சமூக வலைதளங்கள் மற்றும் அரசு தொடர்புமொழியாக இந்திக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு, மத்தியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி அரசு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இந்தியாவில் 25 சதவீதத்தினர் மட்டுமே இந்தியை தங்களது தாய்மொழி என தெரிவித்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்திக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என அரசு அதிகாரிகளுக்குமத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கை நாடு முழுவதும் சர்ச்சையையும், விவாதத்தையும் கிளப்பி விட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்திலிருந்து எதிர்பார்த்ததுபோன்றே திமுக தலைவர் கருணாநிதி முதல் எதிர்ப்பு குரலை உயர்த்த, அவரைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவும் இந்தி திணிப்பை எதிர்த்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் தமிழக பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக, பாமக மற்றும் பாரிவேந்தரின் ஐஜேகே ஆகிய கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழக அளவில் நிலைமை இதுவென்றால், தேசிய அளவில் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளன. மகராஷ்ட்ராவில் மராத்தியர்களுக்கும், மராத்தி மொழிக்கும் ஆதரவாக குரல் கொடுக்கும் பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனா, மத்திய அரசின் இந்தி ஊக்குவிப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அக்கட்சி பத்திரிகையான 'சாம்னா'வில் இது தொடர்பாக எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில், இந்தி தேசியமொழி ( ராஷ்ட்ரா பாஷா) என்றும், பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி இந்தியை ஊக்குவிக்காவிட்டால் வேறுயார் ஊக்குவிப்பார்கள்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளது.
சிவசேனாவிலிருந்து பிரிந்து சென்று மகாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா கட்சியை தொடங்கிய ராஜ் தாக்கரே இதுகுறித்து இன்னும் வாய் திறக்கவில்லை. மகராஷ்ட்ரா அரசு அலுவலகங்களில், குறிப்பாக காவல்நிலையங்களில் மராத்தி மொழிதான் தொடர்பு மொழியாக இருக்க வேண்டும் என சிவசேனாவை காட்டிலும் மிக அதிகமாக குரல் கொடுத்தவர் ராஜ் தாக்கரே. ஆனால் அவரும் தற்போது மவுனமாகத்தான் உள்ளார்.சமீபத்தில் பூடான் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு தலைவர்களுடன் பேசுகையிலும், நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஆற்றிய உரையின்போதும் இந்தியில்தான் பேசினார். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேற்கூறிய உத்தரவு, இந்தி மொழியை நாடு முழுவதும் பரவலாக கொண்டு செல்லும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள செயல்திட்டத்தின் முதல் நடவடிக்கையாக இருக்கலாம் என கூறுகின்றனர் இந்த உத்தரவை எதிர்ப்பவர்கள்.
இதில் இன்னொரு வேடிக்கை இந்தி மொழி பேசும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மத்திய அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுதான். இது தொடர்பாக அவர் கூறுகையில், "இந்தி மொழியை ஊக்குவிப்பது நல்ல விஷயம்தான் என்றாலும், அனைத்து பிராந்திய மொழிகளையும் மத்திய அரசு சமமாக நடத்த வேண்டும். நமது தேசம் பாரம்பரிய வளமிக்க பிராந்திய மொழிகளை கொண்டது. எனவே அந்த மொழிகளையும் ஊக்குவிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார். அதே சமயம் மத்திய அரசு, இந்தி திணிப்பு என்ற குற்றச்சாட்டை நிராகரிக்கிறது. இந்தியை ஊக்குவிப்பதுஎன்பது மற்ற பிராந்திய மொழிகளை அழிப்பதாக அர்த்தமாகாது என மத்திய உள்துறை இணையமைச்சர் கிரென் ரிஜிஜூ விளக்கம் அளித்துள்ள நிலையில், பா.ஜனதா செய்தி தொடர்பாளர் முக்தார் அப்பாஸ் நக்வியோ, இந்தி பேசுபவர்கள் படிப்பறிவில்லாதவர்களாகவும், ஆங்கிலத்தில் பேசுபவர்கள் கல்வியில் சிறந்தவர்களாகவும் முன்னர் கருதப்பட்டதாக, ஆங்கில செய்தி சேனல் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறி, புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளார்.
" இந்தியை ஊக்குவிக்கும் மத்திய அரசின் முயற்சி நாட்டில் இந்தி பேசும் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும்.மேலும் நமது சமூகத்தில் ஆங்கிலத்தில் பேசுபவர்கள் மட்டுமே புத்திசாலிகள் என்ற மாயைக்கு முற்றுப்புள்ளி வைக்க இதுவே தக்க தருணம்" என்றும் அவர் அந்த பேட்டியில் மேலும் கூறியுள்ளார்.இந்நிலையில் மத்திய அரசின் இந்தியை ஊக்குவிக்கும் நடவடிக்கையை எதிர்ப்பவர்கள், "இந்தி பேசும் மாநிலங்களில் வேண்டுமானால் மத்திய அரசு இந்தியை ஊக்குவிக்கட்டும். மேலும் அம்மாநிலத்தின் அரசு அலுவலகங்களின் தொடர்புமொழியை கூட ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி என மாற்றட்டும். ஆனால் இந்தி பேசாத மாநிலங்கள் மீது இதே நடவடிக்கையை திணிக்கக்கூடாது" என்கின்றனர்.
