|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 October, 2013

அப்பாவி பூச்சி'களுக்கு மரண தண்டனை?


பூச்சிகள் இந்தியாவில் மிகப்பெரிய கொலையாளி இனங்களில் ஒன்று’
இப்படியொரு தலைப்புடன், வந்த ஒரு விளம்பரத்தைப் பார்த்ததும் எனக்குள் பலத்த அதிர்ச்சி. அது, பூச்சிகளைக் கொல்லும் விஷத்தை தயாரித்து விற்கும் தனியார் நிறுவனத்தின் விளம்பரம்.அதில், கரப்பான் பூச்சிகளும், கொசுவும் இணைந்து மிகப்பெரிய சதி செய்து மலேரியா, டெங்கு, சிக்கன் குனியா... போன்ற நோய்களை பரப்புகின்றன. அதனால், அவற்றை ஓர் இயக்கமாக இருந்து அழிப்போம் வாருங்கள் என்று அழைக்கிறது அந்த விளம்பரம்.
 
ஒரு பொருளை விளம்பரம் செய்வது அவர்களின் உரிமை. அதற்காக ஒட்டுமொத்தமாக பூச்சி இனத்தையே கொலையாளிகள் என்று சொல்லி, மக்கள் மனதில் பயத்தைத் தோற்றுவிக்கும் விதத்தில் விளம்பரம் செய்வதுதான் அதிர வைக்கிறது.இங்கே மனிதர்கள் மட்டுமே ஜீவன்கள் இல்லை. அப்படி நாம் மட்டுமே இருந்தால், இங்கே நமக்கு வாழ்க்கையும் இல்லை. ஆம், மனிதர்கள் இல்லாமல் மரங்கள் இருக்கும்... ஆனால், மரங்கள் இல்லாமல் மனிதர்கள் இல்லை. மனிதர்கள் இல்லாமல் மண்புழு இருக்கும்... ஆனால், மண்புழு இல்லாமல் மனிதர்கள் இல்லை. ஒட்டுமொத்தத்தில் மனிதர்கள் இல்லாமல் இந்த பூமியும் அதிலிருக்கும் அத்தனை ஜீவன்களும் வாழும். ஆனால், அவற்றில் ஒன்றிரண்டு இல்லாவிட்டாலும்கூட, ஒரு நொடியும் நம்மால் வாழவே முடியாது.

ஆம், அனைத்தையும் சார்ந்தே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இயற்கையின் படைப்பில் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு தேவையுடன்தான் இங்கே உயிர்பெற்று உலாவிக் கொண்டிருக்கின்றன. மனிதனும் அப்படி ஒரு தேவையுடன்தான் இங்கே தோன்றியிருக்கக் கூடும். ஒருவேளை, அந்தத் தேவை, இந்தப் பூமியை ஒட்டுமொத்தமாக அழிப்பதாகக்கூட இருக்கலாம் என்று சொல்லத் தோன்றுகிறது.ஏனென்றால், இன்றைக்கு அவன் செய்துகொண்டிருக்கும் வேலைகள் அனைத்தும் அப்படித்தானே. ஆம், கிட்டத்தட்ட பஞ்சபூதத்தையும் பஞ்சராக்கிவிட்டோமே! நிலத்தைக் கெடுத்தாகிவிட்டது, நீரைக் கெடுத்தாகிவிட்டது, காற்றைக் கெடுத்தாகிவிட்டது, ஆகாயத்தையும் கெடுத்தாகிவிட்டது... வரிசையாக செயற்கைகோள்களை அனுப்பி! எஞ்சியிருப்பது நெருப்பு மட்டுமே, அது நெருங்க முடியாத நிலையில் இருப்பதால் யோசித்துக் கொண்டிருக்கிறோம்... அவ்வளவே!
 
