தமிழக மீனவர்களை கடத்தி படுகொலை செய்தது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர்தான் என்று தமிழக சட்டசபையில் முதல்வராக இருந்தபோது கருணாநிதி அறிவித்தது ஆச்சரியமானது என்று அமெரிக்க தூதரகம் கருத்து தெரிவித்திருக்கும் ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கிறது. 2007ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 12 மீனவர்கள் கடத்தப்பட்டனர். இந்த மீனவர்களை கடத்தியதும் படுகொலை செய்ததும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் தான் என்று 2007ம் ஆண்டு சட்டசபையில் திமுக தலைவர் கருணாநிதி பேசியிருந்தார். இதை சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் பதிவு செய்து டெல்லி, கொல்கத்தா, மும்பை, கொழும்பு அமெரிக்க தூதரகங்களுக்கும் வாஷிங்டனுக்கும் அனுப்பி வைத்திருக்கிறது. அமெரிக்க தூதரகம் அனுப்பி வைத்த அந்த ஆவணங்களை விக்கிலீக்ஸ் தற்போது பகிரங்கப்படுத்தியிருக்கிறது.
அமெரிக்க தூதராக ஆவணம் சொல்வது என்ன?: ''(2007ம் ஆண்டு) மார்ச் 29ம் தேதியன்று தமிழ்நாடு மீனவர்கள் 5 பேரை தமிழீழ விடுதலைப் புலிகள்தான் சுட்டுக் கொன்றனர் (இலங்கை கடற்படை அல்ல)_ என்று அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் தமிழகத்தில் உள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்கள் வாயடைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் இந்தக் குற்றச்சாட்டு உறுதியானால் தமிழகத்தில் புலிகளுக்கான ஆதரவு மீண்டும் குறைய வாய்ப்பிருக்கிறது. 1991ம் ஆண்டு ராஜிவ் காந்தி படுகொலையின் போது விடுதலைப் புலிகளின் ஆதரவு பாதிப்புக்குள்ளானது. மீனவர் படுகொலைக்கு புலிகளே பொறுப்பு என்று ஆளும் திமுக கூறியிருப்பதன் மூலம் அந்த பயங்கரவாத அமைப்புக்கு எதிராக கடும் நிலைப்பாட்டை அக்கட்சி மேற்கொள்ளக் கூடும். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியுடனான திமுக உறவு வலுப்படும்.
ஏப்ரல் 27ம் தேதியன்று தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி தமது அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கையில், தமிழ் புலிகளின் கடற்படை பிரிவான கடல் புலிகள் மார்ச் 29ம் தேதியன்று 5 தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றதாக தெரிவித்திருந்தார். அவரது அறிக்கையில் ஏப்ரல் 11ம் தேதியன்று இந்திய கடலோர காவல்படையால் கைது செய்யப்பட்ட 6 கடற்புலிகளும் மீனவர்களை படுகொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு இலங்கைப் பகுதியில் புலிகளின் கப்பலில் இருந்து ஆயுதங்களை இறக்கும்போது மீனவர்களை கொன்றதாகவும் கடற்புலிகள் கூறியதாகவும் அந்த் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் 12 மீனவர்கள் (11 தமிழக மீனவர்கள், ஒருவர் கேரளா மீனவர்) மார்ச் 4ம் தேதி முதல் காணாமல் போயினர். அவர்களும் புலிகளின் முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் முகர்ஜி கூறியுள்ளார்.
ஏப்ரல் 28ம் தேதி முதல்வர் கருணாநிதி சட்டசபையில் இந்த செய்தியை உறுதிப்படுத்தினார். 'மீனவர் படுகொலைக்கு இலங்கை கடற்படைதான் காரணம் என்று தொடக்கத்தில் நாம் கருதிக் கொண்டிருந்தோம். ஆனால் இந்த படுகொலைக்கு விடுதலைப் புலிகளே காரணம் என்ற அதிர்ச்சியான தகவலை வருத்தத்தோடு தெரிவிக்கிறேன். மேலும் கடத்தப்பட்ட 12 மீனவர்களையும் விடுவிக்க மத்திய அரசு மூலமாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் முதல்வர் கருணாநிதி உறுதியளித்தார். அதற்கு முந்தைய நாள் சட்டசபையில் பேசிய கருணாநிதி, தாம் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை என்றும் அவர்களுக்கு இங்கே இடம் இல்லை என்றும் அவர்கள் இங்கே எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும் அவர்களது குறிக்கோளும் நோக்கமும் வேறுபட்டதாக இருக்கிறது என்றும் கூறியிருந்தார். இதனிடையே தமிழக காங்கிரஸ் கட்சியானது தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை கைது செய்ய கோரியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் மத்திய அரசுடன் ஆலோசிப்பார்''. (தமிழகத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக ஜூலை 2002 முதல் பிப்ரவரி 2004 வரை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மாநில அரசு பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டுகளை விலக்கிக் கொண்டது) என்று விரிகிறது அந்த அமெரிக்க தூதரகத்தின் ஆவணம். மேலும் தி ஹிந்து நாளிதழ் எழுதிய தலையங்கம் ஒன்றையும் அந்த ஆவணம் சுட்டிக்காட்டுகிறது. மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையானது டெல்லியில்தான் முடிவெடுக்கப்பட வேண்டுமே தவிர சென்னையில் அல்ல என்பதை வலியுறுத்துகிறது அந்த தலையங்கம். அதே நேரத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசும் திமுக, இலங்கைக்கு "நேரடியாக" இந்திய அரசு ராணுவ உதவி அளிப்பதை ஆதரிக்காது என்றும் அமெரிக்க தூதரக ஆவணம் பதிவு செய்திருக்கிறது.
No comments:
Post a Comment