கோச்சடையான் படத்தில், ரஜினிக்கு பதிலாக மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் நடித்தது சின்னத்திரை காமெடி நடிகர் லொள்ளு சபா ஜீவாதான் என்ற செய்தி நீண்டகாலமாகவே உலவிக்கொண்டிருக்கிறது. இந்த செய்தியை திரையுலகினர் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. ரஜினி ரசிகர்களோ இதை நம்பவே இல்லை. இந்நிலையில் அதை உண்மை என நம்ப வைப்பதுபோல் தற்போது ஒரு புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு பதிலாக பல முக்கிய காட்சிகளில், லொள்ளு சபா ஜீவா நடித்திருப்பது உண்மை என தெரிய வருகிறது. தற்போது வெளியாகி உள்ள அந்த புகைப்படத்தில்... மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் நடிக்கும்போது நடிகர்கள் அணியும் விசேஷ உடையில் காட்சியளிக்கிறார் லொள்ளு சபாஜீவா. சினிமாவில் ஆபத்தான காட்சிகளில் கதாநாயகர்களுக்கு பதிலாக டூப் கலைஞர்கள் நடிப்பது வழக்கம்தான். ஆனால் கோச்சடையான் படத்தில் மோஷன் கேப்சர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதால், ஆபத்தான காட்சியில் நடிக்க வேண்டிய அவசியமே கிடையாதே... அப்புறம் என்னத்துக்கு டூப் வைத்து எடுக்க வேண்டும்?
ரஜினிக்கு உடல்நிலை சரியாகி மீண்டும் அவர் நடிக்க வந்தபோது, மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லக் கூடாது என கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் மருத்துவர்கள் விதித்தனர். அதனால்தான் அதிக சிரமமில்லாமல், கோச்சடையான் படத்தை மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் எடுக்க முடிவு எடுத்தார் ரஜினி. அதிக சிரத்தையின்றி நடித்து விடலாம் என்று தீர்மானித்து கோச்சடையான் படப்பிடிப்பை தொடங்கினார்கள். ஆனால் மோஷன் கேப்சர் அரங்கினுள் படப்பிடிப்பு நடத்தியபோது ரஜினி அடிக்கடி களைத்துப்போனாராம். அதன் பிறகே ரஜினியை சிரமப்படுத்தக் கூடாது என்று தீர்மானித்து அவரைப்போற் பாடிலாங்குவேஜ் கொண்ட லொள்ளு சபா ஜீவாவை வர வழைத்து நடிக்க வைத்திருக்கிறார்கள். தீபிகா படுகோனுடன் உள்ள சண்டைக் காட்சி உள்ளிட்ட முக்கியமான காட்சிகளில் ரஜினிக்கு பதில் ஜீவா நடித்துக் கொடுத்திருக்கிறார்.
இத்தனை நாட்கள் வெளியிடப்படாமல் ரகசியமாக இருந்த புகைப்படம் தற்போது வெளிவந்தது எப்படி?
கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு பதில் டூப்பாக லொள்ளு சபா ஜீவா நடித்தபோது, தீபிகா படுகோன் உட்பட பல நடிகர்களுடன் காம்பினேஷன் காட்சிகளில் நடித்திருக்கிறார். அப்போதெல்லாம் தன் மொபைல் போனில் போட்டோக்கள் எடுத்திருக்கிறார். அந்த போட்டோக்களில் ஒன்றுதான் தற்போது வெளியாகி உள்ள புகைப்படம். கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு பதில் டூப்பாக லொள்ளு சபா ஜீவா நடித்தபோது, இதுபற்றி வெளியே யாரிடமும் சொல்லக் கூடாது என்று கட்டளையிட்டிருக்கிறார் சௌந்தர்யா ரஜினிகாந்த். அதுமட்டுமல்ல, கோச்சடையான் படம் வெளியாகி வெற்றியடைந்ததும் சக்சஸ்மீட்டில் உங்களை அழைத்து கௌரவப்படுத்துகிறேன் என்றும் உறுதி அளித்தாராம். கோச்சடையான் படம் வெளியாகிவிட்டநிலையில், சௌந்தர்யா சொன்ன வாக்கை காப்பாற்றவில்லை. அந்த வெறுப்பில் லொள்ளு சபா ஜீவாவே தன் புகைப்படத்தை வெளியிட்டுவிட்டதாக சொல்கிறார்கள்.
No comments:
Post a Comment