ஆண்டுதோறும் உலகம் முழுவதும் சுமார் 1,000 பில்லியன் டாலர்கள் (ரூ.
50 லட்சம் கோடி) அளவுக்கு லஞ்சம் கொடுக்கப்படுவதாக உலக வங்கி
தெரிவித்துள்ளது.
அதே போல லஞ்சம் ஒரு நாட்டின் மொத்த உற்பத்தியில் (GDP) 17 சதவீதத்தை
சுருட்டி விடுகிறது என்று ஆசிய வளர்ச்சி வங்கியும் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் லஞ்சத்தை ஒழிக்க ஐ.நா சபையின் வளர்ச்சித் திட்டத்தின் (United Nations Development Programme) கீழ் செயல்படும் ஜனநாயக ஆட்சிமுறை பிரிவு உலகளாவிய வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊழலும் லஞ்சமும் ஒரு நாட்டின் சட்ட திட்டங்களை உருக்குலைய வைக்கின்றன. ஜனநாயக அமைப்புகளை சிதைக்கின்றன. ஏழைகளுக்கும் பெண்களுக்கும் சிறுபான்மையினருக்கும் சம உரிமைகளும் வேலைவாய்ப்புகளும் தரப்படுவதை லஞ்சமும் ஊழலும் தடுக்கின்றன என்கிறது ஐ.நா. சபை. இதனால் தான் 2005ம் ஆண்டில் ஊழலுக்கு எதிரான ஐ.நா. மாநாடே (UN Convention Against Corruption) நடத்தப்பட்டது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அடிப்படையாக வைத்து ஐ.நா. பொதுக் கவுன்சிலின் சட்டமே திருத்தப்பட்டது. சர்வதேச அளவில் ஊழலையும் லஞ்சத்தையும் எதிர்க்கும் கருவியாக இந்த சட்டம் உள்ளது. ஒரு நாட்டின் வளம் லஞ்சம்-ஊழல் மூலம் சுரண்டப்பட்டால் அந்த நாட்டில் பள்ளிகள் கட்டவோ, மருத்துவமனைகள் கட்டவோ, சாலைகள் அமைக்கவோ, குடிநீர் வழங்கவோ போதிய பணம் இருக்காது. வெளிநாட்டு உதவிகளும் சுருட்டப்பட்டால் நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு வளர்ச்சிகள் ஸ்தம்பிக்கும் என்கிறது இந்தத் தீர்மானம். அதே போல ஊழல் தலைவிரித்தாடும் தேசத்தில் போலி மருந்துகளும், தரம் குறைந்த மருந்துகளும் அதிகமாக புழங்கும். கடலிலும் நதிகளிலும் கழிவுகள் மிக அதிகமாகக் கொட்டப்படும். குறிப்பாக ஏழைகள் மேலும் ஏழைகள் ஆவர் என்கிறது ஐ.நா. சபையின் ஆய்வறிக்கை. மேலே சொல்லப்படும் வாசகங்கள் அனைத்துமே இந்தியாவுக்கு 100 சதவீதம் பொருந்தும் என்பது உண்மையிலும் உண்மை.
No comments:
Post a Comment