லோக்பால் மசோதாவை கொண்டு வரத் தவறிய காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடாதீர்கள்' என, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே,
"லோக்பால் விசாரணை வரம்பிற்குள் பிரதமரையும் கொண்டு வர உதவும், தங்களது ஜன்
லோக்பால் மசோதாவை மத்திய அரசு ஏற்க வேண்டும்' என, வலியுறுத்தி உண்ணாவிரதம்
இருந்தார்.இதையடுத்து, ஹசாரேயின் ஜன் லோக்பால் மசோதா அம்சங்களை,
பார்லிமென்ட் நிலைக்குழு ஆய்வு செய்யும் என, அறிவிக்கப்பட்டது. இதனால்,
அவர் தன் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார். இருப்பினும், ஜன் லோக்பால் மசோதா
கொண்டு வருவதற்கான அறிகுறி தென்படவில்லை.
கோபமடைந்த அன்னா ஹசாரே இந்த வார முற்பகுதியில், "ஜன் லோக்பால் மசோதாவை
கொண்டு வர மத்திய அரசு தவறினால், ஹிசார் லோக்சபா இடைத்தேர்தல் மற்றும்
அடுத்த ஆண்டு நடக்கும் ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரசை
தோற்கடியுங்கள்' என, வாக்காளர்களிடம் பிரசாரம் செய்வேன்' என, தெரிவித்தார்.
இதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அவரின் பிரசாரம் துவங்க உள்ளது.
அரியானா மாநிலம் ஹிசார் லோக்சபா தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தத் தொகுதிக்கு இன்று செல்லும் ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த்
கெஜ்ரிவால், கிரண் பேடி, மனிஷ் சிசோடியா, கோபால் ராய் நவீன் ஜிண்டால்
ஆகியோர், வரும் 10ம் தேதி வரை அங்கு தங்கியிருக்கின்றனர். அப்போது,
காங்கிரசுக்கு எதிராக பிரசாரமும் செய்கின்றனர். அத்துடன், "ஊழல் அரசாங்கம்'
என்ற தலைப்பில், ஹசாரே பேசிய வீடியோவும் ஆங்காங்கே திரையிடப்படுகிறது.
அதில், "ஜன் லோக்பால் மசோதாவை கொண்டு வர தவறிவிட்ட காங்கிரசுக்கு ஓட்டு
போடாதீர்கள்' என, பொதுமக்களை ஹசாரே கேட்டுக் கொள்ளும் காட்சி இடம்
பெற்றுள்ளது. 10 நிமிடம் இந்த "சிடி' ஓடக்கூடியது.அரவிந்த் கெஜ்ரிவால் இது
குறித்து குறிப்பிடுகையில், "காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஓட்டு போடவில்லை
என்றால், ஜன் லோக்பால் மசோதா கொண்டு வராததால் தோற்கடிக்கப்பட்டோம் என்பதை
அந்தக் கட்சி உணரும்' என்றார்.
"குழந்தைத் தனமாக நடக்காதீங்க': ""என்னை விட வயதில் இளையவரான
நீங்கள் குழந்தைத் தனமாக நடந்து கொள்ளக்கூடாது,'' என அன்னா ஹசாரேவை, பால்
தாக்கரே எச்சரித்துள்ளார்.அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு போராட்டம்
குறித்து பேசிய பால் தாக்கரே, 85, "ஊழலுக்கு எதிராக ஹசாரே போராட்டம்
நடத்துவது வேடிக்கையானது. இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க முடியாது. ஏனென்றால்,
பெரிய மீன்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளன. இந்த மீன்களைப் பிடிக்க அன்னா
ஹசாரே வலை வீசினால், வலை தான் கிழியும். பெரிய மீன்கள் தப்பி ஓடி விடும்'
என்றார்.இது பற்றி ஹசாரேவிடம், 74, கேட்டதற்கு, "தாக்கரேவுக்கு வயசாகி
விட்டது. அவர் அப்படித் தான் பேசுவார்' என்றார். ஹசாரேவின் இந்த பதிலால்
கோபமடைந்த பால் தாக்கரே, "என்னை விட உங்களுக்கு வயது குறைவாக இருப்பதற்காக,
குழந்தைத் தனமாகச் செயல்படக்கூடாது. நாங்கள் காந்தியவாதிகள் கிடையாது.
தேவையில்லாமல் விரோதத்தை தூண்டாதீர்கள்' என எச்சரித்துள்ளார்.
மோகன் பாகவத் ஆர்.எஸ்.எஸ்., தலைவர்: சமீபத்தில் ஊழலுக்கு
எதிராக நடந்த போராட்டங்கள் மற்றும் இயக்கங்களில் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள்
அதிக அளவில் பங்கேற்றனர். சமூகத்தின் மீது கொண்ட அக்கறை காரணமாக அவர்கள்
இத்தகைய போராட்டங்களில் கலந்து கொண்டனர். தனது கோரிக்கைகளுக்கு
பார்லிமென்ட் அடிபணிய வேண்டும் என, அன்னா ஹசாரே நினைத்தார். அது
நடக்கவில்லை.
No comments:
Post a Comment