|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 May, 2011

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தான் கருணாநிதி அதிகபட்ச ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி, 1957ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பல்வேறு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், தன் சொந்த தொகுதியான திருவாரூரில் தற்போது தான் முதன்முறையாக போட்டியிட்டார். இதில், இவரை எதிர்த்து போட்டியிட்ட, அ.தி.மு.க., வேட்பாளர் ராஜேந்திரனை விட, 50 ஆயிரத்து 249 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.இத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம், தமிழகத்தில் தொடர்ந்து, 12 முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்ற பெருமையை கருணாநிதி பெற்றுள்ளார். மேலும், இதுவரை அவர் பெற்ற வெற்றிகளில், அதிக ஓட்டு வித்தியாசத்தில் அமைந்த வெற்றியாகவும் இது அமைந்துள்ளது.

கருணாநிதி முதன் முதலில், 1957ம் ஆண்டில், அப்போதைய திருச்சி மாவட்டம் (தற்போது கரூர் மாவட்டம்) குளித்தலை தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிட்டார். அப்போது, இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தர்மலிங்கம் பெற்ற ஓட்டுகளை விட, 8, 296 ஓட்டுகள் அதிகம் பெற்று முதன் முறையாக சட்டசபைக்குள் காலடி எடுத்து வைத்தார். இதில், கருணாநிதி பெற்ற மொத்த ஓட்டுகள், 22 ஆயிரத்து 785. அப்போதைய திருச்சி மாவட்டத்தில், 17 தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தி.மு.க., உறுப்பினராக கருணாநிதி இருந்தார்.இதையடுத்து, 1962ம் ஆண்டு நடந்த சட்டசபை பொதுத்தேர்தலில், தஞ்சாவூர் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் பரிசுத்த நாடாரை எதிர்த்து போட்டியிட்ட கருணாநிதி, 2, 828 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதில் கருணாநிதி மொத்தம், 33 ஆயிரத்து 145 ஓட்டுகளை பெற்றிருந்தார்.

அதன் பின் நடந்த சட்டசபை தேர்தல்களில், தொடர்ந்து சென்னை நகர் பகுதியிலேயே போட்டியிட்டார். கடந்த, 1967ல் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு, 20 ஆயிரத்து 482 ஓட்டுகள் வித்தியாசத்திலும், 1971ல் அதே தொகுதியில் போட்டிட்டு, 12 ஆயிரத்து 511 ஓட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றார்.பின், 1977ம் ஆண்டில் நடந்த தேர்தலில், அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டு, 16 ஆயிரத்து, 438 ஓட்டுகள் வித்தியாசத்திலும், 1980ம் ஆண்டு அதே தொகுதியில், 699 ஓட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றார். 1989ம் ஆண்டு துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு, 31 ஆயிரத்து 991 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 1991ம் ஆண்டு அதே தொகுதியில் போட்டியிட்டு, 890 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பின், 1996ம் ஆண்டு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு, 35 ஆயிரத்து 784 ஓட்டுகள் வித்தியாசத்திலும், 2001ம் ஆண்டில் அதே தொகுதியில், 4, 834 ஓட்டு வித்தியாசத்திலும், 2006ல் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு, 8,523 ஓட்டு வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தார்.இதில் கருணாநிதி, அதிகபட்ச ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தேர்தலாக, 1996ம் ஆண்டு பொதுத்தேர்தல் இருந்து வந்தது. தன் சொந்த தொகுதியில் போட்டியிட்டு, 50 ஆயிரத்து 249 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், இத்தேர்தலை, இதுவரை சந்தித்த தேர்தல்களை விட, அதிகபட்ச ஓட்டு வித்தியாச வெற்றியாக மாற்றியுள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...