|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 December, 2016

ஊத்திய மூடிய உண்மைகள்!


ஏன், யார் என்ற எந்த மர்ம முடிச்சுக்களும் அவிழாமலேயே ஊத்தி மூடப்பட்டது ஐடி பொறியாளர் சுவாதி கொலை வழக்கு. கொலை என்றால் சாதாரண கொலை அல்ல. பட்டப் பகலில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த ரயில் நிலையத்தில் கொத்தி எடுக்கப்பட்டது சுவாதியின் உடல். ரத்த வெள்ளத்தில் கிடந்த சுவாதியை சடலமாக ரயில்வே போலீசார் மீட்டனர். அந்த கொலை ஏன் செய்யப்பட்டது? யார் செய்தார்கள்? என்ற எந்தக் கேள்விக்கும் பதில் கிடைக்காமலேயே ஊத்தி மூடப்பட்டுவிட்டது இந்த 2016 ஆண்டின் மிகப் பெரிய துயரம். சென்னை சூளைமேடு, கங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுவாதி. ஐடி பொறியாளரான இவர் இன்போசிஸ் நிறுவனத்தில் பணி செய்து வந்தார். எப்போதும் போல் செங்கல்பட்டு பரனூரில் உள்ள அலுவலகம் செல்ல காலை 6 மணிக்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வந்தார். கண் இமைக்கும் நேரத்தில் அவரை பின் தொடர்ந்து வந்த யாரோ ஒரு மர்ம நபர் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

ரத்த வெள்ளத்தில் சில மணி நேரங்கள் கிடந்த சுவாதியின் உடலை ரயில்வே போலீசார் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினார்கள். ஆனால், விசாரணையில் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டதாலும், கொலையாளி யார் என்பதை கண்டுபிடிக்க ரயில்வே போலீசார் தாமதம் செய்து வந்ததாலும், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலையீட்டால் சுவாதி கொலை வழக்கு விசாரணை மாநில காவல்துறைக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து, அதிரடியாக விசாரணையை தமிழக போலீசார் மேற்கொண்டாலும் கொலைக்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதற்குள் பல்வேறு யூகங்களும் கட்டுக் கதைகளும் சுவாதி பற்றி உலா வரத் தொடங்கின. சுவாதியை யாரோ ஒருதலையாக காதல் செய்ததாகவும், அதனை சுவாதி ஏற்றுக் கொள்ளாததால் கொலை செய்து விட்டதாகவும் வதந்திகள் பரவின.

இதற்கிடையே, பழைய நடிகர் ஓய். ஜி. மகேந்திரன், சுவாதி என்ற பிராமணப் பெண்ணை பிலால் மாலிக் என்ற மிருகம் கொன்றுவிட்டதாகவும், கொலையுண்டவர் பிராமணப் பெண் என்பதால் தமிழகத்தில் மயான அமைதி நிலவுவதாகவும் டுவிட்டரில் பதிவிட்டு குட்டையை குழப்பினார். அதற்கு கடுமையான எதிர்ப்பு வரவே தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து அந்தப் பதிவை நீக்கியதோடு, மன்னிப்பும் கேட்டார் ஒய்.ஜி. மகேந்திரன். இப்படியே போன கொலை வழக்கில் திக்குத் தெரியாமல் திணறிக் கொண்டிருந்த தமிழக போலீஸ், அதிரடியாக நெல்லை மாவட்டம் மீனாட்சி புரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர்தான் குற்றவாளி என்று அவருடைய புகைப்படத்தை வெளியிட்டது. பின்னர், அவரது வீட்டிலேயே வைத்து அவரை கைது செய்தது. கைது செய்த போது ராம்குமார் கழுத்தை அறுத்துக் கொண்டதாக கூறி போலீசார் ராயப்பேட்டை மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். பின்னர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார் ராம்குமார்.


சுவாதி கொலை வழக்கில் குற்றவாளி என்று கூறி கைது செய்யப்பட்ட ராம்குமார், தான் இந்தக் குற்றத்தை செய்யவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். போலீசார் ராம்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர், மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில், புழல் சிறையில் இருந்த ராம்குமார் செப்டம்பர் மாதம் 18ம் தேதி திடீரென மின்சார கம்பியை வாயில் கடித்து தற்கொலைக்கு முயன்றார் என்று கூறி பின்னர் மரணம் அடைந்தார் என்று போலீசார் அறிவித்தனர். இரும்பு மனிஷி என்று சொல்லப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் இருந்த சிறைத் துறையின் கீழ் கடும் கட்டுப்பாடும், பலத்த பாதுகாப்பும் உள்ள புழல் சிறையில், ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார் என்பது நகைப்புக்குரியதாகவும், பொருமலுக்குரியதாகவும் சமூக ஆர்வலர்களால் பார்க்கப்பட்டது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ராம்குமாரின் மர்ம மரணம் பல கேள்விகளையும் இந்த சமூகத்தின் முன் எழுப்பியது. அவரது தந்தையும், ராம்குமாரின் மரணத்தில் உள்ள உண்மையை வெளி கொண்டு வர சட்டப் போராட்டத்தையும் நடத்தினார் . எதுவும் பயன்தரவில்லை.சுவாதி கொலைக்கும், அவரை கொலை செய்தவர் இவர்தான் என்று போலீசாரால் கூறப்பட்டு கைது செய்யப்பட்ட ராம்குமாரின் மர்ம மரணத்திற்கும் யார் பொறுப்பாளி என்பது இன்னும் தெரியவில்லை. இனியும் தெரியப் போவதில்லை. இது தொடர்பான வழக்கு தொடர்ந்து நடந்திருக்குமானால் சுவாதியைக் கொன்ற உண்மைக் குற்றவாளி யார் என்பது உலகிற்கு தெரிய வந்திருக்கும். ஆனால் ராம்குமாரின் மர்ம மரணம் அதனை வெளிக் கொண்டு வர முடியாமல் செய்து விட்டது. இதற்கு யார் பொறுப்பேற்பது? மர்மமான முறையில், நடைபெற்ற இந்த மரணங்கள் இந்த ஆண்டு மிக அதிகமாக பத்திரிகை மற்றும் ஊடகங்களாலும், பொதுமக்களாலும் விவாதிக்கப்பட்ட இரு உயிர் பலிகளாகும்.


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...