கல்லூரி மாணவியைக் கடத்திப் பாலியல் வன்கொடுமை செய்த காவல்துறை ஆய்வாளருக்குக் காவல்துறை சலுகை காட்டுவதைக் கண்டித்து 28.07.2011 அன்று திருச்சி காதிகிராஃப்ட் தொடர்வண்டிச் சந்திப்பு அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் உரிமைப் பேரவை, தமிழ்நாடு மற்றும் மகளிர் ஆயம், தமிழ்நாடு ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன.
கடந்த சூன் மாதம் 24ஆம் தேதி இரவு 11 மணியளவில் தன் சொந்த ஊருக்குச் செல்வதற்காகத் தன் ஆண் நண்பருடன் திருச்சி பேருந்து நிலையத்தில் பேருந்திற்காகக் காத்திருந்த பொறியியல் கல்லூரி மாணவியை, திருச்சி தீண்டாமை ஒழிப்புப் பிரிவு ஆய்வாளர் கண்ணன் மிரட்டி தனது காரில் கடத்திச் சென்றார். நள்ளிரவு 2.00 மணியளவில் புதுக்கோட்டைப் பேருந்து நிலையத்தில் அந்த மாணவியை இறக்கிவிட்டுள்ளார்.
கடத்தல் நடந்த அன்றே கடத்தியது ஆய்வாளர் கண்ணன்தான் என்று தெரிந்த பின்னரும் சூலை 4ஆம் தேதி வரை கண்ணனைக் கைது செய்யாமல் இருந்தது காவல்துறை என்பது குறிப்பிடத்தக்கது. இக்குற்றச் செயலுக்கு ஆய்வாளர் கண்ணன் மீது வெறும் கடத்தல் வழக்கு மட்டுமே போடப்பட்டுள்ளது. மாவட்ட நீதிபதி கண்ணனின் பிணை மனுவைத் தள்ளுபடி செய்துள்ளார். கடத்திச் சென்ற மாணவியை கீரனூர் அருகே ஒரு குவாரியில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறை தனது புலன் விசாரணையில் மௌனம் சாதித்து வருகிறது.
நள்ளிரவில் மாணவியைக் கடத்தி உள்ள கண்ணன் மீது பாலியல் வன்கொடுமை நடந்தது பற்றி விசாரணை செய்யப்படவில்லை. “அந்தப் பெண் அழகாக இருந்ததால் கடத்தினேன்“ என்று காவல்துறையிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான் கண்ணன். கடத்தப்பட்ட மாணவி மருத்துவப் பரிசோதனைக்கும் உட்படுத்தப்படவில்லை. கடத்தல் கண்ணனின் வழக்கை புலன் விசாரணை செய்யும் அவனது பால்ய நண்பர் சிகாமணி பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் கற்பழித்த்தற்கான காயங்கள் இருந்ததை மறைத்திருக்கிறார். கடத்தப்பட்ட மாணவி மற்றும் அவளது நண்பனின் வாக்கு மூலங்கள் காவல்துறையால் முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை.
No comments:
Post a Comment