மேலும் இந்தி திணிப்பு நடவடிக்கை, இந்தி மொழியா...ஆங்கிலாமா? என்று இருந்த விவாதம், தற்போது இந்தி மொழியா... மற்ற பிராந்திய மொழிகளா? என்ற விவாதத்தை தொடங்கி வைத்துவிட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். அத்துடன் 'இந்தி நமது தேசிய மொழி' என உரிமை கொண்டாடுவதும் கடும் விமர்சனத்தை கிளப்பி உள்ளது. இந்திய அரசியலமைப்பு சாசனப்படி நாட்டின் 15 முக்கிய மொழிகள் அனைத்தும் தேசிய மொழிகளாகவே கருதப்பட வேண்டும் என்றும், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளும் அரசு அலுவலகங்களின் பிரதான தொடர்பு மொழிகளாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் 70 சதவீதம் பேர் இந்தியில் பேசுவதாக இந்தியை ஊக்குவிப்பவர்கள் கூறினாலும், உண்மை நிலை வேறாக உள்ளது. 2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மத்திய அரசின் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 45 சதவீதம் பேர் மட்டுமே இந்தியை பேசுபவர்களாகவோ அல்லது தெரிந்தவர்களாகவோ உள்ளனர். அதே சமயம் 25 சதவீதம் பேர் மட்டுமே இந்தியை தங்களது தாய்மொழி என தெரிவித்துள்ளனர். அதாவது சுமார் 25 கோடிக்கும் சிறிது கூடுதலானவர்களே இந்தியாவில் உண்மையான இந்தி பேசுகின்றனர். மற்றவர்கள் பேசுவது உண்மையான இந்தி அல்ல. அவர்கள் வெவ்வேறான இந்தியை அதாவது போஜ்புரி, மகாதி, மைதிலி, கார்வாலி, தோக்ரி, ராஜஸ்தானி, மார்வாரி, ஹரியான்வி போன்ற கலப்பு இந்தியை பேசுகிறார்கள். இவர்கள் அனைவரையும் சேர்த்தால்தான் இந்தியாவில் இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கை 45 சதவீதமாக உள்ளது. இதன்மூலம் மீதமுள்ள 55 சதவீதத்தினர் இந்தி பேசாதவர்களாகவும், இந்தி மொழியே தெரியாதவர்களாகவும் உள்ளனர்.
அதே 2001 ஆம் ஆண்டைய கணக்கெடுப்பின்படி இந்தியா முழுவதும் 42 சதவீதம் பேர் இந்தியை பேசுகிறார்கள் அல்லது புரிந்துகொள்கிறார்கள் என தெரியவந்துள்ளது. ஆனால் 25 சதவீதத்தினர் மட்டுமே இந்தியை தங்களது தாய் மொழியாக அறிவித்துள்ளனர். 8.5 கோடி பேர் பெங்காலி பேசுவதாகவும், 7.5 கோடி பேர் தெலுங்கு பேசுவதாகவும், 7 கோடி பேர் மராத்தி பேசுவதாவும், 6 கோடி பேர் தமிழ் பேசுவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் உருது பேசுபவர்கள் 5 கோடி, குஜராத்தி 4.6 கோடி, கன்னடம் 4 கோடி, மலையாளம் 3.5 கோடி, ஒரியா 3.3 கோடி, பஞ்சாபி 3 கோடி, அஸ்ஸாமி 1.5 கோடி, சந்தாலி 64 லட்சம் பேர், 55 லட்சம் பேர் காஷ்மீரி மொழி பேசுவதாகவும் அந்த கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
வடகிழக்கு மாநிலங்களிலோ 50 க்கும் அதிகமான வெவ்வேறு கிளைமொழிகளை பேசுகின்றனர். இந்திபேசாத மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் அல்லாத மாநிலங்களில் உள்ள பழங்குடி இனத்தவர்களோ, வேறுவிதமான மொழியை பேசுகின்றனர். இந்த பேச்சுக்கள் இந்தி அல்லது வேறு எந்த கிளை மொழியுடனும் தொடர்பு இல்லாதவைகளாக உள்ளன. மேலும் கர்நாடகா மாநிலங்களில் பேசப்படும் கொங்கணி, துளு, கொடாவா, பியாரி போன்றவை இந்தியுடன் எவ்விதத்திலும் தொடர்பு இல்லாதவை. எனவே இந்தியாவில் 70 சதவீதம் பேர் இந்தி பேசுகிறார்கள் அல்லது புரிந்துகொள்கிறார்கள் எனக் கூறுவதற்கு முன்னர், மத்திய அரசு இந்த 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பை கவனத்தில் எடுத்துக்கொண்டு பேசவேண்டும் என நிபுணர்களும், நவீன வரலாற்று ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.
" ஒரே தேசிய மொழி என்ற தவறான நம்பிக்கையை வலியுறுத்தியதால் பாகிஸ்தான் பிரிந்ததையும், இலங்கை உள்நாட்டு போரில் மூழ்கி, இன்னமும் அதன் பாதிப்புகள் மற்றும் விளைவுகளிலிருந்து வெளிவராமல் தவித்துக்கொண்டிருப்பதையும் மறந்துவிடக்கூடாது" என எச்சரிக்கிறார் நவீன வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவரான ராமச்சந்திர குஹா. இந்நிலையில் இந்தி திணிப்புக்கு தமிழகத்திலிருந்து எழுந்துள்ள கடும் எதிர்ப்பு மற்றும் ஜூலையில் தொடங்க உள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இவ்விவகாரம் கிளப்பப்படும் என்பதாலும், இந்தியை ஊக்குவிக்கும் தனது சுற்றறிக்கையில் மத்திய அரசு ஏதாவது திருத்தங்கள் செய்யும் என எதிர்பார்க்கலாம்.
No comments:
Post a Comment