|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 July, 2011

பட்டினியால் மடியும் பிஞ்சுகள்!

இந்த செய்தியை படித்தவுடன், ஏன் என்று கேட்க தோன்றும். எதுவும் புது நோய் பரவியுள்ளதா எனவும் கருத நேரும். ஆனால் இக்குழந்தைகளின் இறப்புக்கு காரணம் பட்டினி, என்றால் நம்ப முடிகிறதா? இது நமது நாட்டில் அல்ல. ஆப்ரிக்க நாடான சோமாலியாவில் தான் இந்த கொடூரம் நடந்துகொண்டு இருக்கிறது. இந்நாட்டில் பல ஆண்டுகளாக பட்டினி பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஐ.நா., சபை தெற்கு சோமாலியா பகுதியை "பஞ்சத்துக்கு இலக்கான பகுதி' என அறிவித்துள்ளது. இப்பகுதியில் ஒவ்வொரு ஆறு நிமிடத்துக்கும் ஒரு குழந்தை பலியாகி வருகிறது. சோமாலியா மட்டுமல்லாமல், எத்தியோப்பியா, கென்யா ஆகிய ஆப்ரிக்க நாடுகளில் உள்ள மக்கள், நீண்ட காலமாக வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். இங்கு உணவுப் பொருட்களுக்கான விலைவாசியும் கடுமையாக உயர்ந்துவிட்டது. அன்றாட உணவுக்கு கூட குழந்தைகள் கஷ்டப்படும்போது, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட மற்ற அடிப்படை வசதிகள் எந்தளவுக்கு மோசமாக இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. சோமாலியா, கென்யா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் 20 லட்சம் பேர் உள்ளனர். இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சரியான ஊட்டச்சத்து இன்றி ஆபத்தான நிலையில் வாழ்கின்றன. இங்கு குற்றங்கள் அதிகரிக்க, ஏழ்மையும் ஒரு காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. இதனால் இந்நாடுகளில் ஏழ்மையும், ஏற்றத் தாழ்வுகளும் நிறைந்து உள்ளன. வறுமை இருக்கும் வரை வன்முறையையும், குற்றங்களையும் தவிர்க்க முடியாது. 

இந்த ஆபத்தில் இருந்து, குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கு, "யுனிசெப்' நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, பல்வேறு முகாம்கள் மூலம் குழந்தைகளுக்கு தேவையான பால், குடிநீர், சுகாதாரம் போன்ற வசதிகளை வழங்கி, உயிர்க்கொல்லி நோய்கள் பரவாமல் காப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. பசியால் வாடும் குழந்தைகளின் பேரிடரை துடைப்பதற்கு உதவுமாறு, "யுனிசெப்' வேண்டுகோள் விடுத்துள்ளது. உதவி செய்ய விரும்புவோர் www.unicef.org.uk/landing-pages/hornofafricaweb/என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் "யுனிசெப்' அறிவித்துள்ளது. 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...