|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 October, 2011

10 மாநகராட்சிகளிலும் அ.தி.மு.க., அமோக வெற்றி!


தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சிகளிலும் அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. அனைத்து மாநகராட்சிகளிலும் தி.மு.க., இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது; மிகக் குறைவான ஓட்டுகளை பெற்ற தே.மு.தி.க.,வின், "டிபாசிட்' காலியாகியுள்ளது.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர், திருநெல்வேலி, திருப்பூர், தூத்துக்குடி, சேலம், ஈரோடு ஆகிய 10 மாநகராட்சிகளுக்கும் கடந்த 17ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. இதுவரை நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த கட்சிகள், இந்த தேர்தலில் தனித்தே களமிறங்கின. மாநிலத்தின் இதயப் பகுதிகளாக விளங்கும் இந்த மாநகரங்களில், மேயர் பதவியைப் பிடிக்க பலமுனைப் போட்டி ஏற்பட்டது.அ.தி.மு.க., - தி.மு.க., - காங்., - ம.தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட பிரதான கட்சிகள் தனித்தும், தே.மு.தி.க., - மார்க்சிஸ்ட் கூட்டணி அமைத்தும் தேர்தலை சந்தித்தன. சட்டசபைத் தேர்தலின் போது, அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த தே.மு.தி.க., தனித்து களமிறங்கியதால், அ.தி.மு.க.,வின் வெற்றி வாய்ப்பில் பாதிப்பு ஏற்படுமா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் எழுந்தது.

இந்த சந்தேகத்தை தவிடுபொடியாக்கும் வகையில், அனைத்து மாநகராட்சிகளிலும் அ.தி.மு.க., அபார வெற்றி பெற்றுள்ளது. எம்.ஜி.ஆர்., ஆட்சிக் காலத்திலும், தி.மு.க.,வே வெற்றி பெற்று வந்த சென்னை மாநகராட்சியையும் முதன்முறையாக அ.தி.மு.க., கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.பத்து மாநகராட்சிகளிலும் அ.தி.மு.க., - தி.மு.க., இடையே நேரடி போட்டி நிலவிய நிலையில், அனைத்திலும் தி.மு.க., இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது. இருப்பினும், தி.மு.க., வேட்பாளர்களை விட, அ.தி.மு.க., வேட்பாளர்கள் கணிசமான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தி.மு.க.,வை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.,வுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அனைத்து மாநகராட்சிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. ஆனால், அனைத்து மாநகராட்சிகளிலும் காங்கிரஸ் குறைந்த அளவே ஓட்டுகளைப் பெற்று, "டிபாசிட்'டை பறிகொடுத்தது.

அதேபோல், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து, தனித்துப் போட்டியிட்ட தே.மு.தி.க.,வும் பெரும்பாலான மாநகராட்சிகளில், "டிபாசிட்'டை பறிகொடுத்தது. மாநகராட்சி மேயர் பதவிக்காக களமிறங்கிய பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளும் குறைவான ஓட்டுகளைப் பெற்று பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளன.இதில், தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்ட ம.தி.மு.க., வேட்பாளர் பாத்திமா 29,336 ஓட்டுகளை பெற்று மூன்றாமிடத்தைப் பெற்று, "டிபாசிட்' பெற்றார். இதர மாநகராட்சிகளில் ம.தி.மு.க., குறைவான ஓட்டுகளைப் பெற்று பின்தங்கியது.

அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற நான்கு மாதத்தில், அதிரடியாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதும், மாநிலத்தில் ஆளுங்கட்சியாக உள்ள கட்சி, உள்ளாட்சியிலும் வெற்றி பெற்றால் பெரும்பாலான திட்டங்கள் கிடைக்கும் என்ற வாக்காளர்களின் நம்பிக்கையும் அ.தி.மு.க.,வுக்கு பெரும் வெற்றியைக் கொடுத்துள்ளது.மேலும் இந்த வெற்றியை தக்கவைக்கும் வகையில், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய தலையாய பொறுப்பு ஆளுங்கட்சிக்கு உள்ளது. பதவிக்கு வந்தவுடன் மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை மறந்து, படாடோபத்தில் இறங்கக்கூடாது என்ற படிப்பினையையும் இந்த தேர்தல் வெளிப்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...