பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியகழகம் நடத்திய இலக்கியம் மற்றும் கட்டுரைப்போட்டி பரிசளிப்பு விழா பிப்ரவரி 25ம் தேதியன்று துபாய், தேராவில் அமைந்துள்ள லேண்ட்மார்க் ஹோட்டலில் இரவு 6.30 மணிமுதல் 11. 30 மணிவரை சிறப்பாக நடந்தது.
விழாவின் ஆரம்பமாக துணைத்தலைவர் கீழக்கரை முஹம்மது மஹ்ரூப் கிராஅத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தாவூத் மற்றும் குழுவினரின் நபிவாழ்த்தைத் தொடர்ந்து துணைச்செயலாளர் அதிரை ஷர்புத்தீன் வரவேற்புரையாற்றினார். விழாவின் சிறப்பு விருந்தினர்களாக கவுரவித்தர் மு.மேத்தா, டாக்டர் சே.மு.மு.முகம்மதலி, டாக்டர் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரீபுத்தீன், கலாபூஷணம் மானா மக்கீன், இலங்கைப்பிரபல பாடகி நூர்ஜஹான், ஈடிஏ நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் சையதுசலாஹுதீன் மற்றும் சீனாதானா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கவிஞர் அத்தாவுல்லா வாழ்த்துக் கவிதையை பாட, தொடர்ந்து தேரிழந்தூர் தாஜுதீன் தன் காந்தக் குரலால் பாடல் பாடி கூட்டத்தைக் கவர்ந்தார். பின் விருந்தினர்கள் மேடைக்கழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டதைத் தொடர்ந்து துணைச்செயலாளர் கிளியனூர் இஸ்மத் (அமீரக) இவ்அமைப்பின் செயல்பாடுகள் குறித்துப்பேசினார்.
பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியகழகம் நடத்திய ' தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம்களின் பங்கு ' என்ற கட்டுரை போட்டியில் முதல் பரிசான சென்னை செல்வதற்கான விமானப் பயணச் சீட்டு அத்தாவுல்லாக்கும், இரண்டாவது பரிசான மடிக்கணினி அம்ஜத்கானுக்கும், மூன்றாவது பரிசான கைபேசி முகம்மது கமாலுதீனுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களுடன் வழங்கப் பட, பத்து ஆறுதல் பரிசுகளை அப்துல் காதர் ஜெய்லானி, தஞ்சாவூரான் பாரூக், ஜகுபர் நிஸா ஜகுபர், காஜா முஹியத்தீன், பெனாசீர் பாத்திமா, ஹமீது இப்ராகிம், செய்யது சாஹிப், சரவணன் (குசும்பன்), ஜஸீலா நவ்பல் மற்றும் அஹமது நிஷாம் ஆகியோர் தட்டிச்சென்றனர்.
நிகழ்வின் அடுத்த கட்டமாக, கீழை சீனா தானா அவர்களின் “நான் நேசிக்கும் திருக் குரான்” என்ற குறுந்தகடு வெளியிடப் பட அதை சையது சலாஹூதீன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். அதைத் தொடர்ந்து காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்களின் “ திப்புசுல்தான்” காவிய நூல் டாக்டர் சேமுமு முகம்மதலி அவர்களால் வெளியிடப்பட அதன் பிரதியை சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
No comments:
Post a Comment