|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 May, 2014

யாரை காக்க அமைச்சர் பதவி?

மோடி என்ற ஆடிக்காற்றில், அத்வானி, எம்.எம்.ஜோஷி போன்ற, அம்மிகளே பறந்து கொண்டிருக்கையில், இலவம் பஞ்சுகளான, அன்புமணி, விஜய காந்த் ஆகியோர், எகிறி எகிறி குதிப்பதைக் காணும் போது, வேடிக்கையாகத் தான் உள்ளது. ஒருவர், எவ்வளவு நிர்வாகத் திறமை மிக்கவராகவும், மக்கள் செல்வாக்கு உள்ளவராகவும் இருந்தாலும் கூட, அவரால், இரண்டு முறைக்கு மேல், அமெரிக்க ஜனாதிபதியாக, பதவி வகிக்க முடியாது. அந்தக் கொள்கையை, இங்கே இந்தியாவில் பின்பற்றும், ஒரு அரசியல் கட்சி உண்டென்றால், அது, பா.ஜ., மட்டும் தான். நிரந்தரப் பொதுச் செயலர், பார்லிமென்ட் தலைவர் என்ற பேச்சுக்கே, பா.ஜ.,வில் இடமில்லை. அத்வானியாக இருந்தாலும், எம்.எம்.ஜோஷியாக இருந்தாலும் யாருக்கும், எதற்கும், எப்போதும் விதிவிலக்கு கிடையாது. கடந்த, 20 ஆண்டு கால வரலாற்றைப் புரட்டி பாருங்கள். ஏனைய கட்சிகளில், எத்தனை தலைவர்கள், பதவியில் மாறி இருக்கின்றனர், எத்தனை தலைவர்களை பா.ஜ., அறிமுகப்படுத்தி இருக்கிறது என்பது, தெரிய வரும். 

எதிலும் புதுமையைப் புகுத்த விரும்பும் மோடி, 'சிறிய அரசு; நிறைந்த நிர்வாகம்' என்ற கோஷத்துடன், பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். இங்கு, அரசியல்வாதிகளுக்கு ஓய்வே கிடையாது. காலனாகப் பார்த்து, கையைப் பிடித்து இழுத்துக் செல்வது வரை, பதவி சுகத்தில், மிதந்து கொண்டிருக்கவே விழைவர். அதிலும், காங்கிரசில், 80, 90 வயதுடையவர்களை, அவர்கள் உடம்பில் உயிர் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக, பதவியில் அமர்த்துவர். காலஞ்சென்ற ஜனாதிபதி, சங்கர் தயாள் சர்மா இதற்கு சரியான உதாரணம். அவர் பதவி வகித்த போது, அவரால், தனியாக நடக்கக் கூட முடியாது. இடதுபக்கமும், வலது பக்கமும் இரண்டு பேர், அவரது கைகளை, தோள்களில் தாங்கியபடி அழைத்து வருவர். பார்க்கும் நமக்குத் தான், மனம் பதைபதைக்கும்; காங்கிரஸ் கவலைப்படாது. அதற்கும், ஒரு வழியை மோடி அரங்கேற்றியுள்ளார். அவரது அமைச்சரவையில், 75 வயது பூர்த்தியானவர்களுக்கு, அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், அமைச்சர் பதவி கிடையாது என்று, துணிச்சலாக முடிவெடுத்துள்ளார். 

இந்த நிலையில், அன்புமணி ராமதாசும், விஜயகாந்தும், முறையே தனக்கும், மச்சான் அல்லது மனைவிக்கும் மத்திய அமைச்சர் பதவி கேட்டு மோடியிடம் கோரிக்கை வைத்து, காத்திருக்கின்றனராம். 'வென்றவர்களுக்கே அமைச்சரவையில் இடமில்லை' என்று, மோடி, கறார் காட்டும் போது, ஒருவரையொருவர் நம்பாமல், ஒருவருக்கொருவர் குழிதோண்டி, காலை வாரி, தோல்வியையும் தழுவிய பின், எந்த முகத்தை வைத்து, அமைச்சர் பதவி கேட்கின்றனர்! அதிலும், பிரேமலதாவுக்காம். பிரதமர் பொறுப்பேற்பு நிகழ்ச்சிக்கு, அழைப்பனுப்பி, வரவேற்று ஆலிங்கனம் செய்தது, தப்பாகப் போயிற்று போலும். அன்புமணி மீதோ, சி.பி.ஐ., வழக்கு நிலுவையில் உள்ளது. இல்லை, தெரியாமல் தான் கேட்கிறோம். இவர்களைப் பொறுத்தவரை, அமைச்சர் பதவி என்பது, மக்களைக் காக்கவா? தங்களை, வழக்குகளிலிருந்து காத்துக் கொள்ளவா? 

போகிற போக்கைப் பார்த்தால், கருணாநிதி கூட, 'பிளைட்' பிடித்துச் சென்று, '2ஜி' வழக்கிலிருந்து, ஆ.ராசாவைப் பாதுகாக்க ஒரு அமைச்சர் பதவி, குறிப்பாக, தொலை தொடர்புத்துறை கேட்கத் துணிந்தாலும், ஆச்சர்யமில்லை. ஏற்கனவே, அப்படித் தானே, விரும்பிய துறைகளை, காங்கிரசிடம் கறாராகக் கேட்டுப் பெற்றார். ' பா.ஜ.,வோடு, தி.மு.க., கூட்டணியே வைக்கவில்லையே... எப்படி ஆ.ராசாவுக்கு அமைச்சர் பதவி கேட்பார்' என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? 'வரும், 2016 சட்டசபைத் தேர்தலில், கூட்டணி வைப்போம். பா.ஜ.,வைச் சேர்ந்தவர், முதல்வராகப் பதவி வகிக்கலாம். ஸ்டாலின், துணை முதல்வராக இருக்கட்டும். அதற்கு, 'அட்வான்சாக' ஆ.ராசாவுக்கு, இப்போது மத்திய அமைச்சர் பதவி ப்ளஸ், ராஜ்யசபா சீட் கொடுங்கள்' என்று கேட்டாலும் வியப்பதற்கில்லை. எப்பூடி?

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...