இன்றைய யந்திரத்தனமான வாழ்வியல் சூழலில் பெரியோர்கள், பணிக்குச் செல்லும் ஆண்கள், பெணகள் மட்டுமின்றி மாணவ மாணவியர், குழந்தைகள் உள்பட அனைவருமே மன அழுத்தத்திற்கு உள்ளாவது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. மனச்சோர்வு, மன உளைச்சல் உயர் ரத்தஅழுத்தம், கோபதாபங்கள், வெறுப்பு என அன்றாடம் அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் காணப்படுகிறது. விளைவு இளம் தம்பதியினரிடையே மணமுறிவு காதலர்களுக்கிடையே கசப்புணர்வு, நண்பர்களுக்கிடையே பகைமையுணர்வு, பெற்றோர்-குழந்தைகளுக்கிடையே தவறான புரிதல் மற்றும் குழந்தைகளுக்கு மூளை வறட்சி எனப்பெருகி தற்கொலை, கொலைகள் நடப்பதற்குக்கூட வாய்ப்புகள் ஏற்பட்டு விடுகின்றன.
மனித உறவுகளுக்கிடையேயான நெருக்கம் குறைந்து இடைவெளி அதிகமானதே அனைத்திற்கு அடிப்படைக் காரணம். இதனால் நம் உடலில் பிட்யூட்டரி சுரப்பியில் "ஆக்ஸிடாலின்' என்ற ஹார்மோன் சுரப்பு குறைந்து போகிறது. ரத்த ஓட்டத்தையும் இதயத்தின் இயக்கத்தையும் சீர்செய்து அமைதிப்படுத்தி மூளையைச் சுறுசுறுப்பாக்க வல்லதுதான் இந்த "ஆக்ஸிடாலின்' ஹார்மோன்.
நாம் நேசிக்கும் மனிதர்களை அன்பின் மிகுதியால் கட்டிப்பிடித்து ஆரத்தழுவிடும்போது இந்த ஹார்மோன் நன்றாகச் சுரக்கிறது. இதுமட்டுமல்லாமல் கட்டித்தழுவும் இருவருக்கிடையேயான உறவு பலப்படுவதுடன் பலவித நன்மைகளும் விளைவதாக நரம்பியல் நிபுனர்களும் மருத்துவ விஞ்ஞானிகளும் ஆய்வுகள் மூலம் தெரிவிக்கின்றனர்.
முக்கியமாக, சோர்வான மனநிலை, மனக்கவலை, ரத்தக் கொதிப்பு, கோபம், விரக்தி, வெறுப்பு போன்ற தருணங்களில் கட்டியணைத்தால் ரத்த அழுத்தம் குறைந்து மூளை சுறுசுறுப்பாகிறதாம். நாம் யாரைக் கட்டியணைக்கப் போகிறோம் என்பதை முதலில் மனதில் கொள்ள வேண்டும். மனதிற்கினிய, தோழமையுணர்வுடைய நண்பர்களை நட்போடும், உண்மையான அன்போடும் ஒருவர் கட்டித்தழுவும் பொழுதே பலவீனமான மனம் கூடப் பலப்படுகிறதாம்! இனிமையான மனமாறுதல்களையும் உணர முடிகிறதாம்!
குடும்பங்களில் சமூகச் சுழலில் இவை நண்பர்களுடன், பெற்றோர்களுடன், தம்பதியருடன், காதலர்களுடன், குழந்தைகளுடன், செல்லப் பிராணிகளுடன் என்று பலதரப்பட்ட உறவுகள் மாறுபட்டாலும் உணர்வுகள் ஒன்றுதான். அதாவது ஒரு தாய் தன் சேய்க்குப் பாலூட்டும் போது ஏற்படும் சொற்களால் விளக்கிட முடியாத ஒரு ஆனந்தப் பரவச உணர்வைப் போல நாம் அன்பானவர்களைக் கட்டியனைக்கும்போது இருவருக்குள்ளும் ஏற்படுகிறதாம். இது உறவுகளில் ஏற்படும் சிக்கல்களையும் மனக்குறைகளையும் களைந்திட வழிவகுக்கிறதாம். தவறே செய்தாலும்கூட நம் நேசத்திற்குரியோர், நம்பிக்கைக்குரியோர் நமது முந்தைய அன்பான செயல்பாடுகளை எண்ணிப் பார்த்து தவறை மன்னித்து மறந்து விடுவதற்கும் மனப் பக்குவத்திற்கு வந்துவிடுகிறார்களாம்.
அதே போலவே மனதிற்குப் பிடிக்காதவர்களையோ உள்மனதில் உண்மையான அன்பில்லாதவர்களையோ ஒருவர் கட்டியணைக்கும்போது எதிர்தரப்பில் உள்ளவர்களுக்கு ஒருவித பதற்றம் அதிகரித்து ஆத்திரத்தை வரவழைக்கவும் கூடும். இதனால் ஒருவரின் ஆளுமைத்திறனும், செயல்திறனும் குறைந்து போக வாய்ப்புள்ளதாம்! மேலும் இந்த எதிர்மறையான மனப்போக்கால் "ஆக்ஸிடாலின்' ஹார்மோன் சுரக்காத காரணத்தால் அன்பு மேம்பட வாய்ப்பில்லாமல் காலப்போக்கில் வெறுப்பே மேலோங்கி உறவு முறிந்து போவதற்கும் வாய்ப்புள்ளது என்றும் தெரிய வந்துள்ளதாம்.
பிறகென்ன...? மனதிற்கினிய நண்பர்களையும் உறவுகளையும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அன்போடு கட்டித் தழுவுவதில் என்னதடை? கட்டித் தழுவிடுவோம்! நம் உறவுகளை மேம்படுத்திடுவோம்.
No comments:
Post a Comment