|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 December, 2014

8 year old Madison Loves Books


டிஜிட்டல் யுகத்தில் புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டதாக கவலை பரவலாக இருக்கிறது. அதிலும் ஸ்மார்ட் போன் திரைகளை பார்த்தபடி வளரும் வருங்கால தலைமுறைக்கு புத்தகம் படிக்கும் ஆர்வம் அரிதாகிப்போகுமோ என்ற அச்சம் வாட்டும் நிலையில், எட்டு வயது சிறுமி ஒருவர் புத்தகம் படிப்பதன் அவசியம் பற்றி அருமையாக எடுத்துரைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். புத்தக வாசிப்பு பற்றிய அந்த சிறுமியின் வீடியோ உரை இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் கிலிவ்லாண்ட் பகுதியை சேர்ந்த மேடிசன் ரீட் எனும் சிறுமிதான் இப்படி வியக்க வைத்திருப்பவர். இலவச நூலகம் ஒன்றின் துவக்க விழாவில்தான், மேடிசன் புத்தக வாசிப்பின் அருமை பற்றி பேசி கைத்தட்டல் வாங்கியிருக்கிறார்.
அமெரிக்காவில் சிறுவர்கள் மத்தியில் புத்தகம் படிக்கும் வழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் லிட்டில் பிரி லைப்ரரி எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ் கிலிவ்லண்டின் பேர்பாக்ஸ் பகுதியில் நடைபெற்ற புதிய நூலக துவக்க விழாவிற்கு சிறுமி மேடிசன் தனது அம்மாவுடன் சென்றிருந்தார். அவரது அம்மா டிரேசி ரீட் திட்டத்தின் பொறுப்பாளர்களில் ஒருவராக இருப்பவர்.

அப்போது, WKYC 3 தொலைக்காட்சி சேனல் சார்பில் சிறுமி மேடிசன் ரீடிடம் புத்தகங்கள் பற்றி கேட்கப்பட்டது. இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் சிறுமி, உலகிற்கு புத்தகங்கள் ஏன் தேவை என்று உற்சாகமாக பேசத் துவங்கினார். ஒவ்வொரு கேள்விகளுக்கும் சிறுமி எந்த தயக்கமும் இல்லாமல் பேசத்துவங்கி, மெல்ல புத்தகங்களின் அருமை பற்றியும் புத்தகங்களை படிக்க வேண்டிய அவசியம் பற்றியும் விவரிக்க துவங்கியதும் கூடியிருந்தவர்கள் வியந்து போய் தங்களை அறியாமல் கைத்தட்ட துவங்கினர். சிறுமி பேசி முடித்த போது கரவொலி இன்னும் பலமாக எழுந்தன.

பார்வையாளர்கள் அனைவரும் சிறுமியை பாராட்டிய நிலையில், அங்கிருந்த வீடியோகிராபர் ஜெப் ரெய்டல் மேடிசன் பேச்சை வீடியோவாக பதிவு செய்திருந்தார். இந்த வீடியோ, லிட்டில்லைப்ரரி ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. வீடியோவை பார்த்த பலரும் சிறுமியின் கருத்தால் கவரப்பட்டு அதை பகிர்ந்து கொள்ள, வீடியோ பல்லாயிரக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு இணையத்தில் பிரபலமாகியுள்ளது.

இந்த பேட்டியின் போது மேடிசன் அப்படி என்னதான் சொல்லியிருந்தார் என்று பார்க்கலாமா? உலகிற்கு புத்தகம் தேவை, புத்தகங்கள் இல்லாமல் உலகம் எப்படி இருக்கும். கார்களுக்கு பெட்ரோல் போல் அவை தான் நமது மூளையை இயக்கும் எரிபொருளாக இருக்கின்றன. கார்கள் பெட்ரோல் இல்லாமல் இயங்க முடியாது என்பது போல நமது மூளையும் புத்தகங்கள் இல்லாமல் இயங்க முடியாது. எனவே உலகிற்கு புத்தகங்கள் தேவை” என்று ஒரு கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

ஒரு புத்தகம் தொலைந்தால் கூட எனது இதயம் நொறுங்கிப்போகும் என்றும் கூறியுள்ள மேடிசன், புத்தகங்கள் இல்லாமல் உலகம் வெறுமையாக இருக்கும். தண்ணீர் இல்லாத பக்கெட் போல, ஞானம் இல்லாத மூளை போல” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தன்னிடம் புத்தக கடை இருந்தால் உலகில் உள்ள எல்லோருக்கும் 2 புத்தகங்களை கொடுப்பேன் என்றும் உற்சாகமாக கூறியுள்ளார். 

புத்தகங்கள்தான் எல்லாவற்றையும் திறந்துவிட்டன, வண்ணங்கள் உண்டாயின, கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன என்றும் அவர் கூறியுள்ளார்.

அதனால்தான் இந்த பேட்டி, வீடியோ பார்ப்பவர்களை கவர்ந்து புத்தகங்களின் அவசியத்தை இதைவிட அருமையாக எடுத்துரைக்க முடியாது என பாராட்ட வைத்துள்ளது.

இந்த வீடியோ, புத்தக வாசிப்பு பற்றிய ஆர்வத்தை தூண்டும் வகையில் இருப்பதை அடுத்து லிட்டில் பிரி லைப்ரரி திட்டத்தின் தூதர்களில் ஒருவராக சிறுமி மேடிசன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த திட்டத்தின் செயல் இயக்குனர் டாட் போல், தன்னைவிட சிறுமி மேடிசன் புத்தக வாசிப்பு திட்டத்துக்கான அருமையான செய்தி தொடர்பாளராக இருப்பதாக பாராட்டியுள்ளார்.



No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...