போருக்கு பிந்தைய நிவாரணப் பணிகளை முடுக்கி விடும்படி, இலங்கை அரசை, இந்தியா வலியுறுத்த வேண்டும். இதன்மூலம், இலங்கையில் மீண்டும் ஒரு மோதல் ஏற்படுவதை தவிர்க்க முடியும்' என, சர்வதேச நெருக்கடி கால குழு அறிவித்துள்ளது.
சர்வதேச நெருக்கடி கால குழு வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில், ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த நீண்ட கால சண்டை முடிவுக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, போர் நடந்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்படவேண்டும். இது தொடர்பாக, இலங்கை அரசை, இந்தியா வலியுறுத்த வேண்டும். இவ்வாறு வலியுறுத்துவதன் மூலம், இலங்கையில் மீண்டும் ஒரு பெரும் மோதல் ஏற்படுவதை தவிர்க்க முடியும். இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரில், ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது தொடர்பாக, சர்வதேச விசாரணை நடக்கிறது. இந்த விவகாரத்தில் இந்தியா ஆர்வம் காட்டவில்லை. மேலும், நிர்வாக ரீதியிலான விஷயத்திலும், ராஜபக்ஷே அரசை வலியுறுத்துவதற்கும், இந்தியா தயக்கம் காட்டுகிறது. இலங்கை விவகாரத்தில், இந்தியா தற்போது பின்பற்றும் கொள்கைகள் பலன் அளிக்காது. இந்த விவகாரத்தில், அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளுடனும், ஐரோப்பிய யூனியனுடனும், இந்தியா ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment