இலங்கை தமிழர் விவகாரம் தமிழகத்தில் விஸ்வரூபம்
எடுத்துள்ள நிலையில், தி.மு.க., குடும்பத்துக்குச் சொந்தமான ஐதராபாத்
ஐ.பி.எல்., அணி, இரண்டு இலங்கை வீரர்களை கொண்டுள்ளது பெரும் சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறதா
என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. இலங்கை தமிழர் விவகாரம் தற்போது
விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இலங்கைக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை
தமிழக முதல்வர் ஜெயலலிதா எடுத்து வருகிறது. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா
கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா நீர்த்து போகவைத்து விட்டதாக கூறி, ஆளும்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து தி.மு.க., வெளியேறியுள்ளது.
இந்நிலையில், நேற்று முதல்வர் ஜெயலலிதா, சென்னையில் நடக்கவுள்ள ஐ.பி.எல்.,
போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க தடை விதிக்க ஐ.பி.எல்.,
நிர்வாகத்திற்கு அறிவுறுத்த வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
இதையடுத்து அவசர அவசரமாக கூடிய ஐ.பி.எல்., நிர்வாக குழு, சென்னையில்
நடக்கும் போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாட தடை விதித்தது. இதைத்
தொடர்ந்து இன்று சட்டசபையில் உரையாற்றிய முதல்வர், தி.மு.க.,
குடும்பத்திற்குச் சொந்தமான ஐ.பி.எல்., அணியில், இலங்கை வீரர்களை
அனுமதித்து தி.மு.க., இரட்டை வேடம் போடுவதாக குற்றம் சாட்டினார்.
தி.மு.க.,வின் இந்த செயல் சுயநலத்தின் உச்சகட்டம் எனவும் அவர்
தெரிவித்தார். சமீபத்தில் ஐதராபாத் ஐ.பி.எல்., அணியை தி.மு.க.,
குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வாங்கினர். சங்ககரா மற்றும் பெரேரா என்ற
இரண்டு இலங்கை வீரர்கள் இடம்பெற்றுள்ள இந்த அணியில் சங்ககரா கேப்டனாக
உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment