தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்ற உலகப் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் உலக நாடுகளிடையே புதிய உடன்பாடு ஒன்று எட்டப்பட்ட நிலையில் முடிவுக்கு வந்துள்ளது. அடுத்த ஆண்டோடு முடிவடையும் கியோட்டோ மாநாட்டின் ஒப்பந்தத்தின் காலவரையறை, 2017 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. உலக பருவநிலை மாற்றத்திற்கான, 17 வது சர்வதேச மாநாடு மற்றும் கியோட்டோ மாநாட்டின், 7 வது தொடர் மாநாடு ஆகியவை தென்னாப்ரிக்காவின், டர்பன் நகரில், கடந்த நவம்பர் 28ம் தேதி முதல் டிசம்பர் 11ம் தேதிவரை நடைபெற்றன. உலகளவில் நாடுகள் வெளியிடும், கரியமில வாயுவின் அளவை குறைப்பதன் மூலம், உலக வெப்பமயமாதலை தணிப்பது தான் இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். 194 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இம்மாநாட்டில் இந்தியா சார்பில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கலந்து கொண்டார். இந்தியா, சீனா, ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா இடையே, கடந்த இருநாட்களாக காரசாரமான விவாதம் நடந்தது. இதனால் திட்டமிட்டபடி, 9ம் தேதி முடிய வேண்டிய மாநாடு, ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது.
சரித்திர முக்கியத்துவம் மாநாட்டின் இறுதியில் பேசிய, மாநாட்டுத் தலைவரும், தென்னாப்ரிக்காவின் வெளியுறவு அமைச்சருமான மைட் கோவானா மஷாபனே, "வரும் 2015க்குள் கார்பன் வெளியிட்டைக் குறைப்பதற்கான, சட்டப்பூர்வ முன்வரைவு தயாரிக்கப்படும். இந்த முன்வரைவு இறுதி செய்யப்பட்டு, 2020 முதல் அமல்படுத்தப்படும். இந்த முடிவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது' என்றார். வரும் 2015ல் தயாரிக்கப்படும் ஒப்பந்தத்தில், இந்தியா, அமெரிக்கா, சீனா கையெழுத்திடுவதாக ஒப்புக் கொண்டன. இந்த ஒப்பந்தம் பற்றி கருத்து வெளியிட்ட மாநாட்டின் தலைவர், "நாளைய தினத்தை காப்பற்றியிருக்கிறது இன்றைய தினம்" என்று கூறியுள்ளார். ஐ.நா. பருவநிலை மாநாட்டின் செயல் இயக்குநரான கிறிஸ்டியானா ஃபிகியுவர், இந்த ஒப்பந்தத்தை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா ஏற்றுக்கொள்ளும் இந்த ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன், இந்தியா மீது இவ்விவகாரத்தில் தேவையில்லாத நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன என்றார். எனினும் இதில், பிற நாடுகள் தங்கள் ஊக்கத்தைக் காண்பிக்கும் போது, நாங்களும் காண்பிப்போம். அதனால் அந்த ஒப்பந்தத்தை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம்' என்றார்.
பசுமை பருவ நிதி காடுகள் அழிக்கப்படுவதைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலும், பருவநிலை மாற்றத்தால் ஏற்படுகின்ற பாதிப்புகளை ஏழை நாடுகள் சமாளிக்க உதவுவதற்கென வழங்கப்படுகின்ற நிதியுதவி கைமாறுவதிலும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. ஏழை நாடுகள் தாங்கள் வெளியிடும், கார்பன் அளவைக் குறைப்பதன் மூலம் எதிர்கொள்ளும் பொருளாதார பிரச்னையைச் சமாளிக்க, அந்நாடுகளுக்கு நிதியுதவி வழங்கும் விதத்தில், "பசுமை பருவ நிதி' என்ற பெயரில், 100 பில்லியன் டாலர் கொண்ட, ஓர் நிதியமைப்பை இன்னும் ஓராண்டிற்குள் உருவாக்க வேண்டும் எனவும், முடிவு செய்யப்பட்டது.அதைவிட முக்கியமாய் தாம் வெளியிடக்கூடிய கரியமில வாயுவின் அளவைக் குறைக்க வேண்டும் என உலகின் எந்த ஒரு நாட்டையும் சட்டப்படி வலியுறுத்த முடியும் என்ற நிலை எதிர்காலத்தில் ஏற்படுவதற்குரிய ஒரு வாய்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment