என்ஜினீயரிங் மாணவர்களுக்கான பொது “கவுன்சிலிங்” சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது.
ஒரே மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கான “ரேண்டம்” எண் கடந்த 20-ந்தேதி வெளியிடப்பட்டது. இன்று தரவரிசை பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் வெளியிட்டார். ரேங்க் பட்டியல் இணைய தளத்திலும் வெளியிடப்பட்டது.
பின்னர் அமைச்சர் பழனியப்பன், ரேங்க் பட்டியலில் 200-க்கு 200 “கட்-ஆப்” மார்க் எடுத்த மாணவ- மாணவிகளின் பட்டியலையும், படங்களையும் வெளியிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த ஆண்டு என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் சேருவதற்கு 1 லட்சத்து 43 ஆயிரத்து 355 பேர் விண்ணப்பம் செய்தனர். இதில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 109 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ், முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள், மாற்று திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், 3,492 பேர் கலந்தாய்வில் பங்கேற்கிறார்கள்.
விண்ணப்பித்தவர்களில் “கட்-ஆப்” மார்க் அடிப்படையில் திருச்சி திருவெறும்பூர் பிரகாஷ் நகர் மாணவி திவ்யா முதல் இடம் பிடித்துள்ளார். ராசிபுரம் யோகபரசுகன் 2-வது இடம் பிடித்திருக்கிறார். பிற்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் இவருக்கு முதல் இடம் கிடைத்துள்ளது.
சென்னை நன்மங்கலத்தை சேர்ந்த சுரேஷ்பால்ராஜ் 3-வது இடம் பெற்றுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் ஒதுக்கீட்டில் இவருக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது.
சின்னசேலம் ஹரிநிவாஸ் 4-வது இடமும், ஈரோடு பவானி அகிலா 5-வது இடமும், நாமக்கல் ஜீவிதா 6-வது இடமும், அரூர் விக்னேஷ் 7-வது இடமும் பெற்றுள்ளனர். சென்னை மடிப்பாக்கம் மகாலெட்சுமி 8-வது இடம், சிவகாசி ஆகாஷ் 9-வது இடம், நாமக்கல் அபிநயா 10-வது இடம், கோவை கள்ளப்பாளையம் கவுதம் பிரகாஷ் 11-வது இடம், பெருந்துறை சபீதா 12-வது இடம், நாமக்கல் அருண்பிரசாத் 13-வது இடம், சிவகங்கை கல்லல் சிதம்பரம் 14-வது இடம், கோவை கே.கே.புதூர் அர்ச்சனா 15-வது இடம், மோகனூர் பூவிழி 16-வது இடம் பெற்றுள்ளனர்.
இதுதவிர ஈரோடு விக்னேஷ், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டி யலில் முதல் இடமும், ஒட்டுமொத்த ரேங்க் பட்டியலில் 29-வது இடமும் பிடித்திருக்கிறார்.
ஈரோடு ஷானாபீர் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவில் முதல் இடமும் ஒட்டுமொத்த ரேங்க் பட்டியலில் 44-வது இடத்தை யும் பிடித்துள்ளார். மொத்தம் 18 பேர் 200-க்கு 200 “கட்-ஆப்” மார்க் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
தாழ்த்தப்பட்ட பிரிவில் பெரம்பலூர் செல்வபிரபாத் 199.75 “கட்-ஆப்” மதிப்பெண்கள் பெற்று அந்த பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார். தாழ்த்தப்பட்ட அருந்ததியர் பிரிவில் திருச்செங்கோடு நவீனா 199.50 எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.
பழங்குடியினர் பிரிவில் நாமக்கல் கொல்லிமலை வேலவன் 197.75 “கட்-ஆப்” மார்க் வாங்கி அந்த பிரிவில் முதல் இடத்துக்கு வந்திருக்கிறார்.
No comments:
Post a Comment