|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 October, 2011

காணாமல் போன பாரம்பரிய விளையாட்டு!


வீதி முளைத்து வரும் "வீடியோ கேம்ஸ்' விளையாட்டுக்களால், உடல் இளைக்க விளையாடும் விளையாட்டுகள் மாயமாகிவிட்டன.

மாலை பள்ளி விட்டு வீட்டுக்கு வந்தவுடன் பறந்து போய் மூலையில் விழும் புத்தகப்பை. ஆசை, ஆசையாய் அம்மா வைத்த பருப்பு குழம்பு சாதத்தை சாப்பிட்டு, சட்டையை சாட்டையாய் கழற்றி வீசி, "அம்மா விளையாட போய்ட்டு வரேன்.' இதுதான் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் வரை கிராமங்களிலும், நகரங்களிலும் இருந்த வழக்கம். வியர்க்க, விறுவிறுக்க விளையாடி விட்டு, மறுபடியும் சாப்பிட்டு விட்டு, வீசிய புத்தகப்பையை தேடி எடுத்து, இரவு 8.30 மணிக்கு மேல் கண்கள் சொருக, அப்பா அடிப்பாரோ? என்று அவரை ஓரக்கண்ணால் பார்த்து, பார்த்து கண்களை மூட, அவர் அசந்த நேரத்தில் தலைக்கு மெத்தையாக புத்தகப்பையை வைத்து இனிமையாய் தூங்கிய காலம் அன்று.

முப்போகத்தை பிரிக்கும் காலம் போன்று அன்று விளையாட்டையும், பருவ காலங்களாக பிரித்திருந்தனர். பள்ளி காலங்களில், பனை மட்டையால் விளையாடும் ஹாக்கியும், பனம்பழத்தை தூக்கி போட்டு விளையாடும் கால்பந்தும், அவ்வப்போது தொட்டுக்கொள்ளும் கிரிக்கெட்டும் அன்றைய விளையாட்டு. இவை போக காலாண்டு, அரையாண்டு, ஆண்டிறுதி தேர்வு விடுமுறையில் விளையாடும் விளையாட்டுக்கள் பருவ விளையாட்டுக்கள். கோலி, பம்பரம், கிட்டிப்புலி, எறிபந்து, குழி விளையாட்டும்... தோழிகளுடன் பல்லாங்குழி, தாயம், நொண்டி விளையாடியது இன்றும் நினைவில் நீங்காதவை. இன்பம் பொங்க பேச தூண்டும் மலரும் நினைவுகள். 

ஆனால், இன்றோ... சிறுவர்கள் பம்பரம், கோலி குண்டை ஏட்டளவில் மட்டுமே பார்த்து வருகின்றனர். மாலை முடிந்ததும், அம்மா அலமாரியில் 20 ரூபாய் எடுத்துக்கிட்டேன், விளையாடி விட்டு வருகிறேன், என்று சொல்லிவிட்டு செல்லும் சிறுவன் நேராக போவது, "வீடியோ கேம்ஸ்' கடைக்கு. ஒரு கம்ப்யூட்டருக்கு மூன்று முதல் நான்கு மாணவர்கள் வரை இடித்துக்கொண்டு இஷ்டத்துக்கு விளையாடுகின்றனர். பற்றாக்குறைக்கு அவ்வப்போது உடலை கெடுக்கும் நொறுக்கு தீனிகள். வீட்டுக்கு வந்தால் பசியும் எடுக்காது, படிக்க மனமும் இருக்காது. விளைவு 20 வயதில் மாரடைப்பு, 40 வயதில் முடக்கம். 60 வயது வரை இருந்தால் நீண்ட... ஆயுள் என்ற பட்டத்தோடு வாழ்க்கை சூன்யமாகிவிடுகிறது. இதை தவிர்க்க, "இனியோரு விதி செய்வோம்... ஓடி விளையாடு பாப்பா... நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா...' என்ற பாரதியின் வரிகளுக்கு உயிர் கொடுப்போம்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...