'குடும்ப பட்ஜெட்டில் முதல் இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு மின் கட்டணம், ஜெட் வேகத்தில் எகிறிக்கொண்டிருக்கிறது. குண்டு பல்பினால், அதிக மின்சாரம் செலவாகும் என்பதால், இன்று பெரும்பாலான வீடுகளிலும் குறைந்த மின்சாரத்தில், அதிக வெளிச்சத்தைத் தரும் சி.எஃப்.எல். பல்புகள்தான் பயன்படுத்தப்படுகின்றன.
ஒரு குண்டு பல்பு, தான் உட்கொள்ளும் எரிசக்தியில் ஐந்து சதவிகிதம் மட்டுமே வெளிச்சமாக மாற்றுகிறது. ஒரு சி.எஃப்.எல் பல்பு, குண்டு பல்பைவிட ஐந்து மடங்கு குறைவாகவே மின்சக்தியை உட்கொள்கிறது. சி.எஃப்.எல் பல்புகள் மூலம் எரிசக்தி மிச்சமாகிறது; கார்பனின் அளவும் குறைகிறது. அப்படியானால், சி.எஃப்.எல் பல்புகளை, 'சுற்றுச்சூழலின் நண்பன்’ என்று கூறலாமா? ஆனால், அப்படிக் கூறத் தயங்குகிறார்கள் ஆய்வாளர்கள்.
சி.எஃப்.எல். பல்புகள் கை தவறி விழுந்து உடைந்துவிட்டால், உடனே அந்த இடத்தைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. ஒவ்வொரு சி.எஃப்.எல். பல்புகளிலும் 68 மில்லிகிராம் மெர்க்குரி இருக்கிறது. இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம், ஆர்சனிக், துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மை உடையது. இந்த விஷத்தை முகர்ந்தாலோ, சருமத்தில் பட்டாலோ, மைக்ரேன் தலைவலி, மூளை பாதிப்பு, உடல்அசைவுகள் பாதிக்கப்பட்டு நிலைதடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம். அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு, சருமப் பாதிப்புகளும் ஏற்படலாம். சி.எஃப்.எல். பல்புகள் உடைந்துவிட்டால், பாதுகாப்பாக இருப்பதுபற்றியும் சுகாதாரத் துறை விளக்கியுள்ளது.
அந்த அறையிலிருந்து உடனே வெளியேறிவிட வேண்டும். நெடி மூக்கில் ஏறக் கூடாது. 15 நிமிடங்களுக்குப் பிறகே அப்புறப்படுத்த வேண்டும். நொறுங்கிக்கிடக்கும் கண்ணாடி, காலில் படாமல் பார்த்துக்கொள்ளவும்.
வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது. வேக்வம் உறிஞ்சப்பட்டால், அது உள்ளே ஒட்டிக்கொள்ளும். அதைத் திரும்ப உபயோகிக்கும்போது மெர்க்குரித் துகள்கள் அறையின் மற்ற பகுதிகளுக்கும் பரவி, மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.
கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு, துடைப்பத்தால் சுத்தப்படுத்தினால் போதும்.
சிதறிய துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் சேகரித்து, 'சீல்’ செய்து, அவற்றைக் குப்பைத்தொட்டியில் போடாமல், கார்ப்பரேஷன் ஆட்கள் வரும்போது, தனியாக அவர்களிடம் கொடுத்து, பாதுகாப்பாக அப்புறப்படுத்துமாறு சொல்ல வேண்டும்.
சி.எஃப்.எல் பல்புகளை மிக அருகில், குறிப்பாக மேஜை விளக்குகளாகப் பயன்படுத்த வேண்டாம். மைக்ரேன், கண் எரிச்சல், வலிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால், சி.எஃப்.எல் பல்புகளை மாற்றிவிட்டு, எல்.இ.டி. அல்லது ஹலோஜன் பல்புகளைப் பொருத்துவது பாதுகாப்பு.
No comments:
Post a Comment