நாகர்கோவில்:முல்லைபெரியாறு, மற்றும் நெய்யாறு இடதுகரை சானல் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டுமானால் நேசமணி கேட்ட பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க கட்சி சார்ப்பு இன்றி போராட வேண்டும் என நாகர்கோவிலில் நேசமணிதமிழர் பேரவை தலைவர் ஆல்பென்ஸ்நதானியேல் கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது;-சேரநாட்டின் ஒரு பகுதியான திருவிதாங்கூரில் தமிழ்பகுதியான தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரை, செங்கோட்டை, பீருமேடு, தேவிகுளம், சித்தூர் ஆகிய 9 பகுதிகளையும் தாய்தமிழகத்தோடு இணைக்க நேசமணி போராடினார்.
இதில் தேவிகுளம், பீருமேடு பகுதிகள் மதுரை நாயக்கர்களின் அதிகாரவரம்பிற்குள் 1889 வரை இருந்தது. எனவே மேற்படி பகுதிகள் திருவிதாங்கூருக்கு சொந்தமாக இருந்ததில்லை.பெரியார் நீர் தேக்கத் திட்டத்திற்காக பிரிட்டிஷ்-இந்திய நடுவண்அரசு செயலாளர் திருவிதாங்கூர் மன்னருக்காக ஆவணத்தில் கையழுத்து இட்டுள்ளார். 1889ல் இந்த ஒப்பந்தம் புதுபிக்கப்பட்டு, குத்தகை உரிமை கெடு நீட்டித்த வேளøயில் திருவிதாங்கூர் மன்னனுக்கு சாசனம் செய்யப்பட்டுள்ளது. எனவே இதற்கு முன்னால் இப்பகுதி தமிழகத்துடன் இருந்தது தெரிகிறது.பெரியாருறு நீர்தேக்கத்திற்கு 13 சதுரமைல்கள் தண்ணீர் கொள்ளளவும், 305 சதுர மைல்கள் தண்ணீர் பிடிப்புப்பகுதியும் உள்ளது. இப்பகுதிகள் சென்னை மாநிலத்திற்கு மிகவும் தேவையாகிறது. ஏனெனில் பெரியாறு நீர்தேக்கத்தால் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு லட்சத்து 90ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்களுக்கு நீர்பாசனவசதி கிடைக்கிறது. மேலும் பெரியகுளம் அருகே ஒரு நீர்மின்நிலைய திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது என நேசமணி பார்லியில் 1955 டிச.15ம் தேதி கூறியுள்ளார்.
பார்லியில் 9தாலுகாக்களுக்காகவும், பெரியாறு அணைக்காகவும் வாதாடியபோது, அனைத்து கேரள எம்.பி.,க்களும் எதிர்த்தனர். ஆனால் தமிழகத்தில் ஒரு எம்.பி., கூட ஆதரவு காட்டவில்லை.முல்லைபெரியாறு, மற்றும் நெய்யாறு இடது கரை சானல் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டுமானால் நேசமணி கேட்ட ஓன்பது தாலுகாக்களுக்கு உட்பட்ட தேவிகுளம், பீருமேடு, நெய்யாற்றின்கரை, சித்தூர், செங்கோட்டையில் பாதி ஆகிய நான்கரை தாலுகா பகுதிகளையும் தமிழகத்துடன் இணைக்க கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். அப்படியெனில் உயிர் பிரச்னையான தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment