தேர்தல் பணிகளில் பாரபட்சம் வந்து விடக்கூடாது என்பதற்காகவே வெளிமாநிலங்களில் இருந்து உயர் போலீஸ் அதிகாரிகள் பார்வையாளர்களாக வர வழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அதிரடி சோதனை நடத்தி வருவதால் அரசியல் கட்சியினர் மிரண்டு போய் உள்ளனர்.
இதற்கிடையே ஓட்டுப்பதிவு தினத்தன்று எந்த ஒரு சிறு அசம்பாவித சம்பவத்துக்கும் இடம் கொடுக்கக்கூடாது என்பதிலும் தேர்தல் கமிஷன் தீவிரமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு எல்லா ஓட்டுச்சாவடிகளிலும் துணை நிலை ராணுவத்தினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளனர்.
ஓட்டுப்பதிவின்போது பொதுவாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஒரு தேர்தல் அதிகாரி மற்றும் 3 ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். பல தொகுதிகளில் ஓட்டுப்பதிவை வெப் காமிராக்கள் மூலம் படம் பிடித்து இண்டர்நெட்டில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக வாக்குச்சாவடிகளில் வெப் காமிராக்கள் பொருத்தப்படும். அந்த காமிராக்கள் லேப்-டாப் மற்றும் பிராட்பேண்ட் இணைப்புடன் சேர்க்கப்படும். இந்த தொழில்நுட்பத்தை கவனித்துக் கொள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் கூடுதலாக மேலும் ஒரு தேர்தல் அதிகாரி நியமனம் செய்யப்படுவார்கள்.
இந்த கூடுதல் தேர்தல் அதிகாரிக்கான பணி இடங்களில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் தகவல் தொழில் நுட்பம் படித்து வரும் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக தேர்தல் கமிஷன் அதிகாரிகள், கல்லூரிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். கட்சி சார்பு இல்லாத மாணவர்கள் இந்த பணிக்கு தேர்வாகிறார்கள். அவர்களுக்கு இணைய தள நேரடி ஒளிபரப்புக்கு கூடுதல் பயிற்சி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment