|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 December, 2011

ரூ 686 கோடியே 28 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பசுமைத் திட்டம்


ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் தமிழ்நாடு பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்பு மற்றும் பசுமைத் திட்டத்தை ரூ 686 கோடியே 28 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்திட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாட்டின் வளம், காட்டின் வளத்தில் அமைந்துள்ளது என்பதையும், காடுகளை வளர்த்து கண்போல் காப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சி பெருகும் என்பதையும் உணர்ந்த  முதல்வர் ஜெயலலிதா, மனித சமுதாயம் உயிர் வாழ்வதற்கு மாசற்ற சுற்றுச்சூழலை ஏற்படுத்தித் தரும் வனங்கள் முறையாக பாதுகாக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.  வனப்பகுதிகளைச் சார்ந்துள்ள கிராம மக்களின் வளர்ந்து வரும் தேவைகளை நிறைவேற்றிடும் வகையிலும், தமிழகத்திலுள்ள வன வளத்தினை அதிகரிக்கும் வகையிலும்,  முதல்வர் ஜெயலலிதா அவர்களின் முந்தைய ஆட்சிக் காலத்தில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் உதவியுடன், 2005-2006 முதல் 2012-2013 முடிய செயல்படும் தமிழ்நாடு காடுவளர்ப்பு திட்டம் II என்ற   எட்டாண்டு திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு, தற்பொழுது செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இத் திட்டமானது  2012-13 ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது. 

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில்  “தமிழ்நாடு பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்பு மற்றும் பசுமைத் திட்டம்”  ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் நிதியுதவியுடன் 2011-12 முதல் 2018-2019 வரையிலான எட்டு ஆண்டுகளில் 686 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்திட ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். உயிரினங்கள் சூழ்நிலைக்கு தக்கவாறு செயல்படும் முறையினை மேம்படுத்தும் வகையிலும், தகுதியான மேலாண்மையால் பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்பினை பலப்படுத்தும் வகையிலும், வனப்பரப்பிற்கு வெளியே மரங்கள் நடப்படும். சுற்றுச் சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்கினை அடைதல், இசைவிணக்கமான பொருளாதார மேம்பாட்டினை அடைதல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோள்களாகக் கொண்டு செயல்படும் இத் திட்டத்தில், பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்பு, இயற்கை வளத்தை அதிகரித்தல், நிறுவனத் திறனை மேம்படுத்துதல், ஆலோசனை சேவைகள் ஆகியவை சிறப்பு அம்சங்களாகும். 

இத்  திட்டம் தமிழ்நாடு காடுவளர்ப்புத் திட்டம் பகுதி I மற்றும் பகுதி II ஆகிய திட்டங்கள் வாயிலாக செயல்படுத்தப்பட்ட வனப் பகுதிகள் நீங்கலாக, இதர வனப்பகுதிகளில்  2011-12 முதல் 2018-2019 வரையிலான எட்டு ஆண்டு காலத்திற்கு செயல்படுத்தப்படும்.  இத் திட்டத்தின் பணிகளை கண்காணிப்பதற்காக திட்ட மேலாண்மை பிரிவு ஒன்றினை ஏற்படுத்த,  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  மேலும், இத் திட்டம் சம்பந்தமாக, செயல்படுத்தப்பட  உள்ள பணிகள் குறித்து முடிவெடுக்க, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் ஓர் உயர்நிலை அதிகாரக் குழு ஏற்படுத்தப்படும்.   

ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமைத் திட்டத்தில் பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்பு திட்டத்திற்காக 93 கோடியே 46 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயும், இயற்கை வளத்தை அதிகரித்தலுக்கு 182 கோடியே 54 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும், நிறுவனத் திறனை மேம்படுத்துவதற்காக 260 கோடியே 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயும், ஆலோசனை சேவைகளுக்காக 6 கோடியே 93 லட்சத்து 37 ஆயிரம் ரூபாயும், இதர பணிகளுக்காக 143 கோடியே 30 லட்சத்து 58 ஆயிரம் ரூபாயும் ஆக மொத்தம் 686 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.  வன உயிரின மற்றும் உயிர்பன்மை பாதுகாப்பு பணிகள், சவால்கள் நிறைந்தவையாக உள்ளன. மக்கட் தொகை பெருக்கத்தாலும், தொழில் மயமாக்கலாலும், விலங்குகளின் இயற்கை வாழ்விடங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால்  உணவு , நீர் மற்றும் வாழ்விடம், ஆகியவற்றிற்காக பெரும்பாலும் வன விலங்குகள்  இடம் பெயர்ந்து, மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குள் நுழைவதால், மனிதர்கள் வனவிலங்குகளை எதிர்கொள்ளும் சூழ்நிலை உருவாகிறது.  இதனால் விலங்குகளின் வாழ்விடங்களை மேம்படுத்துவது, அவை விரும்பி உண்ணும் பயிர்களை காட்டுப் பகுதிகளிலேயே வளர்ப்பது, காடுகளின் எல்லை ஓரமாக தடைகளை அமைப்பது, கிராம மக்களின் திறனை மேம்படுத்துவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மனித உயிருக்கும், விவசாய பயிர்களுக்கும் உடமைகளுக்கும் விலங்குகளால் ஏற்படும் பாதிப்பிற்கு உடனடியாக இழப்பீடு வழங்குவது போன்ற பல்முனை அம்சங்களை உள்ளடக்கிய செயல்திட்டத்தினை அமல்படுத்த ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

இத்  திட்டத்தின் முதற்கட்டமாக, கோயம்புத்தூர் மாவட்டத்தில், யானைகள் தடுப்பு அகழிகள் அமைக்க 4 கோடியே 30 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ஒதுக்கி ஏற்கெனவே ஜெயலலிதா உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக, தருமபுரி, ஈரோடு, திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் யானைகள் தடுப்பு அகழிகள் அமைக்கவும் மற்றும் பல்வேறு பணிகளை நடைமுறைப்படுத்தவும், தருமபுரி மண்டலத்திறகு 2 கோடியே 20 லட்சத்து 59 ஆயிரம் ரூபாயும், ஈரோடு வன மண்டலத்திற்கு 2 கோடியே 14 லட்சத்து 12 ஆயிரம் ரூபாயும், திண்டுக்கல் வன மண்டலத்திற்கு 50 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயும், மற்றும் திருநெல்வேலி வன மண்டலத்திற்கு 34 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயும், ஆக மொத்தம் 5 கோடியே 19 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் வழங்க ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். வனத்துறையில், தமிழக அரசினால் மேற்கொள்ளப்படவிருக்கும் திட்டங்களினால் காடுகளின் பரப்பு அதிகமாகி, பசுமையான சூழ்நிலை உருவாக வழிவகுப்பதுடன், காலந்தோறும் பருவமழை தவறாது பெய்ய வழிவகுக்கும்.  வனவிலங்களுக்கு தேவைப்படும் நீர் மற்றும் உணவு வகைகள் அவைகள் வசிக்கும் இடங்களிலே உருவாக்குவதினால், விலங்குகள் இடம் பெயர்வது முற்றிலுமாக தடுக்கப்பட்டு, மனிதனுக்கும் விலங்களுக்குமான மோதல்கள் தவிர்க்கப்படும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...