வரும் 2011-2020ம் ஆண்டுக்குள் 14 கோடிக்கும் அதிகமான சிறுமிகள் குழந்தை திருமணத்திற்கு உட்படுத்தப்படுவார்கள் என்று ஐ.நா. மக்கள்தொகை நிதியம் தெரிவித்துள்ளது. தற்போதுள்ள குழந்தை திருமண பழக்கம் தொடர்ந்தால் ஆண்டுக்கு 14.2 மில்லியன் சிறுமிகளுக்கு குழந்தை திருமணம் நடக்கும் அல்லது தினமும் 39,000 சிறுமிகளுக்கு திருமணம் நடக்கும். இது தவிர வரும் 2011-20ம் ஆண்டுக்குள் 14 கோடி சிறுமிகளுக்கு 18 வயதுக்குக்குள் திருமணம் நடக்கும். மேலும் 5 கோடி சிறுமிகளுக்கு 15 வயதுக்குக்குள் திருமணம் நடக்கும். வளர்ந்து வரும் நாடுகளில் இளைஞர் சமுதாயத்தின் எண்ணிக்கை பெருகிவருவதால் குழந்தை திருமண எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இது குறித்து ஐ.நா. மக்கள்தொகை நிதியத்தின் தலைவர் பாபாடுண்டே ஒசோடிமெஹின் கூறுகையில், குழந்தை திருமணம் என்பது மனித உரிமை மீறலாகும். சிறுமியாக இருக்கையில் திருமணம் செய்து கொடுத்தால் அவரின் திறமைகள் வெளிப்படாமலேயே போகும். இளம் வயதில் திருமணமாகும் சிறுமிகள் கணவரால் கொடுமைக்கு ஆளாக்கப்படுவது அதிகம் உள்ளது என்றார்.
15 முதல் 19 வயது வரை உள்ள சிறுமிகள் கர்ப்பம் மற்றும் பிரசவத்தின்போது ஏற்படும் பிரச்சனைகளால் தான் அதிகம் இறக்கின்றனர். அதுவே சரியான வயதில் திருமணம் செய்து சிறிது காலம் கழித்து குழந்தை பெறும் பெண்கள் ஆரோக்கியமாக உள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு அதிகாரி பிலாவியா பஸ்ட்ரியோ தெரிவித்தார். குழந்தை திருமண பிரச்சனையை உடனே கவனிக்காவிட்டால் வரும் 2015ம் ஆண்டுக்குள் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைப்பது மற்றும் பிரசவ மரணத்தை வெகுவாகக் குறைக்கும் ஐ.நா.வின் குறிக்கோள்கள் தோல்வியடையும். தெற்கு ஆசியா மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளில் தான் அதிக அளவில் குழந்தை திருமணம் நடக்கிறது. உலக அளவில் குழந்தை திருமணங்கள் அதிகம் நடக்கும் 10 நாடுகளின் விவரங்கள்: நைஜர் - 75 சதவீதம், சாட் மற்றும் மத்திய ஆப்பிரிக்கா - 68 சதவீதம், வங்கதேசம் - 66 சதவீதம், கினியா - 63 சதவீதம், மொசாம்பிக் - 56 சதவீதம், மாலி - 55 சதவீதம், புர்கினா பாசோ மற்றும் தெற்கு சூடான் - 52 சதவீதம், மாளவி - 50 சதவீதம். இந்தியாவில் குழந்தை திருமணம் 47 சதவீதம் நடைபெறுகிறது.
No comments:
Post a Comment