|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 August, 2011

நான் நிரபராதி, நான் நிரபராதி என்று கத்திக் கொண்டிருக்கும் பொழுதே என் குரல் வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ?

பேரன்புமிக்க அம்மா / அப்பா / சகோதர / சகோதரிகளே,

வணக்கம். நான், அ.ஞா.பேரறிவாளன், இராசீவ் காந்தி கொலை வழக்கில் 19 வயதில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு அதன் விளைவாய் தூக்கு தண்டனை பெற்றவனாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் இருந்து வருபவன். எள் முனையளவும் தொடர்பே இல்லாத வழக்கில் அரசியல் காழ்ப் புணர்ச்சியாலும், கேட்க நாதியற்றவன் என்பதாலும், அநீதியான தீர்ப்பை சுமந்து நிற்பவன்.

தந்தை பெரியாரின் கொள்கையால் நிரம்பிய குடும்ப வழி வந்தவன் என்பதால் மனிதநேயத்தின் அடிப்படையிலும், தொப்புள் கொடி உறவு என்பதால், இன உணர்வின் அடிப்படையிலும் சிங்கள இனவாதத்திற்கு எதிரான ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து அதற்காக தமிழக மண்ணில் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்தவன் என்ற காரணத்தால் என் மீது தவறான குற்றச்சாட்டு புனையப்பட்டது என்பதை தங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

19 வயது இளைஞனாய் கைது செய்யப்பட்டு, வாழ்வின் வசந்த காலங்களையெல்லாம் சிறையில் செய்யாத குற்றத்திற்காகத் தொலைத்து, இன்று 40 வயதுடன் பக்குவப்பட்ட குடிமகனாய் உங்கள் முன் இக்கடிதத்தின் மூலம் பேசுகிறேன்.
1. திரு. இராசீவ் அவர்களின் கொலையை நியாயப்படுத்துவதல்ல இக்கடிதத்தின்நோக்கம். மாறாக இக்குற்றத்திற்கு எவ்வித தொடர்பு மில்லாத நானும், என்னைப் போன்றவர்களும் மரண தண்டனைக்கு உரியவர்கள் அல்லர் என்று எடுத்துரைப்பது மட்டுமே.

2. திரு. இராசீவ் கொலை விஷயமாக விசாரிக்க வேண்டும் என்று சொல்லி 11.06.1991 அன்று விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நான் இன்று வரை நீதி மறுக்கப்பட்டு தூக்கு மரத்தின் நிழலிலேயே வாழ்ந்து வருகிறேன்.

3. அக்கொலைக்கு பயன்பட்ட ‘பெல்ட் பாம்’ செய்வதற்கு நான் உதவினேன் என்பதே என் தண்டனைக்கு வழி வகுத்தக் குற்றச்சாட்டு. இதற்கு ஏதுவாக ஊடகங்களில் பொய் செய்தி பரப்பப்பட்டது. ‘இந்தியா டுடே’ நாளிதழும் நான் எப்படி வெடிகுண்டு செய்தேன் என்று பொய்யாக ஒரு செய்முறை விளக்கம் வெளியிட்டிருந்தார்கள். ஆனால், “சி.பி.ஐ.யால் இறுதி வரை கண்டுப்பிடிக்க முடியாத கேள்விகளுள் ஒன்று, அந்த ‘பெல்ட் பாம்’ஐ செய்தவர் யார் என்பதே” என்று.இந்த வழக்கை விசாரித்த தலைமை புலனாய்வு அதிகாரி இரகோத்தமன் தான் ஓய்வு பெற்றவுடன் எழுதிய நூலிலும், பல்வேறு பேட்டிகளிலும் கூறியுள்ளார். ஆக விடைத் தெரியா கேள்விக்கு விடையாக நான் பலியிடப் படவேண்டுமா?

4. அந்த ‘பெல்ட் பாமிற்கு’ 9வி பேட்டரி வாங்கித் தந்தேன் என்பதின் மூலமே நான் அந்த ‘பெல்ட் பாம்’ஐ செய்தேன் என வழக்குரைத்தனர் அரசு தரப்பு வழக்கறிஞர்கள். அதற்கு வசதியாக என்னுடைய மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியலில் பட்டய படிப்பும் இவர்களின் கதைக்கு கருவானது. ஆனால் வழக்கின் எந்தவொரு இடத்திலும் நான் வாங்கித் தந்த 9வி பேட்டரிதான் பெல்ட் பாம் வெடிக்கப் பயன்பட்டது என்பது நிரூபிக்கப்படவில்லை. 

