|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 September, 2011

துரை, திருச்சி, கோவை, நெல்லை அண்ணா பல்கலைக்கழகங்கள் ஒன்றாக இணைப்பு!

திமுக ஆட்சியில் மாநிலத்தின் அனைத்துப் பகுதி மாணவ, மாணவிகளும் பலன் பெறும் வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிளைகள் மதுரை, திருச்சி, கோவை, நெல்லை ஆகிய இடங்களில் தொடங்கப்பட்டன. இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர சென்னைக்குத் தான் வர வேண்டும் என்ற அவலம் தவிர்க்கப்பட்டது. இந் நிலையில் இன்று சட்டசபையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பல்கலைக்கழக சட்டத் திருத்த சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

அண்ணா பல்கலைக்கழகங்களை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடங்கியதால் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வலுவிழந்து விட்டது. இதனால் கல்வி சேவையின் தரம் உயராமல் சுயமாக செயல்பட இயலாத பல நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

எனவே சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வர இந்த அரசு முடிவு வெடுத்துள்ளது. இந்த அரசு பல்கலைக் கழகங்களை சீரமைத்து உலகதரமிக்க நிறுவனங்களாக மாற்றி அமைக்க சிறப்பு திட்டம் ஒன்று செயல்படுத்தும்.

அதற்கேற்ப 2006ம் ஆண்டு திருச்சி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக சட்டம், கோயம் புத்தூர் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக சட்டம், 2007ம் ஆண்டு திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழக சட்டம், 2010ம் ஆண்டு சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக சட்டம், 2010ம் ஆண்டு மதுரை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக சட்டம் ஆகிய சட்டங்களை நீக்கம் செய்வதென்றும்,

1978ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக சட்டத்தின்படி, நிறுவப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்துடன் ஒன்றாக இணைக்கும் பொருட்டு இந்த சட்டத்தை திருத்த அரசு முடிவு செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

நாகப்பட்டினத்தில் மீன்வளப் பல்கலைக்கழகம்: அதே போல நாகப்பட்டினத்தில் மீன்வளப் பல்கலைக்கழகம் துவங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று அறிவித்தார். விதி எண் 110ன்கீழ் அறிக்கை வாசித்த அவர் இதனைத் தெரிவித்தார். அவர் கூறுகையில், தமிழ்நாடு 1076 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையினைக் கொண்டுள்ளது. 591 கடல் மீனவ கிராமங்களில், சுமார் 9 லட்சம் மீனவ மக்கள் உள்ளனர். 6,200 மீன்பிடி விசைப் படகுகளும், 50,000 பாரம்பரிய கலன்களும் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் கடல் மீன் உற்பத்தி 4 லட்சம் டன் ஆகும். தமிழ்நாட்டிலிருந்து 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள கடல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

மீன்வளத் துறையினை நவீனப் படுத்துவதற்கும்; கடல்பொருள் ஏற்றுமதியில் தமிழ்நாட்டினை முதன்மை மாநிலமாக ஆக்கிடவும்; எனது தலைமையிலான அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. எம்.ஜி.ஆர். 1977ம் ஆண்டு, இந்தியாவின் இரண்டாவது மீன்வளக் கல்லூரியை தூத்துக்குடியில் நிறுவினார்.

தமிழ்நாட்டில் மீன்வளத்தைப் பெருக்குவதில் பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளை எடுத்து வரும் வேளையில், அதற்குத் தேவையான கல்வி அறிவைப் பெருக்குவதற்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என எனது தலைமையிலான அரசு முடிவு எடுத்துள்ளது.

இந்த அடிப்படையில், மீன்வளத்திற்கென, “மீன்வளப் பல்கலைக்கழகம்” ஒன்றை நிறுவ எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாகப்பட்டினம் மாவட்டம் 188 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது. மீன்பிடித்தல், உலர் மீன் உற்பத்தி மற்றும் இறால் வளர்ப்பு ஆகியவை இம்மாவட்டத்தின் முக்கியமான பொருளாதார நடவடிக்கைகள் ஆகும். இம்மாவட்டத்தில் 9,000 மீன்பிடிக் கலன்கள் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளன. நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகம் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, மீன்வளப் பல்கலைக் கழகம் அமைப்பதற்கு நாகப்பட்டினம் மிகவும் உகந்த இடமாக உள்ளதால், இந்த மீன்வளப் பல்கலைக்கழகம் நாகப்பட்டினத்தில் நிறுவப்படும்.

நாகப்பட்டினம் தாலுகாவில் பனங்குடி மற்றும் நாகூர் கிராமங்களில் 85 ஏக்கர் நிலப்பரப்பில், சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இந்த மீன்வளப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

புதிதாக அமைக்கப்படவுள்ள இந்தப் பல்கலைக்கழகத்தில், இறால் வளர்ப்பு, கெண்டை மீன் வளர்ப்பு, வண்ண மீன் வளர்ப்பு, மீன் பதப்படுத்துதல் மற்றும் மீன் மதிப்பு கூட்டியப் பொருட்கள் உற்பத்தி, மீன்பிடி படகு மற்றும் இயந்திர பராமரிப்பு, கடலாள் பயிற்சி மற்றும் நீர்வழிப் பயிற்சி ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டங்கள் மற்றும் பட்டயங்கள் வழங்கப்படும்.

இந்தப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பிரிவுகளில் பயிற்சி பெறும் நபர்கள், உள்நாடு மற்றும் உலக அளவில் வேலை வாய்ப்பு பெறவும் இது வழி வகுக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...