெழுத்து போடுவது நெருடல். அலெக்ஸ் பாண்டியன் - சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. சிரிப்பு தான் வருகிறது!
No comments:
Post a Comment