ம்... இந்த பூமிக்கு கட்டக்கடைசியாக வந்து சேர்ந்த இந்த மனிதன் ஆடும் இத்தனை ஆட்டங்களுக்கு, அவனுக்கு பல காலம் முன்பாகவே தோன்றிய அனைத்து உயிர்கள், தாவரங்கள், உயிரற்ற பொருட்கள் என்று அத்தனையும் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் பாவப்பட்ட ஜென்மங்கள்தான் இந்த பூச்சிகள். தேனீக்கள் இல்லாமல் மகரந்த சேர்க்கைகள் நடக்குமா? 'இகோலி'கள் இல்லாமல், உயிரினங்கள் வெளியே தள்ளும் கழிவுகள் சிதையுமா? கரையான்கள் இல்லாமல், காய்ந்து போன மரம் மட்டைகள் மட்குமா? கரப்பான் பூச்சிகள், டைனோசர் காலத்திலிருந்தே இருப்பதாக உயிரியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அந்தக் கரப்பான் பூச்சிக்கு இடப்பட்டிருக்கும் வேலை, சுற்றுப்புறத்தைத் தூய்மையாக்குவதுதான். குறிப்பாக, அவை ஏன் சமையலறையில் அதிகமாக இருக்கின்றன. நாம் அந்த இடத்தை தூய்மையாக வைத்திருக்கவில்லை என்பதுதான். தூய்மையாக இருந்தால், அவற்றுக்கு இயல்பாகவே அங்கே வேலையிருக்காது... வேறு இடம் தேடிச் சென்று விடும். 
 
அதேபோல, கொசுக்களின் தேவை... தண்ணீரைத் தூய்மைப்படுத்தும் தவளை இன குஞ்சுகளான தலைப்பிரட்டைகளுக்கு உணவு என்பதுதான். தண்ணீரில் கெமிக்கல் கழிவுகளைக் கொட்டிக் கொட்டி அசுத்தப்படுத்தி விட்டோம். தவளைகள் வாழ வழியில்லாத நிலையில், கொசுக்கள் பெருக ஆரம்பித்துவிட்டன. அவை நோய் பரப்பும் காரணிகளாகவும் மாறிவிட்டன. கொசுக்களுக்கு கூடுதல் வசதியாக வீடுதோறும் தண்ணீர் தேங்கும் வகையில், குப்பைகள் தேவையற்ற பாத்திரங்கள் என்று போட்டு வைத்திருக்கிறோம். கழிவு நீர் ஓடைகளையும், வீடுகளையும், சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்திருந்தால்... கொசுக்கள் போயே போச்சு! செய்ய வேண்டியதையெல்லாம் செய்யத் தவறிவிட்டு, இந்த ஜீவன்களை ஓழிக்கிறேன் என்று சொல்லி, விஷத்தைத் தெளிக்கிறோம்.... அது சொந்தக் காசில் சூன்யம் வைத்துக் கொள்கிறோம் என்று தெரியாமலே! ஆம் இப்படி வயல்காடுகளில் 'பூச்சிமருந்து' என்கிற பெயரில் நெல், காய்கறி என்று பயிர்களின் மீது தெளிக்கப்படும் விஷம்தான் இன்றைக்கு பலவிதமான நோய்களுக்கு காரணமாகி நம்மை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றன. அப்படியிருக்க... வீட்டுக்குள்ளேயே விஷத்தை கண்மூடித்தனமாக தெளித்துக் கொண்டிருந்தால்?

'அதற்காக பாம்பு கடிக்கும்போது... வேடிக்கை பார்க்க வேண்டுமா... தேள் கடிக்கும்போது கையைக் கட்டிக் கொண்டு நிற்க வேண்டுமா?' என்று ஒரு கேள்வி வந்து விழுகிறது. ஒன்றை ஒன்று சார்ந்து அல்லது வேட்டையாடி வாழும் வாழ்க்கைதான் இங்கே விதிக்கப்பட்டிருக்கிறது. அது எல்லை மீறாமல் இருக்க வேண்டும் என்பதுதான் இயற்கை ஆர்வலர்களின் அவா. எந்த பாம்பும், தேளும் தேவையில்லாமல் தன்னுடைய விஷத்தை வீணடிப்பதில்லை. அதேபோல இயற்கைக்கு எதிரான செயல்களிலும் ஈடுபடுவதில்லை.தேவைக்கு மட்டுமே வேட்டையாடுபவைதான் அத்தனை ஜீவன்களும்.... மனிதனைத்தவிர. நாம், இன்னும் எழுபத்தைந்து தலைமுறைக்கு அப்புறம் வரப்போகும் நம் சந்ததிக்கு கூட அல்லவா சொத்து சேர்க்க ஆசைப்படுகிறோம்! தேவையென்றால், ஒட்டுமொத்தமாக ஒரு தோப்பையே அழிப்போம்... மலையையே தூள் தூளாக்குவோம்... ஆறுகளை கபளீகரம் செய்வோம்... யானைகளை வேட்டையாடுவோம்... இப்படி செய்கின்ற தவறுகளையெல்லாம் நம் பக்கமே வைத்துக் கொண்டு... 'கொலையாளிகள்' என்று 'அப்பாவி பூச்சி'களுக்கு மரண தண்டனை கொடுப்பது நியாயம்தானா?


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...