|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 August, 2011

மதிப்பை உயர்த்தும் புடவை!

பெண்ணின் பெருமையையும் மதிப்பையும் உயர்த்தும் ஆடைகளில் புடவைக்கு தனி இடம் உண்டு. நவநாகரீகமாய் இருக்கும் பெண்கள் கூட புடவை கட்டும் போது சபையில் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையே தனிதான். பெண்களின் அழகை சிறந்த முறையில் வெளிக்காட்டுவது மட்டுமின்றி, சிறப்பானதொரு தோற்றபொலிவையும் புடவை தருகிறது. இந்தியாவில் மட்டுமே சேலை உடுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாகத் தென்இந்தியாவில் சேலைகளின் பயன்பாடு மிக அதிகம். பெரும்பாலும் திருமணமான பெண்களே சேலைகளை விரும்பி அணிகின்றனர். கைக்குழந்தை உள்ள பெண்களுக்கு சேலை மிகச்சிறந்த வரப்பிரசாதமாகும்.

புடவையில் தெரியும் அழகு: நாகரீக உடையை அணிவது போல புடவை கட்டுவது என்பது எளிதான காரியம் அல்ல. ஐந்தரை மீட்டர் நீளமுள்ள புடவையை கட்டும் போது சற்றே கவனம் பிசகினாலும் அவிழ்ந்து விழுந்து மானத்தை வாங்கிவிடும். எனவே புடவை கட்டும் போது சில விசயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். பெட்டிகோட்டும், ரவிக்கையும் புடவையுடன் இணைந்து அணியக்கூடிய ஆடைகள் ஆகும். அவை மேட்சாக இல்லாவிட்டால் என்னதான் விலை உயர்ந்த புடவை அணிந்தாலும் பாந்தமாக இருக்காது. எனவே அவற்றிலும் கவனம் தேவை.

பெண்ணுக்கு தனி வாசம்: வட இந்தியாவில் குறிப்பாக குஜராத்தில் புடவையின் முந்தானை முன்பக்கமாக வருமாறு அணிவார்கள். ஆனால் தென்னிந்தியாவில் புடவை முந்தானை பின்பக்கம் வருமாறு பார்த்து அணிகின்றனர்.

புடவை கட்டுவதில் முக்கியமானது மடிப்பு எடுத்து கொசுவம் சொருகுவதுதான். முன்பெல்லாம் கிராமத்தில் உள்ளவர்கள் கெண்டைக்கால் தெரிய புடவையை உயர்த்தி கட்டி பின் கொசுவம் வைத்து கட்டியிருப்பார்கள். இப்போது கால மாற்றத்திற்கு ஏற்ப அனைவருமே முன்கொசுவம் வைத்து தளர கட்டத் தொடங்கிவிட்டனர். புடவையின் நீளத்திற்கு ஏற்பவே கொசுவ மடிப்பு எடுத்து இடுப்பில் சொருகவேண்டும். சேப்டி பின் பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பானது. மீதமுள்ள புடவையை அழகாக மடிப்பு எடுத்தோ அல்லது ஒற்றைத் தலைப்பிலோ இடது தோல் மேல் போட்டு பின் குத்தி விட வேண்டும். முதன் முதலாக புடவை கட்டும் போது அரைமணி நேரமாவது ஆகும். பின்னர் பழகப் பழக ஐந்து நிமிடத்தில் புடவை கட்டிவிடலாம்.

ஊர் பெருமையை கூறும் புடவைகள்: பல லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள பட்டுசேலைகள் முதல் சிலநூறு ரூபாய் உள்ள காட்டன் சேலைகள் வரை இந்தியாவில் தயாராகின்றன. பட்டு என்றாலே சட்டென்று அனைவருக்கும் நினைவில் வருவது வாரணாசியும், காஞ்சிபுரமும்தான். பனாரஸ் சில்க் என்று அழைக்கப்படும் வாரணாசி பட்டு உயர்தரமான பட்டு நூலால் தயாரிக்கப்படுகிறது. இவைகளை திருமணம், விழாக்கள் போன்றவற்றிற்கு அணிந்து சென்றால் சிறப்பான தோற்றத்தைத் தரும். காஞ்சிபுரம் பட்டுச்சேலைகளின் முந்தானை டிசைன் உலக அளவில் புகழ் பெற்றது. தமிழகத்தில் பழங்காலத்தில் இருந்தே தயாரிக்கப்பட்டு வரும் இந்த புடவைகள் கையால் நெய்யப்படுவதால் நல்ல தரமாக இருக்கும்.

ஒரிசாவின் `இக்கத்’ சேலைகளில் அதிக கைவேலைபாடுகள் காணப்படுகின்றன. எம்ராய்டரி செய்யப்பட்ட இத்தகைய சேலைகள் பிரபலமானவை. இதில் ஆரஞ்சு, மஞ்சள் வண்ணங்கள் அதிகமாக பயன்படுத்தபட்டிருக்கும். காஷ்மீரின் மொஷிதாபாத் சேலைகள், சைனா சில்க்கை போன்று இருக்கும். இதை `பெங்காலி சில்க்` என்றும் கூறுவர். காஷ்மீரின் பாரம்பரிய உடையான இதில் காஷ்மீர் டிசைன்கள் நிறைந்திருக்கும்.

ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் `பந்த்னி’ சேலைகள் தயாரிக்கப்படுகின்றன. பெரும்பாலும் வெள்ளை நிற சேலைகளே அதிகமாக இருக்கும். அதில் நூல் வேலைபாடு செய்யபட்டிருக்கும். பாத்திக் வகை சேலைகளில் மெழுகு பயன்படுத்தபட்டிருக்கும். இந்த சேலைகளை அணிந்தால் வடஇந்தியத் தோற்றத்தைக் கொடுக்கும். குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் புடவைகளுக்கு பெயர்பெற்ற நகரமாகும். இங்கு கிடைக்கும் புடவைகள் சிறப்பு வாய்ந்தவை.

தென்மாநில புடவைகள்:கர்நாடகாவின் பன்கடி சேலைகள் விலை குறைவானவை. தினமும் பயன்படுத்தும் விதத்தில் இவை இருக்கும். ஆந்திராவின் போச்சம்பள்ளி சேலைகள் அதிக எடை கொண்டதாய் இருக்கும். அந்த அளவுக்கு கைவேலைப்பாடுகள் மிகுந்திருக்கும். மங்கல்கிரி சேலைகளும் அங்கு தயாரிக்கப்படுகின்றன. இந்த வகை சேலைகளில் பார்டர் டிசைனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.

தமிழ்நாட்டில் கிடைக்கும் காஞ்சிபுரம் பட்டு போல கோயம்புத்தூர் காட்டன் சேலைகளும் பிரசித்தி பெற்றது. பினிஷிங் நன்றாக இருக்கும் சின்னாளபட்டி சுங்குடி புடவைகள் பெண்களின் தோற்றத்திற்கு தனி மதிப்பினை தரும். ஆயிரம் ஆடைகள் அணிந்தாலும் சேலை கட்டும் பெண்ணுக்கு என்று தனிவாசம் இருப்பதை புடவையை கட்டி பார்த்தால்தான் தெரியும்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...