ஆதிபராசக்தி பல் மருத்துவக்கல்லூரியில் மேற்படிப்பு தொடங்குவதற்கு
லஞ்சம் கொடுத்த வழக்கு தொடர்பாக பங்காரு அடிகளார் மனைவி மகன்களுக்கு
சி.பி.ஐ சம்மன் அனுப்பியுள்ளது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலய நிறுவனர் பங்காரு அடிகளாரை நிறுவிய
தலைவராகவும், அவரது மனைவி லஷ்மி பங்காரு அடிகளாரை தலைமை நிர்வாக
அதிகாரியாகவும் கொண்டு ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரி இயங்கி
வருகிறது. இந்தக் கல்லூரியின் நிர்வாக இயக்குனராக பங்காரு அடிகளாரின்
இரண்டாவது மகன் செந்திலின் மனைவி ஸ்ரீலேகா செயல்பட்டு வருகிறார்.
2012-ம் ஆண்டு எம்டிஎஸ் எனப்படும் பல் மருத்துவ மேற்படிப்புக்கான அனுமதி
பெறுவதற்காக இந்திய பல் மருத்துவக் கழகத்திடம் கல்லூரி நிர்வாகம்
விண்ணப்பத்திருக்கிறது.
அக்டோபர் 2012-ல் நடந்த ஆய்வில் கல்லூரியில் அடிப்படை வசதிகள், ஆய்வகங்கள்
உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இல்லாததை சுட்டிக் காட்டி அனுமதி
மறுத்திருக்கிறது இந்திய பல் மருத்துவக் கழகம்.
டிசம்பர் 28-ம் தேதி கூடிய கல்லூரியின் நிர்வாகக் குழு இந்திய பல்
மருத்துவக் கழகத்தின் உறுப்பினர் ராயப்பேட்டையைச் சேர்ந்த பல் மருத்துவர்
டாக்டர் எஸ் முருகேசன் என்பவருக்கு லஞ்சம் கொடுத்து அனுமதி வாங்க முடிவு
செய்திருக்கிறது. இந்த முருகேசன் எஸ்ஆர்எம் பல் மருத்துவக் கல்லூரியின்
டீன் (பொறுப்பு) ஆகவும் இருக்கிறார்.
ஆதிபராசக்தி கல்லூரியினர் முருகேசனுக்கு லஞ்சம் கொடுக்கப் போவது பற்றிய
தகவல் சிபிஐ அதிகாரிகளுக்குத் தெரிய வந்து ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில்
இருக்கும் அவரது கிளினிக்கில் ரெய்டு நடத்தினர். லஞ்சப் பணத்தின் முதல்
தவணையாக ரூ 25 லட்சத்தை கொடுத்த போது, முருகேசனையும், கல்லூரியின்
நிர்வாகச் செயலர் கருணாநிதி, நிர்வாக அலுவலர் கே ராம்பத்ரன் ஆகியோரையும்
இடைத்தரகராக உடன் வந்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் ஆரணி எம்எல்ஏ டி
பழனியையும் சிபிஐ அதிகாரிகள் கடந்த ஜனவரி 8-ம் தேதி கைது
செய்திருக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட நான்கு பேரும் சென்னை சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில்
8-ம் தேதி மாலை ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 15 நாட்கள் நீதி மன்ற
காவல் விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த லஞ்சம் வழங்கிய விவகாரத்தில் கல்லூரி நிர்வாக இயக்குனர்
ஸ்ரீலேகாவுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகித்த சிபிஐ அதிகாரிகள் அவருக்கு
சம்மன் அனுப்பினர். சம்மனை ஏற்றுக் கொள்ளாத ஸ்ரீலேகா சென்னை
உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள் ஜனவரி 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சிபிஐ
அதிகாரிகள் முன்பு ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என
உத்தரவிட்டனர். இதன்படி இரண்டு தினங்கள் ஆஜராகி ஸ்ரீலேகா விளக்கமளித்தார்.
விசாரணைக்கு ஆஜாரான ஸ்ரீலேகாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர்
சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.
இதனிடையே பல் மருத்துவக்கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரியான லட்சுமி
பங்காரு அடிகளார், அவரது மகன்கள் செந்தில், அன்பழகன் ஆகியோருக்கு சி.பிஐ
விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது. கைதாவதை தடுக்க அவர்கள்
முன் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளனர்.
டெல்லியை சேர்ந்த பல் மருத்துவ கவுன்சில் அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு
இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. பல் மருத்துவ
கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கிய விவகாரம் தொடர்பாக கடந்த மாதம்
தேசிய அளவில் 8 இடங்களில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாட்டை
சேர்ந்த 5 கல்லூரிகளும் அடங்கும்.
No comments:
Post a Comment