|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 October, 2011

இந்திய எதிர்ப்பையும் மீறி காமன்வெல்த்!


காமன்வெல்த் கூட்டமைப்பில் உள்ள பெரும்பாலான நாடுகள், அந்த அமைப்பில் மனித உரிமைகள் தொடர்பான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற பரிந்துரைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. குறிப்பிட்ட சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளா விடில், பிரிட்டன் பல நாடுகளுக்கு அளித்து வரும் தனது நிதியுதவியை நிறுத்தப் போவதாக எச்சரித்து உள்ளது.ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில், காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டம், கடந்த 28ம் தேதி முதல் நேற்று வரை நடந்தது.

நிபுணர்கள் குழு: காமன்வெல்த் அமைப்பின் நோக்கங்களை நிறைவேற்றும் வகையில், காலத்திற்கேற்ற சீர்திருத்தங்களை அந்த அமைப்பு மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக, 11 பேர் கொண்ட நிபுணர்கள் குழு, 2009ம் ஆண்டு நவம்பரில், டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் நியமிக்கப்பட்டது.

இந்தியா எதிர்ப்பு: இக்குழுவின் பரிந்துரைகளில், காமன்வெல்த் நாடுகளுக்கு என தனியாக ஒரு மனித உரிமைகள் கமிஷனர் நியமிக்கப்பட வேண்டும் என்பதும் ஒன்று. இலங்கையில் 2009ல் நடந்த இறுதிக்கட்டப் போரின் போது இரு தரப்பினரும் நிகழ்த்திய மனித உரிமை மீறல்கள் குறித்த புகார்கள் வெளிப்படத் துவங்கியதையடுத்து, கமிஷனர் நியமனம் அவசியம் என காமன்வெல்த் அமைப்பு கருதியது.ஆனால், இதுகுறித்து நாடுகளிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. குறிப்பாக, தென் ஆப்ரிக்கா, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் கமிஷனர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

கமிஷனர் தேவை: மலேசிய முன்னாள் பிரதமரும், நிபுணர்கள் குழு உறுப்பினருமான அப்துல்லா அகமது படாவி, இது குறித்து நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், "கமிஷனர், ஒரு போலீஸ் அதிகாரியாகச் செயல்பட மாட்டார்; அவருடைய நடவடிக்கைகளும் கடுமையாக இருக்காது. காமன்வெல்த் நாடுகளின் அமைச்சர்கள் நடவடிக்கை குழு மற்றும் பொதுச் செயலர் ஆகியோரின் நடவடிக்கைகளில் இயல்பாக ஏற்படும் விடுதல்களை நிரப்பவே இந்த பதவி' என்றார்.

106 பரிந்துரைகள்: மனித உரிமைகள், எச்.ஐ.வி., ஒழிப்பு, பெண்களுக்கு அதிகாரமளித்தல், வேலையில்லா இளைஞர்கள் விவகாரம், பருவநிலை மாற்றம் ஆகிய பிரச்னைகளை காமன்வெல்த் நாடுகள் எதிர்கொள்ளும் வகையில், 106 பரிந்துரைகளை நிபுணர் குழு நேற்று முன்தினம் அளித்தது. இந்த பரிந்துரைகளை வெளிப்படையாக அறிவிக்க, காமன்வெல்த் அமைப்பு அனுமதியளிக்கவில்லை.ஒப்புதல்: இந்நிலையில் நேற்று நடந்த இறுதிக் கூட்டத்தில், மனித உரிமைகள் கமிஷனர் நியமனத்திற்கு, பெரும்பாலான நாடுகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்டு கூறுகையில், "இந்த பரிந்துரைகளை ஒப்புக் கொண்டதன் மூலம் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் காமன்வெல்த் செயல்படும் என்பதை நாம் உறுதி செய்துள்ளோம்' என்றார்.
பருவநிலை மாற்றம் தொடர்பாக, சிறிய தீவு நாடுகளுக்கு உதவுவதாக காமன்வெல்த் உறுதியளித்துள்ளது. அந்த அமைப்பில் பாதிக்கு மேற்பட்ட உறுப்பு நாடுகள் தீவுகளே.இலங்கை விவகாரம் தவிர, குழந்தைத் திருமணம் மற்றும் எச்.ஐ.வி., ஆகிய விவகாரங்களில் இக்கூட்டம் தோல்வியைத் தழுவியுள்ளது.இந்த அமைப்பில் உள்ள 20 நாடுகளில் இன்னும் குழந்தைத் திருமணம் நடைமுறையில் உள்ளது. அவற்றிலும், 12 நாடுகளில் அதிகளவில் உள்ளது. அதேபோல், உலகில் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டோரில் 60 சதவீதம் பேர் காமன்வெல்த் நாடுகளில் உள்ளனர்.

காமன்வெல்த் நாடுகள் 54ல், 41 நாடுகள் ஓரினச் சேர்க்கையை சட்ட விரோதமாகவே இன்னும் வைத்துள்ளன. பிரிட்டனின் நிதியுதவி பெறும் நாடுகள், மனித உரிமைகள், ஓரினச் சேர்க்கை தடை உள்ளிட்ட சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளவில்லையெனில், இனி அந்த உதவியைப் பெற முடியாது என, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் எச்சரித்துள்ளார். பொதுச் செயலராக தொடர்கிறார் சர்மா: காமன்வெல்த் கூட்டமைப்பின் பொதுச் செயலராக கமலேஷ் சர்மா, 70, உகாண்டாவில் 2007ல் நடந்த கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு ஆண்டு காலம் கொண்ட இப்பதவிக்கு அவரே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதன்படி, அவரது இரண்டாவது பதவிக் காலம், 2012, ஏப்ரல் மாதம் துவங்குகிறது.

இலங்கை விவகாரத்தில் தோல்வி:மனித உரிமைகள் கமிஷனர் நியமனம் குறித்த காமன்வெல்த் கூட்டமைப்பின் ஒப்புதல் என்பது பெயரளவில் தான் என, நிபுணர்கள் கருதுகின்றனர். குறிப்பாக இந்த கூட்டம், இலங்கை விவகாரத்தில் தோல்வியையே தழுவியுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.வரும் 2013ல் இலங்கையில் காமன்வெல்த் கூட்டம் நடந்தால், அதில் பங்கேற்க முடியாது என கனடா தனது எதிர்ப்பை பதிவு செய்த பின் கூட, பரவலான எதிர்ப்பு இலங்கைக்கு எதிராக காமன்வெல்த்தில் எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது."மனித உரிமைகள் தொடர்பான பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட கையோடு, 2013 கூட்டத்தை இலங்கையில் நடத்துவதற்கு ஒப்புதல் அளித்தது காமன்வெல்த் அமைப்பிற்கு அவமானமே' என, சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு கூறியுள்ளது. 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...