5. உண்மை என்னவெனில் நான் 9வி பேட்டரியை வாங்கவுமில்லை, அதனை யாருக்கும் தரவு மில்லை. ஆனால் நான் 9வி பேட்டரி வாங்கினேன் என்பதற்கு வழக்கிலுள்ள ஒரே ஆதாரம், ஒரு பெட்டிக் கடைக்காரரின் சாட்சி தான். இந்த சாட்சியை ஏற்க முடியாது என்று தடா நீதிமன்றத்தில் கூறிய நீதிபதி,    பிறகு என்ன காரணத்தினாலோ இந்த சாட்சியை ஏற்றுக் கொண்டு விட்டார். நான் வாங்காத பேட்டரியை வாங்கினேன் என்று ஒருவர் மூலம் சொல்ல வைப்பது நம் காவல்துறைக்கு எத்தனை சுலபம் என்று சற்றே சிந்தியுங்கள்.

6. தடா சட்டத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டதே தவறு என்று உச்சநீதிமன்றம் இடித்துரைத்தது. காரணம் இந்தக் கொலைக் குற்றவாளிகளுக்கு கொலை செய்யப்பட்டவர்களைத் தவிர யாதொருவரையும் அச்சுறுத்தவோ, கொல்வதோ நோக்கமாக இருந்திருக்கவில்லை என்று எடுத்துரைத்தது. அப்படி இருக்கும் வேளையில், எங்களை தடா சட்டத்தின் கீழ் கைது செய்து, உரிமைகள் மறுக்கப்பட்டு, தடா சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு, பெறப்பட்ட வாக்கு மூலம் மட்டும் எப்படி செல்லுபடியாகும்?

மேலும் நம் நாட்டில் வாக்கு மூலங்கள் எப்படிப் பெறப்படுகின்றன என்பதும் உங்களுக்கு நன்றாகவே தெரியும். கடுமையான சித்திரவதை, மிரட்டல், அடி உதைக்கு பயந்துதான் பல வாக்குமூலங்கள் ரத்தத்தால் கையெழுத்தா கின்றன. பொதுவாக அப்படிப் பெறப்படும் வாக்கு மூலங்களை மட்டுமே வைத்து நீதிமன்றங்கள் தீர்ப்பினை தருவது கிடையாது. ஆனால் என் வழக்கில் மட்டும் நீதிமன்றம் அவ்வாக்குமூலத்தை மட்டுமே அடிப் படையாகக் கொண்டு, வேறு எந்த ஆதாரமும் இல்லாமல் எனக்குத் தூக்குத் தண்டனை வழங்கியுள்ளது.
 
7. ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்த திரு. தியாகராஜன் என்ற அதிகாரி கேரள மாநிலத்தில் 1993 இல் நடைபெற்ற அருட்சகோதரி அபயா கொலை வழக்கை ‘தற்கொலை’ என முடிக்க அழுத்தம் கொடுத்தவர் என்பதும், அவரது முறைகேட்டை எதிர்த்ததால், அவருக்கு கீழ் பணிபுரிந்த துணை காவல் கண்காணிப்பாளர் திரு. தாமஸ்வர்கீஸ் என்பவர் தனது பதவியை துறந்தார் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பிறகு இந்த வழக்கு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை என்று திரும்பியது. எர்ணாகுளம் தலைமை நீதிமன்ற நடுவர் 23.06.2000 அன்று அளித்த தீர்ப்பில் கடுமையான கண்டனங்களை வாங்கியவர் இந்த தியாகராஜன். இவர் என்னிடம் வாங்கிய வாக்குமூலங்கள் ஏன் உண்மையாக இருக்க வேண்டும்? யாருக்காகவோ வழக்கை எப்படியும் வளைப்பவர்கள்தானே இவர்கள்....

8. தடா சட்டத்தில், சிறப்பு தனி நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டதால், பெரும் பான்மையான உரிமைகள் எனக்கு மறுக்கப் பட்டன. அதுவே என் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூற இயலாமற் செய்துவிட்டது. பொதுவாக ஒரு மாவட்ட நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பிற்கு, உயர்நீதிமன்றம், பிறகு உச்சநீதிமன்றம் என்று இருமுறை மேல் முறையீடு செய்யும் வாய்ப்புள்ளது.

இந்த செயலபாடு ஒரு இடத்தில் இல்லாவிட்டாலும் மறு இடத்தில் நீதி சரியாக கிடைக்க உதவியது. ஆனால் எங்கள் விஷயத்தில் தடா கொடுங்கோல் வழக்கு என்பதால், உயர்நீதிமன்றம் செல்லும் வாய்ப்பு மறுக்கப் பட்டு, இரண்டில் ஒரு மன்றத்தின் கதவு அடைக்கப்பட்டுப் போனது. இப்பொழுது தடா சட்டம் தவறு என்று அந்த சட்டமே நம் நாட்டில் வாபஸ்பெறப்பட்டாலும், அதனால் பாதிக்கப்பட்ட என் போன்றவர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்? எப்பொழுது கிடைக்கும்?

