லோக்பால் மசோதா தொடர்பாக,சோனியா, ராகுல் தொகுதி உட்பட பல லோக்சபா தொகுதிகளில், அன்னா ஹசாரே அணியினர் நடத்திய கருத்துக் கணிப்பில், மசோதாவுக்கு ஆதரவாக ஏராளமானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.ஊழலை ஒழிக்க பலமான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என, வலியுறுத்தி வரும் அன்னா ஹசாரே அணியினர், தங்களின் கோரிக்கைக்கு மக்களிடம் ஆதரவு உள்ளது என்பதை நிரூபிப்பதற்காக, காங்., தலைவர் சோனியாவின் ரேபரேலி தொகுதி, ராகுலின் அமேதி தொகுதி உட்பட பல லோக்சபா தொகுதி மக்களிடம் கருத்துக் கணிப்பை நடத்தினர். இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில், மத்திய அரசு விரைவில், பலமான லோக்பால் மசோதாவை நிறைவேற்றா விட்டால், தங்களின் தொகுதியின் காங்., எம்.பி.,க்கு அடுத்த முறை ஓட்டு போடுவதில்லை என, பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அன்னா ஹசாரே அணியைச் சேர்ந்த மணீஷ் சிசோடியா கூறியதாவது: நாடு முழுவதும் பல லோக்சபா தொகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், பலமான லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என, மக்கள் பெருமளவு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஹசாரேயின் மசோதாவுக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா ஆதரவு தராவிட்டால், அவருக்கு அடுத்த முறை ஓட்டுப் போட மாட்டோம். அவரை எம்.பி.,யாகத் தேர்வு செய்ய மாட்டோம் என, அவரது தொகுதியைச் சேர்ந்த 99 சதவீத வாக்காளர்கள் கூறியுள்ளனர். ராகுலின் அமேதி தொகுதியிலும், இதேபோல், 98 சதவீதத்தினர், பலமான லோக்பால் மசோதாவுக்கு ஆதரவு தந்துள்ளனர்.இவ்வாறு சிசோடியா கூறினார்.பார்லிமென்டின் குளிர்காலக் கூட்டத் தொடர் விரைவில் துவங்க உள்ளது. இந்நிலையில், அன்னா ஹசாரே அணியினரின் இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment