காதலர் தினத்தில் நாய்க்கும், நாய்க்கும் திருமணம் செய்து வைப்பதன் மூலம், திருமணத்தையே கேலி செய்கின்றனர்,'' என, தி.மு.க., ராஜ்யசபா, எம்.பி., கனிமொழி பேசினார்.சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கத்தின் சார்பில், "வன்மத்தில் கறைபடுமோ காதல்' என்ற தலைப்பில், திறந்தவெளி கவியரங்கம், சென்னையில் நேற்று நடந்தது.கவியரங்கத்திற்கு, கவிஞர் வாலி தலைமை வகித்து பேசியதாவது:காதல் திருமணத்தால் தான், ஜாதி ஒழிக்க முடியும். நானும் காதல் திருமணம் செய்தவன் தான். காதல் எதிர்ப்பு என்பது, அர்த்தமற்ற செயல். இஷ்டப்பட்டு கஷ்டப்படுவது தான், காதல். உடல் கவர்ச்சியில் வருவது, காதல் அல்ல; ஆன்மாவை தொடுவது தான், காதல். என் அண்ணனின் மகள், ஒரு பையனை காதலித்தாள். அண்ணன் குடும்பத்தினர், காதலை எதிர்த்தனர். அந்த பையன் என்னிடம் வந்து, "நீங்கள் தான் எங்கள் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும்' என்றான். "அந்த பையன், நல்ல பையனாக இருக்கும் போது, ஏன் எதிர்க்க வேண்டும்' என, அண்ணனிடம் கேட்டேன். ஒரு வழியாக அவரை சம்மதிக்க வைத்து, அந்த திருமணத்தை, நான் தான் நடத்தி வைத்தேன்.இன்னொரு திருமணத்தில், மணப்பெண், பிராமணர் குடும்பத்தை சேர்ந்தவர். மணமகன் யார் என்றால், இளையராஜா மகன் யுவன் சங்கர்ராஜா. இளையராஜா என்ன ஜாதி என, எல்லாருக்கும் தெரியும். காதலுக்கு ஜாதி இல்லை என்பதை, என் குடும்பத்தில் நடந்த திருமணமே ஒரு எடுத்துக்காட்டு.இவ்வாறு வாலி பேசினார்.
தி.மு.க., ராஜ்யசபா கனிமொழி பேசியதாவது: காதலர் தினத்தை, போர்க்களமாக, அரசியல் கட்சிகள் மாற்றியுள்ளன. ஆனால், காதலர் தினத்தை, கவிஞர்கள் ஒன்று சேர்ந்து, சமூக நீதி களமாக மாற்றியுள்ளனர். ஜாதியை பார்க்காமல் வருவது தான், காதல். காதலர் தினத்தில் நாய்க்கும், நாய்க்கும் திருமணம் செய்து வைக்கின்றனர். மிருகங்கள் என்ன பாவம் செய்தன? காதலை கொச்சைப்படுத்துவதாக கூறி, திருமணத்தையே கேலி செய்கின்றனர்.எதற்காக போராட்டம் நடத்துகிறோம் என்ற தெளிவு இல்லாமல், சில அரசியல் கட்சிகள், குழப்பத்தோடு போராட்டத்தை நடத்துகின்றன. அந்தக் கட்சிகளின் கொள்கைள் நீர்த்துப் போய்விட்டன. விலை போவதற்கு பையில் ஒன்றுமில்லை. அதனால் தான் இளைஞர்களுக்கு எதிராக காதல் எதிர்ப்பு போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். தமிழகத்தை கூறு போட நினைக்கும் கட்சிகளை இந்த சிறுகுரல் பற்றி எரிந்து பொசுக்கும். ஜாதி வேண்டும் என, குறிப்பிட்ட பெரிய சக்திகள் தலை தூக்கியுள்ளது. அதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment