திருச்சி தொழில் அதிபருக்கு பேஸ்புக்கில் பழக்கமான இளம்பெண் ஒருவர், அவரை பணம் கேட்டு மிரட்டினார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இளம்பெண்ணை கைது செய்தனர். கம்ப்யூட்டர் வந்த பிறகு உலகம் சுருங்கி விட்டது. அதுவும் இன்டர் நெட் இணைப்பு இருந்தால் உலகத்தை உள்ளங்கைக்கே கொண்டு வந்து விடலாம். இளைய தலைமுறையினர் எந்த தகவலை பெற வேண்டும் என்றாலும், புதிய விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றாலும் இன்டர் நெட்டை தான் பயன்படுத்துகிறார்கள். பல சமூக வலைதளங்களை இப்போது எல்லோரும் பயன்படுத்தத்தொடங்கி உள்ளனர். இதன் மூலம் பல நல்ல விஷயங்கள் நடந்தாலும் தவறான பாதையிலும் சிலர் செல்ல வழிவகை ஏற்பட்டு விடுகிறது. சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் ஒரு பெண் தொடர்புகளை ஏற்படுத்தி பலரை ஏமாற்றி பணம் பறித்த தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் முருகன் (வயது 30). இவர் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில் செய்துவருகிறார். இணையதள பிரியரான முருகன், பேஸ்புக்கில் தன்னுடைய முழு விபரங்களையும், தொழில் பற்றியும் பதிவு செய்துள்ளார். மேலும் பேஸ்புக்கில் இவருக்கு ஏராளமான டாக்டர்கள் மற்றும் தொழில்அதிபர்கள் நண்பர்களாக உள்ளனர்.
இந்த நிலையில் கரூர் ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த அபிநயா என்கிற அனுஷ்கா (வயது 23) பேஸ்புக்கில் முருகனை பற்றிய தகவல்களை அறிந்து இ.மெயில் மற்றும் செல்போன் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியும், பேஸ்புக்கில் நண்பராக ஆட் செய்து அறிமுகப்படுத்திக்கொண்டார்.
அப்போது அபிநயா தன்னை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை கல்லூரியில் படித்துவருவதாகவும், விடுதியிலே தங்கி கல்லூரிக்கு சென்று வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது தந்தை கரூர் பகுதியை சேர்ந்த பிரபல அரசியல்வாதி எனவும் தனக்கு ரூ.350 கோடிக்கு சொத்து இருப்பதாகவும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் கூறியுள்ளார்.
முதலில் அபிநயா, தன்னை ஒரு நபர் காதலித்து ஏமாற்றி விட்டதாகவும், அதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள இருப்பதாகவும் கூறி உள்ளார். இதனால் முருகன், அபிநயாவிற்கு அறிவுரைகள் கூறி அவரை சமாதானப்படுத்தினார். அதனைதொடர்ந்து முருகனும், அபிநயாவும் பேஸ்புக்கில் சாட் செய்தும், அவ்வப்போது செல்போனிலும் சகஜமாக பேசினர். இவர்களது பழக்கம் நாளுக்கு நாள் வளர்ந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகனை காதலிப்பதாகவும், தன்னை திருமணம் செய்துக்கொள்ளாவிட்டால் நமது பழக்கத்தை வெளி உலகிற்கு எடுத்துக்கூறி அசிங்கப்படுத்தி விடுவதாகவும், இல்லையென்றால் சொத்தில் பாதியை கொடுத்துவிட வேண்டும் என முருகனை, அபிநயா மிரட்டத்தொடங்கினார்.
பேஸ்புக்கில் சாதாரணமாக பழகியது இப்படி வில்லத்தனமாகி விட்டதே என பதறி போன முருகன் அவரிடம் பின்பு தொடர்பை துண்டித்தார். இதற்கிடையில் அபிநயா, முருகனின் தொழில்நிறுவனங்களுக்கு நேரில் சென்று முருகனை தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், தனக்கு மரியாதை தர வேண்டும் என அங்கு பணியில் இருப்பவர்களை மிரட்டி சென்று உள்ளார். மேலும் முருகனையும் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி தொடர்ந்து போனில் வற்புறுத்தினார்.
இதனால் பயந்துபோன முருகன் இது குறித்து கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
பேஸ்புக்கில் முருகனிடம் பழக்கத்தை ஏற்படுத்திய அபிநயா, அவரை மட்டுமல்லாமல் டாக்டர்கள், தொழில் அதிபர்களை ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்ததுள்ளது. அபிநயா தனது பேஸ்புக் அக்கவுண்டில் தான் பெரிய கோடீசுவரி என்றும் தனக்கு ரூ.350 கோடிக்கு சொத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் பலர் இவரிடம் ஆசையுடன் பழக்கத்தை ஏற்படுத்தி கடைசியில் பணத்தை இழந்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அபிநயாவின் முகவரி போலியானதும், அவர் மருத்துவகல்லூரி மாணவி இல்லை எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அபிநயாவை பிடிக்க போலீசார் வியூகம் அமைத்தனர். அவர் எந்த ஊரில் தங்கி இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் முருகன் மற்றும் அவரது நண்பர்களை வைத்து அபிநயாவை செல்போனில் தொடர்பு கொண்டு நைசாக பேசி திருச்சிக்கு வரவழைத்தனர்.
அப்போது அபிநயா திருச்சி வந்தார். அவரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். உடனடியாக அவரை திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண் 1ல் கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு இளங்கோவன் முன்னிலையில் அவரை ஆஜர்படுத்தி பெண்கள் சிறையில் அடைத்தனர். மேலும் போலீசார் அபிநயா குறித்த விபரங்களை சேகரித்தும், பேஸ்புக் மூலம் வேறுயாரிடமும் இதுபோன்று பணம் கேட்டு மிரட்டி உள்ளாரா? எனவும் விசாரித்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட அபிநயாவை திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண் 1ல் ஆஜர்படுத்துவதற்காக திருச்சி கோர்ட்டிற்கு நேற்று மதியம் அழைத்து வந்தனர். அப்போது கோர்ட் வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையம் அருகே அபிநயா கோர்ட்டுக்குள் வர மறுத்து அழுது புரண்டு அடம்பிடித்தார்.
No comments:
Post a Comment