சித்தர் சமாதி என்பது, சித்தர்கள் தங்கள் யோக நெறியினால் முத்தி நிலையடைந்த பின்பு, அவர்கள் தங்கள் உடலின் இயக்கத்தை நிறுத்தி வைத்து விட்டு, பல ஆண்டுகளுக்குப் பின்பு, அந்த உடலை மீண்டும் இயங்கவைத்து உலகத்தில் நடமாடுவது என்பர். சித்தர் தங்கள் உடலியக்கத்தை நிறுத்திவிட்டு, உடலைப் பூமிக்குள் புதைத்து வைக்கச் செய்வர். அவ்வாறு உடல் புதைக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட இடம் சமாதி எனப்படும். சமாதி நிலையில் இருப்பதும் யோக நெறியின் உச்ச நிலையென உரைக்கப்படுகிறது.
அவ்வாறு, சித்தர்கள் சமாதி அடைந்த இடங்களாகத் தமிழகத்திலும் பிற இடங்களிலும் சுமார் 39 இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஒவ்வாரு இடமும் ஒவ்வொரு சித்தர் அடங்கிய இடமாகக் கூறப்படுகிறது. சித்தர்கள் அடங்கிய 39 இடங்களும் இன்றைய நிலையில் சைவ மதத்தின் திருக்கோயில்களாகவும் வழிபாட்டிடங்களாகவும் இருக்கின்றன. சித்தர்கள் அடக்கமாகிய சமாதிகள் சைவமதத்தின் திருக்கோயில்களாக மாறியது பற்றிய உண்மை ஆராய்தற்கு உரியது. ஆனால் புறநானூற்றுப் பாடலில் அதற்கான காரணம் விளங்கக் கூடியதாக அமைந்திருக்கக் காணலாம்.
“ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளியேந்து மருப்பிற் களிறெறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பிரவி னல்லது
நெல்லுகுத்துப் பரவும் கடவுளு மிலவே”
தமிழர்கள் வழிபடுமிடங்களெல்லாம், போர்க்களத்து வீர மரண மெய்திய வீரர்களின் நடுகல் அல்லாது, நெல்லைத் தூவி வழிபடும் தெய்வ வழிபாடு என்பது இல்லை என்கிறது. தமிழர்களின் பண்டைய வழக்கின்படி தெய்வ வழிபாடு என்பது இல்லை. எல்லா வழிபாட்டு இடங்களும் நினைவுச் சின்னங்கள் என்பதே பொருந்தும். சில இடங்களின் வரலாறு மறைந்து இருந்தாலும் வழிபாடு என்பது வழிவழியாகத் தொடர்ந்து நடைபெறும்.
புறநானூற்றுச் செய்தியின்படி வீரர்களுக்கு மட்டுமே நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டதாகக் கருத முடியாது. புறநானூறு வீரத்தையும் வீரர்களின் புறச் செயல்களையுமே குறித்து இயற்றப் பெற்ற இலக்கியம் என்பதால், நினைவுச் சின்னங்கள் தோன்றுவதன் அடிப்படைகளுள் ஒன்றினைப் புறநானூறு கூறுவதாகக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment