தீவிரவாதிகளின் தாக்குதல் இந்தியாவில் அடிக்கடி நிகழ்கிறது. தாக்குதலை தடுக்க எவ்வளவோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தாலும் ஏதாவது ஒரு நகரத்தில் தாக்குதல் நடைபெறுவதும், பலநூறு உயிர்கள் பலியாவதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. காஷ்மீரோ, கோவை மாநகரமோ குண்டு வெடிப்புகளுக்கு இலக்காகிக் கொண்டுதான் இருக்கிறது. பாராளுமன்றத்தின் உள்ளேயே கூட தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடைபெறும் அளவிற்கு நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இந்திய மட்டுமல்லாது உலகின் பல நாடுகளில் உள்நாட்டு கலவரம், பிரிவினைவாத மோதல், தீவிரவாதிகள் தாக்குதல் என தொடர்ந்து நடந்துகொண்டேதான் உள்ளன. அதிலும் இது போன்ற தீவிரவாத தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பவை தெற்கு ஆசிய நாடுகள்தான் என்கின்றன ஒரு கணக்கெடுப்பு. உலக அளவில், ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கு அடுத்து இந்தியாவில்தான் தீவிரவாத தாக்குதல்கள் அதிகம் நிகழ்வதாக சர்வதேச தீவிரவாத புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
கடந்த 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு பிறகு நடந்த பல பெரிய தாக்குதல் சம்பவங்களில் இதுவரை 1300 பேர் இந்தியாவில் கொல்லப் பட்டுள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு காரணமான தாவூத் இப்ராஹிம் உள்ளிட்டவர்கள் இன்னமும் சிக்காமல் பாதுகாப்பாக உள்ளனர்.அமெரிக்காவில் 2001 செப்டம்பர் 11ம் தேதி இரட்டை கோபுரங்களை அல்கொய்தா தீவிரவாதிகள் விமானங்களை மோதி தகர்த்தனர். இந்த ஒரே சம்பவத்திலேயே 2823 பேர் கொல்லப்பட்டனர். அதன் பிறகு எந்த தீவிரவாத சம்பவமும் நிகழவில்லை 2004ம் ஆண்டில் ரஷ்யாவின் பெஸ்லான் பகுதியில் ஒரு பள்ளிக்குள் நுழைந்த செசன்ய தீவிரவாதிகள் அங்கிருந்தவர்களை பிணைக் கைதிகளாக பிடித்தனர். 3 நாட்களுக்குப் பிறகு பள்ளிக்குள் அதிரடியாக நுழைந்த பாதுகாப்பு அதிகாரிகள் தாக்குதல் நடத்தி பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தனர். இந்த தாக்குதலில் 186 குழந்தைகள் உள்ளிட்ட 340 பேர் இதில் இறந்தனர்.
2002ம் ஆண்டில் இந்தோனேஷியாவின் பாலி நகரில் இரவு விடுதி மீது தீவிரவாதிகள் தாக்கியதில் 202 பேர் கொல்லப்பட்டனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உலகிலேயே தீவிரவாதத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு ஈராக்தான். அங்கு 2011ம் ஆண்டில் மட்டும் தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் 1800 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2011ம் ஆண்டில் பாகிஸ்தானில் 1468 பேரும், ஆப்கானிஸ்தானில் 1293 பேரும், இந்தியாவில் 402 பேரும் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் இறந்துள்ளனர். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்த தீவிரவாத தாக்குதலை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் பணத்திற்கு ஆசைப்பட்டு உள்ளூரில் இருக்கும் மக்களே தீவிரவாதிகளுக்கு கைக் கூலிகளாக செயல்படுகின்றனர். இதுபோன்ற புல்லுருவிகள் இருக்கும் வரை நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்து கொண்டேதான் இருக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
No comments:
Post a Comment