9. தடா நீதிமன்றத்தின் கீழ் விசாரிக்கப்படுபவர்கள் 20 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என தடா சட்ட வரம்பு சொல்கிறது.10. அவர் அதற்கு முன்னால் குற்றம் ஏதும் புரிந்தவரா என்பதை கவனிக்க வேண்டும்.

11. குற்றப் பின்னணி உள்ள குடும்பத்தைச் சார்ந்தவரா என்பதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்கிறது தடா சட்டம்.

12. எனக்கு மட்டும் இந்த எந்த வரைமுறைகளையும் கடைபிடிக்காமல் தடாவின் கீழ் கைது செய்து விசாரித்து, தண்டனையும் அறிவித்தார்கள்.

13. சிறப்பு நீதிமன்றத்தில் 26 பேருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றம் அதில் 22 பேர் தூக்குத் தண்டனையை ரத்து செய்கிறதென்றால், இவ்வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் எத்தன்மையுடன் ஒருதலைப்பட்சமாக, முன் முடிவுகளுடன் விசாரிக்கப்பட்டதென்பதை புரிந்து கெள்ள முடியும்.

 சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்று இருந்தாலும், இந்த வழக்கைப் பொறுத்தவரை கொல்லப்பட்டவர் இராசீவ் என்பதாலும், அவருக்கு இருந்த செல்வாக்கு மற்றும் ஊடக அனுகூலங்களாலும், ஒரு தலைபட்சமாகவே பார்க்கப்பட்டது. இன்னொரு வாய்ப்பு கிடைக்கப் பெற்று, நடுநிலையுடன் விசாரிக்கப்பட்டால் எங்களது தூக்குக் கயிறும் கண்டிப்பாக அறுபடும் என்று என்னால் உறுதியாக கூற முடியும்.

 அந்த வசதி இங்கிலாந்து உள்ளிட்ட மேலை நாடுகளில் உள்ளது. ஆனால் இனி வழக்கை விசாரிக்கும் வழியில்லை என்கிறது இந்திய குற்றவியல் சட்டம்... ஆகையால் கருணை மனுவின் மீதான முடிவே இறுதி முடிவு என்று விடப்பட்ட பரிதாபத்துக்குரியவர்கள் ஆகிப்போனோம் நாங்கள். நான் நிரபராதி, நான் நிரபராதி என்று கத்திக் கொண்டிருக்கும் பொழுதே என் குரல் வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ?
14. திருமதி சோனியா காந்தி, இவ்வழக்கில் தூக்குத் தண்டனைப் பெற்றவர்களுக்கு அத்தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் எனக்கோ என் குழந்தைகளுக்கோ (இராகுல் காந்தி, பிரியங்கா காந்தி) சற்றும் விருப்பமில்லை என ஏற்கனவே கூறியுள்ளார்.

15. ஆயினும் எங்களை 20 ஆண்டுகளாக இப்படி சிறையில் அடைத்து வைத்திருக்கும் மர்மம் எங்களுக்கு விளங்கவில்லை. நிரபராதிகளான எங்களை இப்படி தூக்குக் கொட்டடியிலேயே வைத்திருக்கும் காரணம் புரியவில்லை.

16. 1980களின் இறுதியில் வாழ்ந்த எல்லா இளைஞர்களைப் போலவே நானும் ஈழ விடுதலையிலும், விடுதலைப் போராளிகளின் மீதும் பற்றுக் கொண்டிருந்தேன். அன்று கல்லூரிகளிலும், பணி இடங்களிலும் எல்லோரும் தான் விடுதலைப் போராட்டத்திற்காக உதவி வந்தார்கள்.

ஒரு நாள் ஊதியத்தையும் கொடுத்தார்கள். பள்ளிகளில் நன்கொடை வசூலித்தார்கள். ஏன் நம் மத்திய மாநில அரசுகள் கூடத்தான் அவர்களுக்கு உதவிகள் புரிந்தன? ஒரு துர்ச் சம்பவம் நிகழும்பொழுது நான் மட்டும் எப்படி எதிரி ஆகிப் போனேன்?? ஏன் தனிமைப்படுத்தப்பட்டேன்?? உங்களில் ஒருவன் தானே நானும்??

தூக்குத் தண்டனை என்பது சட்டத்தின் பெயரால் செய்யப்படும் திட்டமிட்ட படுகொலை என்கிறார் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர்.செய்த குற்றத்திற்கு வழங்கப்படும் தூக்கு தண்டனையையே திட்டமிட்டப் படுகொலையெனில், செய்யாத குற்றத்திற்கு வழங்கப்படும் தூக்குத் தண்டனையை என்னவென்று சொல்வது?

முடிவுறா விசாரணையில், முடிவினை நோக்கித் தள்ளப்பட்டுள்ள அப்பாவி

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...