|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 August, 2011

உள்ளூர் சேனல்களை முறைப்படுத்த தமிழக அரசு அதிரடி!

மாநிலம் முழுவதும் புற்றீசல்போல் பெருகியுள்ள உள்ளூர் "டிவி' சேனல்களை முறைப்படுத்த, தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் காரணமாக, 860 சேனல்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன. அரசு கேபிள், "டிவி' செயல்பட நடவடிக்கை எடுத்து வருவதால், லைசென்ஸ் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் பல ஆண்டுகளாக இயங்கி வரும் உள்ளூர் சேனல்களை முறைப்படுத்துவதற்காக, அரசு இந்நடவடிக்கையை எடுத்துள்ளது. கேபிள் மற்றும் "டிடிஎச்' மூலம், ஏராளமான "டிவி' சேனல்கள் இயங்கி வருகின்றன.

இது மட்டுமின்றி, உள்ளூர் சேனல்களும் அதிகளவில் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. குறிப்பிட்ட பகுதியில் மட்டும், உள்ளூர் சேனல்களின் ஒளிபரப்பு இருக்கும். சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளுடன், குறிப்பிட்ட பகுதியில் நடக்கும் பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள், அதை சார்ந்த விளம்பரங்களையும் பெற்று ஒளிபரப்பி வருகின்றனர்.மாநிலம் முழுவதும், 860 உள்ளூர் சேனல்கள் இயங்கி வருகின்றன. உள்ளூர் சேனல் ஆரம்பிக்க வேண்டுமெனில், "போஸ்டல் லைசென்ஸ்' மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் வினியோக உரிமையை பெற்றுள்ள ஏஜன்சியிடம் இருந்து, உரிமமும் பெற்றிருக்க வேண்டும். இந்த உரிமம், பல ஆண்டுகளாக தமிழ்நாடு உள்ளூர் தனியார் "டிவி' சேனல் உரிமையாளர் நலச்சங்கத்திடம் இருந்து வருகிறது. உள்ளூர் சேனல் துவக்க நினைப்பவர்கள், இந்த சங்கத்திடம் இருந்து உரிமம் பெற வேண்டும்.

ஆனால், கேபிள் "டிவி' சேவை வழங்கும் ஒரு தனியார் நிறுவனத்தின் கட்டாயத்தால், பெரும்பாலான உள்ளூர் சேனல்களை நடத்துவோர், அந்நிறுவனத்திடம் இருந்து உரிமம் வாங்கியுள்ளனர். இதற்காக, ஒவ்வொரு உள்ளூர் சேனலிடமும் மாதத்திற்கு 40 ஆயிரம் ரூபாய் முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை அந்நிறுவனம் வசூலித்து வந்தது. கோவை போன்ற இடங்களில் லட்சக்கணக்கில் வசூலித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த உள்ளூர் சேனல்களால் அரசுக்கு எந்தவித வருவாயும் வராத நிலையில், வருமானம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திற்கே சென்ற நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அரசு கேபிள் "டிவி' நிறுவனத்திற்கு உயிர் கொடுத்து, நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையடுத்து, "டிவி' சேனல் சேவையை வழங்கி வரும் நிறுவனங்கள் அனைத்தையும், அரசு கேபிள் "டிவி' நிறுவனத்தின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக, உள்ளூர் சேனல்களை முறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள உள்ளூர் சேனல்களை இழுத்து மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்துவதால், முறையான ஆவணங்கள் இல்லாமல் உள்ளூர் சேனலை நடத்தி வந்தவர்கள், அவர்களாகவே முன்வந்து சேனலை மூடியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, 860 உள்ளூர் "டிவி' சேனல்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன.
 
இது குறித்து, தமிழ்நாடு உள்ளூர் தனியார் "டிவி' சேனல் உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் மாநில தலைவர் ஜீவா கூறியதாவது:உள்ளூர் "டிவி' சேனல் துவங்க வேண்டுமெனில், தபால் அலுவலகங்களில் 500 ரூபாய் செலுத்தி, "போஸ்டல் லைசென்ஸ்' பெற வேண்டும். இரண்டாவதாக, தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் உரிமையை பெற்றுள்ள ஏஜன்சியிடம் இருந்து, ஒளிபரப்பு உரிமையை பெற வேண்டும். இந்த இரண்டு ஆவணங்களும் இருந்தால் தான், உள்ளூர் "டிவி' சேனலை ஒளிபரப்ப முடியும். திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடம் இருந்து, எங்களது சங்கம் தான் உரிமை வாங்கியுள்ளது. பல ஆண்டுகளாகவே, இந்த உரிமத்தை நாங்கள் தான் வாங்கி வருகிறோம்.முந்தைய ஆட்சிக் காலத்தில், "டிவி' சேவை வழங்கும் ஒரு நிறுவனம் ஏகபோக ஆதிக்கம் செலுத்தியது. எங்களிடம் தான் ஒளிபரப்பு உரிமையை பெற வேண்டும் என கட்டாயப்படுத்தி, உள்ளூர் சேனல்களிடம், இடத்திற்கு தகுந்தாற்போல் மாதத்திற்கு ஒரு தொகையை வசூலித்துக்கொண்டு, உரிமையை வழங்கியது.தற்போதைய அ.தி.மு.க., அரசு, அரசு கேபிள் "டிவி' சேவையை வழங்க இருப்பதால், உள்ளூர் சேனல்களை முறைப்படுத்த வேண்டும் என்பதற்காக, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் காரணமாக, 860 உள்ளூர் சேனல்கள் மூடப்பட்டுள்ளன. தமிழக அரசு, உள்ளூர் சேனல்களை முறைப்படுத்துவதை நாங்கள் வரவேற்கிறோம்.
அதே நேரத்தில், அரசு கேபிள் "டிவி' நிறுவனத்தின் விதிமுறைகளுக்குள் உள்ளூர் "டிவி' சேனல்களை கொண்டுவரும்போது, ஏற்கனவே உள்ளூர் சேனல்களை நடத்தி வந்தவர்கள் பாதிக்காத வகையில், அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். உள்ளூர் சேனல்கள் மூலம், அரசுக்கு இதுவரை வருவாய் இல்லை. அரசு கேபிள் "டிவி' நிறுவனத்தின் மூலம், சேவை வழங்குவதன் மூலம், உள்ளூர் "டிவி' சேனல்கள் மூலம், 200 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.இவ்வாறு ஜீவா கூறினார். தமிழ்நாடு கேபிள் "டிவி' உரிமையாளர் சங்கத்தின் மாநில தலைவர் காயல் இளவரசும், உள்ளூர் "டிவி' சேனல்களை முறைப்படுத்தும் அரசின் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...