உயிர்கள் வாழ இன்றியமையாதது காற்று. தாவரங்கள் உணவு தயாரிக்க கார்பன் டை ஆக்ஸைடு எனும் கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு, பிராணவாயுவான ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. உயிரினங்கள் பிராணவாயுவை உள்வாங்கி கரியமில வாயுவை வெளியிடுகின்றன. இதுதான் காற்றின் சுழற்சி.பிராணவாயுவை உற்பத்தி செய்யும் காடு எனும் தொழிற்சாலைகளை அழித்ததன் விளைவு, காற்றில் கரியமில வாயுவின் ஆதிக்கம் அதிகரித்தது. தொழிற்சாலை, வாகனங்களின் புகையால் காற்று மேலும் மாசடைந்து, மனிதஇனம் ஆரோக்கியமின்றி அலைந்து கொண்டிருக்கிறது.
புகையால் அலர்ஜிபெட்ரோலியம், இரும்பு, பிளாஸ்டிக், காகித தொழிற்சாலைகளாலும் வாகன புகையாலும் கார்பன் மோனாக்ஸைடு காற்றில் அதிகம் கலந்து, சரும பாதிப்பு, அலர்ஜி ஏற்படுகிறது. நிலக்கரியை எரிப்பதால் கந்தக ஆக்ஸைடு உருவாகிறது. மரங்கள் பட்டுப்போகின்றன. மனிதர்களுக்கு மூச்சுக்குழல் நோய்கள் உருவாகின்றன. ஆஸ்துமாவுக்கு அடித்தளமாகிறது. நிலக்கரி, எண்ணெய், இயற்கை எரிவாயுவை எரிப்பதால் நைட்ரஜன் ஆக்ஸைடு காற்றில் கலக்கிறது. இதை சுவாசித்தால் மூச்சுத்திணறலும், சிலநேரங்களில் மரணமும் ஏற்படுகிறது.
காட்டுத்தீ, நிலக்கரி, குப்பைக் கழிவுகள், எலக்ட்ரானிக் கருவிகள் எரிக்கும் போது நுண்துகள்கள் காற்றில் கலக்கின்றன. இவை நுரையீரல் தந்துகிகளில் ஒருவித எரிச்சலை ஏற்படுத்தி அடைப்பை உண்டாக்குகிறது. 1984ல் மத்திய பிரதேசம் போபாலில் இருந்த யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் வாயு கசிவால் (மித்தைல் ஐசோ சயனைட்) 20ஆயிரம் பேர்
இறந்தனர். 5000 பேர் அதிகம் பாதிப்படைந்தனர். ஒன்றரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். தொழிற்சாலையை சுற்றி 100 கிலோமீட்டர் சுற்றளவிற்கு, மண்பரப்பு முழுவதும் அடர்த்தியான துகள்களால் மூடப்பட்டதால், விவசாயம் செய்ய முடியவில்லை. இன்றளவும் அப்பகுதி மக்கள் பலவகையான நோயின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். குறைபாடுள்ள குழந்தைகளே பிறக்கின்றன.
காற்று மாசு நோய்கள்காற்று மாசுபாட்டால் உடல் மட்டுமல்லாது, மனதிலும், நடத்தையிலும் சீர்குலைவு ஏற்படுகிறது. நுரையீரல் செயல்பாட்டை குறைக்கிறது. கண், மூக்கு, வாய், தொண்டையில் எரிச்சல் ஏற்படு
கிறது. ஆஸ்துமா, இருமல், சுவாசம் தொடர்பான நோய்களின் அறிகுறிகள் ஏற்படுகின்றன. மாசுபட்ட காற்று மனிதனை பாதிக்கும் போது வரும் நோய்களில் முதன்மையானது, நுரையீரல் நோய். சிகரெட் புகைப்பதாலும், மாசுபட்ட காற்றை சுவாசிப் பதாலும் வருகிறது. COPD(Chronic Obstructive Pulmonary Disease) என்பது நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்.
மூச்சு திணறல், மார்பு இறுக்கம், சளியுடன் கூடிய இருமல், சி.ஓ.பி.டி.,யின் முக்கிய அறிகுறிகள். இந்தியாவில் சி.ஓ.பி.டி., ஏற்பட சிகரெட் புகை முக்கிய காரணம். புகையிலை, ரசாயன புகையும் இந்நோய்க்கு முக்கிய காரணம். புகைப்பவர்களிடம் இருந்து
மற்றவர்களுக்கு பரவும் புகை, காற்று மாசுபாடு, ரசாயன தீப்பொறி அல்லது துாசியை
சுவாசிப்பதால் சி.ஓ.பி.டி., வரலாம். பெரும்பாலும் 40 வயதிற்கு மேற்பட்டவர்களிடம் இந் நோய் அறிகுறிகள் காணப்படும். மிக குறைந்தளவு வாய்ப்பாக,
மரபியல் கூறு காரணமான கல்லீரலில் உற்பத்தியாகும் புரதமான, ஆல்பா - 1 'ஆன்டி டிரிப்சின்' பற்றாக்குறையால், இளம் வயதினருக்கும் நோய் வரலாம்.
அறிகுறிகள் இருமல், சளியுடன் கூடிய இருமல், மூச்சு திணறல், மூச்சு விடும் போது விசில் போன்ற சத்தம் வருதல், மார்பு இறுக்கம் வரலாம். புகைபிடிப்பவர்கள் இந்த அறிகுறி இருந்தால், புகை
பிடிப்பதை நிறுத்த வேண்டும்.மூச்சுக்காற்று நுரையீரலுக்குள் உள்ளே, வெளியே எவ்விதம் செயல்படுகிறது என்பதை, நுரையீரல் செயல்பாட்டு பரிசோதனை மூலம் கண்டறியப்படுகிறது. நோய்க்கு முழுமையான தீர்வு இல்லை என்றாலும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தலாம். புகைபிடிப்பதை தவிர்க்க வேண்டும்; நுரையீரல் எரிச்சலுாட்டிகள், துாசியை தவிர்க்க வேண்டும்.
சிகிச்சை என்ன நோயின் தீவிரத்தை பொறுத்து, 'பிரான்கோ டைலேட்டர்' மருந்துகள் கொடுக்கலாம். இவை குறுகிய காலமாக 6 முதல் 12 மணி நேரம் வரை செயல்படும். அறிகுறிகள் ஏற்படும் போது மட்டும் இவற்றை பயன்
படுத்தலாம். தீவிரமாக இருந்தால் 'இன்ஹேலர்' அடங்கிய மருந்துகளை பரிந்துரைக்கலாம். இந்நோயாளிகளுக்கு காய்ச்சல் பிரச்னையை ஏற்படுத்தலாம் என்பதால், அதை தடுக்க தடுப்பூசி, நிமோனியாவை தடுக்கும் தடுப்பூசியும் பரிந்துரைக்கப்படுகிறது. இந்நோயாளிகளின் சுவாச பிரச்னைகளை கட்டுப்படுத்த, நுரையீரல் புனர்வாழ்வு உதவுகிறது. முறையான உடற்பயிற்சி திட்டம், நோய் மேலாண்மை பயிற்சி, ஊட்டச்சத்துடன், உளவியல் ஆலோசனையும் அவசியம். ஆக்ஸிஜன் சிகிச்சை நோயாளிகளின் ரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைந்தஅளவு இருந்தால், ஆக்ஸிஜன் சிகிச்சை
உதவுகிறது. தீவிர நோயுள்ளவர்களுக்கு, கூடுதல் ஆக்ஸிஜன் பயன்படுத்தி, இருதயம் மற்றும் மற்ற உறுப்புகள் சேதமடையாமல் பாதுகாக்கப்படுகிறது. எதிர்கால சந்ததியினருக்கு சுத்தமான, சுகாதாரமான காற்றை கொடுப்பது நமது கடமை. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், ஆவியாகும் வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தவும் மலேசிய அரசு, தனிப்பட்ட நபர்களின் போக்கு
வரத்தில் பல்வேறு நடைமுறைகளை கொண்டு வந்துள்ளது. பாதாள ரயில்களை பயன்படுத்தி வெளியேறும் வாயுக்களின் அளவை குறைப்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இவை நம் நாட்டில் அமலாக வேண்டும்.
சைக்கிள் நல்லதீர்வு இயந்திரங்கள், வாகனங்களின் பராமரிப்பை உறுதிசெய்து, உதிரி பாகங்களை மாற்றுவது. தீங்கு விளைவிக்கக்கூடிய இயந்திரங்களின் பயன்பாட்டை தவிர்ப்பது அவசியம். எளிமையான முறையில் காற்று மாசு கட்டுப்பாடு அவசியம். தீங்கற்ற வாயுக்களில் இருந்து மாசுக்களை பிரித்தெடுக்க வேண்டும். வளிமண்டலத்தில் வாயுக்கள் வருவதற்கு முன், மாசுக்களை மாற்ற வேண்டும். கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடை
தக்கவைக்கும் தாவர வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும். தனி நபர் பயன்பாட்டிற்கு, முடிந்தவரை சைக்கிளை பயன்படுத்த வேண்டும்.என்ன செய்ய வேண்டும் மலைகளையும், காடுகளையும் அழிக்காமல் பாதுகாக்க வேண்டும். நிலம், காற்று, நீரை மாசுபடுத்தும் வேலிக்கருவை, யூகலிப்டஸ் வளர்ப்பதற்கு தடைவிதிக்க வேண்டும். பசுமையாக, அடர்ந்து வளரும் மரங்களை நடவேண்டும். மரங்களை வெட்டக்கூடாது. தொழிற்சாலைகளில் இருந்து வெளிப்படும் விஷ வாயுக்களை கட்டுப்படுத்த,
அப்பகுதியில் அதிகளவு மரங்களை நடவேண்டும். வாகனங் களுக்கு ஈயமில்லாத பெட்ரோலை பயன்படுத்த வேண்டும். மரபுசாரா எரிசக்தி அல்லது காற்று, சூரிய ஒளி மூலம் தயாரிக்கும் தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாடுகளை மறுசுழற்சி செய்யும் முறையை ஊக்குவிக்க வேண்டும். அரசு கடுமையான சட்டங்களை நடைமுறைபடுத்தினால் தான், காற்று மாசுபாட்டை குறைக்கமுடியும். துாய காற்றின் அவசியம் குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
நம் எதிர்கால சந்ததியினர் பிராணவாயுவை, பைகளில் விலைக்கு வாங்கி சுவாசிக்கும் நிலைக்கு தள்ள வேண்டுமா... இயற்கையின் பொக்கிஷங்கள் தான் எதிர்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லும் செல்வங்கள். முடிந்தவரை, காற்றை மாசுபடுத்தக்கூடாது என ஒவ்வொருவரும் சபதம் மேற்கொண்டால், மாசில்லா காற்றை சுவாசித்து ஆரோக்கியமாக வாழலாம்.
No comments:
Post a Comment